Published:Updated:

நாகர்கோவில்: `இந்துக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க!’ - கனிமொழி

நாகர்கோவிலில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி
நாகர்கோவிலில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி

இட ஒதுக்கீடுக்காக குரல் கொடுத்து இந்துக்களுக்கு நல்லது செய்தவர் கலைஞர். நீங்கள் எப்படி எங்களை பிரிக்க முயற்சித்தாலும் முடியாது. நாங்கள் தமிழால் இணைந்தவர்கள் என்றார் கனிமொழி.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட தி.மு.க மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, "ஆளும் கட்சி எதிர்ப்பாக இருந்தாலும் சரி எந்த எதிர்ப்பு வந்தாலும் சரி, உதய சூரியன் வெளியில் வந்துவிட்டால் எல்லா எதிர்ப்புகளும் மாறிவிடும். சமீபத்தில் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் விஜயன் என்ற இளைஞர் எட்டு மாடுகளை பிடித்து வெற்றி பெற்றார். அந்த இளைஞருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்க காசை கொடுத்தார். அந்த காசை நம்பி வாங்கிய அந்த இளைஞர் அதை வீட்டில் வைத்துவிட்டு காயத்துக்கு மருந்திட ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார்.

அவரது அப்பா அதை சோதித்தபோது அதில் செம்பு அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதுதான் இந்த ஆட்சியின் உரைகல். இந்தியாவிலேயே தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம். ஸ்டாலின் எடப்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் போனபோது வேலை வாங்கி தாருங்கள் என அந்த தொகுதி இளைஞர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியை வழிநடத்துகிறார் ஸ்டாலின். அறிக்கை நாயகன் என ஸ்டாலினை முதல்வர் கூறுகிறார். அந்த அறிக்கைதான் இந்த ஆட்சிக்கு வழிகாட்டுகிறது. முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாயகன். அடிக்கல் நாட்டுவார் அல்லது அறிவிப்பு செய்துவிட்டு சென்றுவிடுவார்.

நாகர்கோவில் தி.மு.க பொதுக்கூட்டம்
நாகர்கோவில் தி.மு.க பொதுக்கூட்டம்

பேரிடர் காலங்களில், காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அதற்காக குழு அமைக்கப்படும் என்றார் முதல்வர். இன்று வரை நடக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது. முதல்வரிடம் கேட்டால் இங்கு புற்றுநோயே இல்லை என்கிறார். இங்குள்ள மக்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக கேரளா செல்லும் நிலை இருக்கிறது.

கன்னியாகுமரியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஏமாற்றப்பட்டார்கள், மிரட்டப்பட்டார்கள். அந்த பெண்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் அமைச்சர் போன்றோர் குற்றவாளிகளை காப்பாற்ற துடிதுடித்தார்கள். புகார் கூற வெளியில் வந்த பெண் மிரட்டப்பட்டார், அவரது சகோதரர் தாக்கப்பட்டார். தி.மு.க போராட்டத்தால் சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகும் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது. இப்போது சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்ட மூன்றுபேரில் ஒருவர் அ.தி.மு.க மாணவர் அணி நிர்வாகி. ஆமை வேகத்தில் இந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை பார்த்து கை அசைக்கும் கனிமொழி
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை பார்த்து கை அசைக்கும் கனிமொழி

விவசாயிகளின் அழுகுரலை கேட்க ஆட்சியில் இருப்பவர்கள் தயாராக இல்லை. கார்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை மட்டும் அடகு வைக்கவில்லை. ரேஷன் கடைகளில் நமக்கு கிடைக்கும் உணவை கிடைக்காமல் செய்யும் திட்டம் கொண்டு வருகிறார்கள். வெங்காயம், ராகி, உருளைகிழங்கு, பருப்பு வகைகளை அத்தியாவசிய உணவுப் பொருட்களில் இருந்து எடுத்துவிட்டார்கள். நீட் தேர்வை கொண்டுவந்து மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு கால் வைக்க முடியாத நிலை ஏற்படுத்திவிட்டார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என கேட்டார். தமிழ் மாணவர்களுக்கு என கேட்டால் மத்திய அரசு கொடுக்காது. நாங்கள்தான் இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். பெரும்பான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு அவர்கள் குரல் கொடுக்கவில்லை. இரண்டு சதவீதம் இருக்கும் மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கிறார்கள். இந்துக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க-தான். கலைஞர் அதற்கு அடுத்ததாக ஸ்டாலின் குரல்கொடுத்து வருகிறார். இட ஒதுக்கீடுக்காக குரல் கொடுத்து இந்துக்களுக்கு நல்லது செய்தவர் கலைஞர். நீங்கள் எப்படி எங்களை பிரிக்க முயற்சித்தாலும் முடியாது. நாங்கள் தமிழால் இணைந்தவர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்காக உழைக்கும் ஸ்டாலினின் ஆட்சியை உருவாக்குவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு