Published:Updated:

திருச்சி: `தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!’- கே.என்.நேரு

திருச்சி போராட்டம் - கே.என்.நேரு
திருச்சி போராட்டம் - கே.என்.நேரு

``தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இருக்கும் இடம் காரணமாக அந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால், அவர் அந்த இடத்தில் இருக்க முடியாது’’ - கே.என்.நேரு.

``தமிழக முதல்வரை டெல்லியில் நடக்கும் போராட்டத்தை ஆதரிக்க சொல்லுங்களேன் பார்ப்போம். அவர் அந்தப் பதவியில் நீடிப்பாரா என்று பார்ப்போம். மத்திய அரசு தலையாட்டினால் இவரும் சேர்ந்து ஆட்ட வேண்டும். அதுதான் அவர்களது விதி" என்று விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

போராட்டத்தில் கே.என்.நேரு
போராட்டத்தில் கே.என்.நேரு

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும்வரை, தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதையடுத்து அந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலை அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டன. தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றார்.

பதாகைகளுடன் அமைதிகாத்த விவசாயிகள்! - மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நாடு முழுவதும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மத்திய அரசு அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். அதுவரை இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.

கே.என். நேரு
கே.என். நேரு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இருக்கும் இடம் காரணமாக, அந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால், அவர் அந்த இடத்தில் இருக்க முடியாது. மத்திய அரசு தலையாட்டினால் அவரும் சேர்ந்து தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்படிச் செய்யவில்லையென்றால் அவர் பதவியில் இருப்பாரா என்பது சந்தேகம்தான்" என்று அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 500-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்தப் போராட்டத்தால் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு