Published:Updated:

“ஆபரேஷன் அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... உடன்பிறப்புகளுக்கும்தான்!”

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி

- தி.மு.க-வின் கொங்கு ஸ்கெட்ச்

“ஆபரேஷன் அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... உடன்பிறப்புகளுக்கும்தான்!”

- தி.மு.க-வின் கொங்கு ஸ்கெட்ச்

Published:Updated:
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி

‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சரோஜாவுக்கு எதிரான விவகாரங்களைத் தோண்டியெடுத்து செக் வைப்பது... உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தி, தனது அஸ்திவாரத்தைப் பலப்படுத்த திட்டமிடுகிறது தி.மு.க தலைமை. அதே நேரத்தில், அ.தி.மு.க-விலிருந்து நிர்வாகிகளை இழுப்பதன் மூலம் தி.மு.க-விலிருக்கும் பழைய நிர்வாகிகளுக்கும் செக் வைக்கிறது கட்சித் தலைமை’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

‘‘நீங்க ஓட்டே போட மாட்றீங்க. இங்க வரும்போது வயிறு எரியுது. வெக்கமா இருக்குது எங்களுக்கு.’’ - கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடமிருந்து வெடித்த வார்த்தைகள் இவை. இது ஏதோ அன்பரசனின் மனநிலை மட்டுமல்ல... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தாலும், கொங்கு மண்டலத்தில் படுதோல்வி அடைந்திருப்பதால், தி.மு.க நிர்வாகிகள் பலரும் இப்படிக் கொந்தளிப்பான மனநிலையில்தான் இருக்கிறார்கள். நேற்று, இன்று அல்ல... எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கொங்கு மண்டலம் அ.தி.மு.க கோட்டையாகிப்போனதால், தி.மு.க-வை இங்கே வளர்த்தெடுக்க கருணாநிதி காலத்திலிருந்து எவ்வளவோ முயற்சிகள் எடுத்துப் பார்த்தார்கள். எதுவுமே கைகொடுக்கவில்லை. இந்தநிலையில்தான் கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தற்போது மு.க.ஸ்டாலின் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

 “ஆபரேஷன் அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... உடன்பிறப்புகளுக்கும்தான்!”

ஐந்து மாவட்டங்களில் அஸ்திவாரம்!

அ.தி.மு.க கோட்டையைக் கலகலக்க வைப்பதற்காக தி.மு.க எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி நம்மிடம் விவரித்தார்கள் தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர். ‘‘கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி, வேலுமணி இருவர்தான் மு.க.ஸ்டாலினின் முதல் குறி. இவர்களுக்கு செக் வைத்தாலே ஐந்து மாவட்டங்களில் தி.மு.க பலமான அஸ்திவாரத்தைப் போட்டுவிட முடியும். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலில் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்துவோம்’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னதுபோலவே ரெய்டு நடத்தப்பட்டது. இதன் மூலம் கோவை அ.தி.மு.க-வைக் கலகலக்கவைத்திருக்கிறோம். கொடநாடு வழக்கைவைத்து எடப்பாடி பழனிசாமிக்குக் குடைச்சல் கொடுக்கப்படுகிறது. தவிர, எடப்பாடியின் நிழலாக வலம்வரும் இளங்கோவன், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் மீதுள்ள புகார்களை விசாரித்து அதிரடி நடவடிக்கை எடுத்து சேலத்தில் அ.தி.மு.க-வின் கட்டமைப்பை உடைக்கவும் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

‘வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தது... ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையே?’ என்ற கேள்வி எழலாம். இப்போது இருக்கும் ஆதாரங்களைவைத்து வேலுமணியை உடனடியாகக் கைது செய்யலாம்தான்... ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக என்று அவர்கள் அரசியல் செய்வார்கள். அதனால், ‘சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிவிடக் கூடாது’ என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒன்பதாவதாக ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கிறார். அந்த வழக்கில் விசாரணை நடத்தும் சி.பி.ஐ-க்கு உதவ சி.பி.சி.ஐ.டி எஸ்.பி முத்தரசியை நீதிமன்றமே நியமித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரசியல் புள்ளிகள் ஒருவரையும் விட மாட்டோம். மற்றொரு கொங்கு மண்டல அமைச்சரான தங்கமணி மீது நிலக்கரி ஊழல் கிளம்பியிருக்கிறது. ‘தங்கமணி மீதுதான் அடுத்த ரெய்டு’ என்று அ.தி.மு.க-வினர் நினைத்த நேரத்தில், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது, ராசிபுரத்தைச் சேர்ந்த குணசீலன் என்பவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் மோசடிப் புகார் அளித்திருக்கிறார். வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி, ஏமாற்றியதாகச் சொல்லப்படும் இந்த வழக்கில் சரோஜா மீது கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தியிருக்கிறார்கள் போலீஸார். விரைவில் அவர்மீது சட்ட நடவடிக்கை பாயும். இதன் மூலம், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க-வும் கதிகலங்கிப் போயிருக்கிறது’’ என்றவர்கள், இந்த நடவடிக்கைகளின் விளைவுகளைப் பற்றியும் விவரித்தார்கள்...

 “ஆபரேஷன் அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... உடன்பிறப்புகளுக்கும்தான்!”

‘‘வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ரெய்டுகளால் தன்மீது ரெய்டு நடவடிக்கை பாயுமோ என்று முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கதிகலங்கிப் போயிருக்கிறார். அதனால்தான், கட்சிக்காரர்கள் யாரிடமும் சொல்லாமல் தன் மகனுடன் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனும், ‘கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு சட்டசபை மிகக் கண்ணியமாக நடத்தப்படுகிறது’ என தி.மு.க-வுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருந்தார். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான தனக்கு அ.தி.மு.க-வில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற மன வருத்தத்தில் இருந்துவரும் செங்கோட்டையனை, தி.மு.க-வுக்கு இழுப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஓரளவு பாசிட்டிவ் சிக்னல் கிடைத்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் செங்கோட்டையனின் பாராட்டுப் பத்திரம். உண்மையில் எடப்பாடி, வேலுமணி உள்ளிட்டோர்மீது ஏராளமான அ.தி.மு.க சீனியர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களும் எங்களுடன் பேசிவருகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் சிலரும் பேசிவருகிறார்கள். வழக்குகளுக்கு பயந்து பலர் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாகத் தொடரவும், சிலர் கட்சி மாறவும்கூட தயாராக இருக்கிறார்கள்’’ என்றார்கள்.

சரோஜா
சரோஜா

பழைய தி.மு.க நிர்வாகிகளுக்கும் செக்!

இன்னொரு புறம், ‘‘இந்த ஆபரேஷன் அ.தி.மு.க-வுக்கு மட்டும் இல்லை... தி.முக-வுக்கும்தான்’’ என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள் வேறு சில தி.மு.க நிர்வாகிகள். ‘‘கொங்கு மண்டல நிர்வாகிகளைக் கண்காணிக்க ஐபேக் நிறுவனத்திலுள்ள முக்கியமான சிலரைத் தேர்ந்தெடுத்து களமிறக்கியிருக்கிறார்கள். இந்தக் குழு சபரீசனின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகிறது. இந்தக் குழு அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில், விரைவில் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்.

மற்ற மாவட்டங்களைப்போல கொங்கு மண்டலத்தில் வலுவான நிர்வாகிகள் இல்லாதது தி.மு.க-வுக்கு மைனஸ். தற்போது வெள்ளகோவில் சாமிநாதன், ஈரோடு முத்துசாமி, இளித்துரை ராமசந்திரன் ஆகிய அமைச்சர்கள் இருந்தாலும், அவரவர் தொகுதி அளவுக்கு அவர்களின் செல்வாக்கு குறுகியிருக்கிறது. திருப்பூர், ஈரோட்டில் அமைச்சர்கள் இருந்தாலும், அங்கும் கோவையைப்போல ஒரு டஜன் கோஷ்டிகளாக உடைந்துகிடக்கிறது கட்சி.

கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கவுண்டர் – நாயுடு சமுதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், இரண்டு சமுதாய நிர்வாகிகளும் எதிரும் புதிருமாக அரசியல் செய்துவருகிறார்கள். அதனால், இந்த முறை கட்சிக்காகத் தீவிரமாக உழைப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் ஸ்லீப்பர் செல்கள் பலரும், கொங்கு தி.மு.க-வில் இருக்கிறார்கள். அதனால், கோவையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் தூக்கியடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதையெல்லாம் உற்று கவனித்துவரும் தலைமை, நிர்வாகிகள் மாற்றத்துடன் நிற்காமல், கொங்கு மண்டலத்தைச் சீர்ப்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜியைக் களமிறக்கியிருக்கிறது. கோவை விமான நிலையம் அருகே வீடு பார்த்திருக்கும் அவர், அங்கிருந்தபடியே கொங்கு மண்டலம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. தவிர, தலைமையிட பிரதிநிதியாக முதல்வரின் நம்பிக்கைக்குரிய இன்னொரு நபரையும் கொங்கு மண்டலப் பொறுப்பில் நியமிக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் இந்த கொங்கு ஆபரேஷன் சூடு பிடிக்கும்” என்றார்கள்.

தி.மு.க திட்டங்கள் பலிக்குமா என்பது போக போகத்தான் தெரியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism