Published:Updated:

“அ.தி.மு.க-விலும் பா.ஜ.க-விலும்தான் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது!”

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

கருத்துக்கணிப்புகளைவிட மக்களின் எதார்த்தமான கருத்தோட்டம் அவர்களுடைய கண்களில் மிளிர்வதை நான் செல்லும் இடமெல்லாம் நேரடியாகவே பார்க்கிறேன்.

“அ.தி.மு.க-விலும் பா.ஜ.க-விலும்தான் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது!”

கருத்துக்கணிப்புகளைவிட மக்களின் எதார்த்தமான கருத்தோட்டம் அவர்களுடைய கண்களில் மிளிர்வதை நான் செல்லும் இடமெல்லாம் நேரடியாகவே பார்க்கிறேன்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

திருவண்ணாமலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் இருந்த நேரத்தில்தான், அந்தத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. அங்கு தங்கியிருந்த ஸ்டாலினின் பிரசார வாகனத்தையும் சோதனையிட அதிகாரிகள் முயன்றனர். இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில் அன்றைய பிரசாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஸ்டாலினைச் சந்தித்தோம். ‘`இப்படி ரெய்டுகள் நடத்தியே நமக்கு அனுதாபத்தை ஏற்படுத்திக்கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது’’ என்றபடி வரவேற்றார் ஸ்டாலின்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து, மிக நெருக்கடியான ஒரு சூழலில் தி.மு.க இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. ஆனால், ஸ்டாலினிடம் அந்த டென்ஷனைப் பார்க்க முடியவில்லை. அமைதியும் நிதானமுமாக அத்தனை கேள்விகளுக்கும் பதில் தந்தார்.

``கருணாநிதி இல்லாத சூழலில் நீங்கள் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. அவரின் வழிகாட்டுதல் இல்லாத இழப்பை உணர்கிறீர்களா?’’

‘`கலைஞர் இப்போது இல்லை என்பது மனதை வாட்டும் வருத்தமே. ஆனால், நான் அரசியல் பொது வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த நாள்தொட்டு, அவருடைய நிழலில், அறிவுரைகளில், வழிகாட்டுதலில் தொடர்ந்து வளர்ந்தவன். அவரது தனித்துவமான தலைமையில் தேர்தல்களைச் சந்தித்தவன். அத்தகைய விரிவான அனுபவத்தைக் கொண்டு, 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியைப் பெற்றது, நான் தமிழ்நாட்டில் வழிநடத்திய தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கலைஞர் எங்களுடன் இல்லை என்றாலும், அவர் இருந்திருந்தால் ஒவ்வொன்றையும் இப்படி இப்படிச் செய்திருப்பார் என்று எண்ணி எண்ணிப் பார்த்து எச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவரைப் பின்பற்றிச் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவே உள்ளுணர்வு எங்களை வழி நடத்துகிறது.’’

``முதலமைச்சர் வேட்பாளராக இதுதான் உங்களுடைய முதல் தேர்தல். தமிழகம் முழுக்க கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பயணம் செய்கிறீர்கள். அந்தப் பயணங்கள் உங்களுக்கு உணர்த்துவது என்ன?’’

‘`கடந்த சில மாதங்களாக மட்டுமல்ல - தி.மு.க எப்போதுமே மக்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இயக்கம், நானும் அப்படித்தான். இதுவரை நான் சென்ற இடங்களிலெல்லாம் கிடைத்த அமோக வரவேற்பு, ‘அ.தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்’ என்பதையே காட்டுகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களை வாட்டுகிறது. அந்த விலை உயர்வின் தொடர் விளைவாக, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால், தாய்மார்கள் கண்கலங்கி நிற்கிறார்கள். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் எல்லாம் வேறு மாநிலத்தவருக்குப் பறிபோய்க் கொண்டிருக் கின்றன. தமிழ் மொழியில் ஏன், ஆங்கிலத்தில்கூட போட்டித் தேர்வுகளை எழுத மத்திய பா.ஜ.க அரசிடம் தமிழக இளைஞர்கள் கெஞ்சிப் போராட வேண்டியுள்ளது. 5.7 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழ்நாட்டை மூழ்கடித்து தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது அ.தி.மு.க ஆட்சி. முதலமைச்சர் பழனிசாமிபோல் ஓர் ஊழல் முதலமைச்சர் இந்தியாவிலேயே வேறு யாரும் இல்லை என்ற அளவிற்கு கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் ஆட்சியை நடத்தும் அ.தி.மு.க ஆட்சி வீட்டிற்குச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது.’’

“அ.தி.மு.க-விலும் பா.ஜ.க-விலும்தான் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது!”

``அ.திமு.க., பா.ஜ.க மட்டுமன்றி அ.ம.மு.க., நாம் தமிழர் வரை எல்லாப் பக்கமிருந்தும் தி.மு.க-வுக்கு எதிரான பிரசாரம் கிளம்புகிறது. இதன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?’’

‘`தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரம், உரிமைகள் பா.ஜ.க-விற்கு அடிமையாகிவிடக் கூடாது என்று தி.மு.க நினைக்கிறது. அதற்கான செயல் திட்டம் வகுத்துப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் சொல்லும் கட்சிகளுக்கு எல்லாம் உள்நோக்கம் இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க-வின் மதவெறிக் கொள்கைகளை நிலைநிறுத்தப் பாடுபடும் அ.தி.மு.க-வின் எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்ற தந்திரத்திற்கு இரையாகி இவை போட்டியிடுகின்றன. தமிழக மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள். மாநிலத்தை அடிமையாக்கும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை மட்டுமல்ல, அதற்கு மறைமுகமாகத் துணைபோகும் கட்சிகளையும் துடைத்தெறிவார்கள்.’’

``பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க-வுக்குச் சாதகமான சூழல் இருப்பதை உணர்த்துகின்றன. தேர்தல் முடிவு குறித்து உங்கள் கணிப்பு என்ன?’’

‘`கருத்துக்கணிப்புகளைவிட மக்களின் எதார்த்தமான கருத்தோட்டம் அவர்களுடைய கண்களில் மிளிர்வதை நான் செல்லும் இடமெல்லாம் நேரடியாகவே பார்க்கிறேன். எங்கும் தி.மு.க ஆதரவு அலை வீசுகிறது. தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை மனமார்ந்த மகிழ்வுடன் மக்கள் வரவேற்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களைத் துரத்தி அடிக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறுவோம். மக்கள் விரும்பி வரவேற்று எதிர்பார்க்கும் தி.மு.க அரசு நிச்சயமாக அமையும்.’’

`` `கருணாநிதி இருந்திருந்தால் இப்படி நடக்குமா’ என உங்களின் எல்லாச் செயல்களையும் ஒப்பிடுவார்கள் அல்லவா, அதை சவாலாகப் பார்க்கிறீர்களா?’’

‘`ஒப்பிட்டுப் பார்ப்பது மனித இயல்பு. அதைக் குறையாகச் சொல்ல முடியாது. எனினும் எங்களைப் பொறுத்தவரை கலைஞரின் சிந்தனையையும் செயல் அணுகுமுறையினையும் நாங்கள் நன்கு அறிந்து பின்பற்றுவதால், எவ்வித சவாலும் எமக்கில்லை.’’

``தொகுதிப் பங்கீட்டில் தோழமைக் கட்சிகள் அனைத்துமே மனக்குறையோடு இருக்கின்றன. இவ்வளவு கறாராக இருந்திருக்க வேண்டுமா?’’

‘`களத்தின் வெற்றி வாய்ப்புகளைக் கவனத்தில் கொண்டு எங்கள் கட்சித் தரப்பிலும், தோழமைக் கட்சியினர் தரப்பிலும் ஆரோக்கியமான முறையில் ஆலோசனைகள் நடைபெற்று சுமுகமாகத் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. ஜனநாயக முறைப்படி எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசியே முடிவு செய்தோம். பிரசாரத்திலும் இணைந்து ஈடுபட்டு வெற்றிக்கோட்டை நெருங்கிக் கொண்டிருக் கிறோம். இந்த ஒற்றுமை இன்று நேற்று அல்ல, எங்களுக்குள் கூட்டணி உருவான நாளிலிருந்து நெருடல் ஏதுமின்றி நெருக்கமாகத் தொடர்கிறது. ஆகவே இங்கு கண்டிப்பும் இல்லை, கறார்த்தன்மையும் இல்லை. தோழமை எண்ணம் மட்டுமே!’’

``பெண்களுக்கான சொத்துரிமை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவந்த தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லையே? சிறுபான்மையினருக்கும் குறைவாகவே வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்களே?’’

‘`கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது போக தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் பெண்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெண் விடுதலை, மறுமலர்ச்சி, பெண்ணுரிமை தி.மு.க-வின் பிறப்புரிமை. இந்த உரிமையை நிலை நாட்ட, இன்றைய சமூகச் சூழலில் இன்னும் தூரம் கடக்க வேண்டியுள்ளது. கழகத்தின் மாநிலப் பொறுப்புகளிலிருந்து அனைத்து நிலைகளிலும், பெண்களுக்கான பொறுப்பு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அதுபோன்ற சமத்துவமான நிலை தேர்தல் களத்திலும் அமையும் வகையில், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தி.மு.க தொடர்ந்து குரல்கொடுக்கும்.’’

``சிறிய கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலும், இரட்டை இலைச் சின்னத்திலும் நிற்கச் சொல்வது ஜனநாயகமா என்ன?’’

‘`விரும்பியவர்களுக்கு மட்டுமே உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. யாரையும் தி.மு.க வற்புறுத்தவில்லை என்பதை, தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களைப் பார்த்தாலே தெரிந்துகொள்வீர்கள்.’’

``தி.மு.க-வின் மீது வைக்கப்படும் விமர்சனம், வாரிசு அரசியல். சாதாரண தொண்டனுக்குப் பெரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?’’

‘`முக்கால் நூற்றாண்டுக் கால இயக்கத்தில் தலைமுறை தலைமுறையாகக் கட்சிப் பணியாற்றுவதும், அதன் அடிப்படையில் ஒரு சில வாய்ப்புகள் வழங்கப்படுவதும் இயல்பானது. அதேநேரத்தில், தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலில் சாதாரண தொண்டர்களுக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன. ஏன், முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து ஒரு சாதாரண தொண்டர் சம்பத்குமாரைத்தான் எடப்பாடி தொகுதியில் நிறுத்தி யிருக்கிறோம். அ.தி.மு.க-வின் ஊழல் ஆட்சியையும், மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்திற்குச் செய்த துரோகத்தையும் மறைக்க ‘வாரிசு அரசியல்’ என்று திசை திருப்புகிறார்கள். அ.தி.மு.க-விலும் பா.ஜ.க-விலும்தான் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது.’’

``அப்பாவாக உதயநிதியின் அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்தார். இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் பிரசாரம் செய்து வருகிறார். தீவிர கட்சிப் பணியில் ஈடுபட்டுவருகிறார். ஒவ்வொரு தி.மு.க தொண்டரும் எப்படி தேனீ போல் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவார்களோ, அவ்வாறு அவரும் பணியாற்றுகிறார் என்றே நான் கருதுகிறேன். அவருடைய பணி ஆர்வமும் தீவிர உழைப்பும், மக்கள் அவர்மீது காட்டும் அபிமானமும் கட்சியின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் நன்றாகப் பயன்படுவதாகவே அனைவரும் கருதுகின்றனர்.’’

``எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் - இருவரிடமும் பிடித்த விஷயங்கள் என்னென்ன?’’

‘`இருவரும் நடத்திய நான்காண்டு ஆட்சியில் இருவரிடமும் பிடித்த விஷயங்கள் என்று எனக்கோ, நடுநிலையாளர்களுக்கோ, ஏன்... அ.தி.மு.க-வின் ஒரு பிரிவினருக்கோகூட எதுவும் இருப் பதாகத் தெரியவில்லை. இருவரையும் பிடித்துள்ள மதவாத சக்தியைக் கால் ஊன்ற விடாமல் தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்.’’

``அரசுக்கு நேரடியாக ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன்... மின்வாரியம், போக்குவரத்துக் கழகம் போன்ற பெரும்பாலான அரசு நிறுவனங்களும் கடனில் தத்தளிக்கின்றன. இந்தச் சூழலில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டம் சாத்தியமா? நீங்கள் அறிவித்துள்ள இலவசங்களும் சாத்தியமா?’’

‘`7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் வாக்குறுதியை அளித்தபோதும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால், நிறைவேற்றிக் காட்டியது தி.மு.க அரசு. ‘வண்ணத் தொலைக்காட்சி எப்படி வழங்க முடியும்’ என்றார்கள். அதையும் வழங்கியது தி.மு.க அரசு. தி.மு.க எப்போதுமே நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளையே சொல்லும். ‘சொன்னதைச் செய்வோம், செய்வதையே சொல்வோம்.’ இதுதான் தி.மு.க-வின் முழக்கம். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாகச் செயல் படுத்தப்படும். ஒவ்வொரு இல்லத் தரசியின் வீடு தேடி மாதந்தோறும் 1,000 ரூபாய் வந்தே தீரும். அது மட்டுமன்றி கொரோனா நிவாரணத் தொகையான ரூ. 4,000 கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 அன்று வழங்கப்படும்.’’

``தொண்டர்களின் வியர்வையில் வளர்ந்த கட்சி தி.மு.க. அதை இப்போது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இயக்குகிறது என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில்?’’

‘`தி.மு.க எப்போதும் உடன் பிறப்புகளின் இயக்கம் என்பது உண்மைதான். தேனீக்கள்போல் உழைக்கும் தொண்டர்களைக் கொண்ட பேரியக்கம் இது. நேற்றும் இன்றும் நாளையும் தொண்டர்களால் இயக்கப் படுகின்ற இயக்கம். அவர்கள்தான் ஆணிவேர், ரத்தநாளம். அந்த ரத்தநாளத்திற்கு ஊட்டமளிக்கும் வகையில், வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆலோசகரை வைத்துள்ளோம், அவ்வளவுதான். ஏன், அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தேர்தல் ஆலோசகர்களை வைத்துக்கொள்ள வில்லையா? இல்லை, அவர்கள் கட்சிக்குத் தொண்டர்களே இல்லை என்று ஒப்புக் கொள்கிறார்களா?’’

“அ.தி.மு.க-விலும் பா.ஜ.க-விலும்தான் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது!”

``சசிகலாவின் அரசியல் விலகல் முடிவை எதிர்பார்த்தீர்களா? அவரின் விலகல் முடிவுக்கு ஏதேனும் அழுத்தம் காரணமாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?’’

‘`அ.தி.மு.க. எந்த வடிவில் வந்தாலும், யாருடன் இணைந்து வந்தாலும், விலகியோ அல்லது ஒதுங்கி இருந்தோ எதிர்த்தாலும், தி.மு.க.விடம் தோற்கும். ‘அ.தி.மு.க-விற்கு வாக்களிப்பது பா.ஜ.க-விற்கு வாக்களிப்பதற்குச் சமம்’ என மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். தமிழக உரிமைகளைக் காப்பாற்ற மக்கள் தி.மு.க பக்கம் ஒன்றுதிரண்டுவிட்டார்கள். ஆகவே நாங்கள் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. யார் விலகல் பற்றியும் ஆராய்ச்சி செய்யவில்லை.’’


``காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-வை எதிர்கொள்ளும் அளவுக்குத் தேசிய அளவில் வலிமையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?’’

‘`இன்றைக்கு டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைக்கூட குறைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை டம்மியாக்கும் சட்டத்தைக் கொண்டு வருகிறது பா.ஜ.க. அக்கட்சிக்கு அரசியல் சட்டத்தின்மீது நம்பிக்கை இல்லை. மக்களாட்சித் தத்துவத்தின் மீது ஈடுபாடு இல்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆகவே, மதவாத பா.ஜ.க-விற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒரு குடையின்கீழ் இணைக்கும் வல்லமை படைத்த ஒரே அகில இந்தியக் கட்சி, இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சிதான். அன்னை சோனியா காந்திக்குத்தான் அந்தத் தலைமைப் பண்பும் திறமையும் இருக்கின்றன.’’

``தமிழகத்தில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றாலும், இன்னும் மூன்றாண்டுகள் மத்தியில் மோடி அரசுதானே இருக்கும்?’’

‘`மத்திய, மாநில அரசுகள் அடங்கிய கூட்டாட்சித் தத்துவம் அரசியல் சட்டம் தந்துள்ள கொடை. அதன் அடிப்படையில், தி.மு.க கடந்த காலங்களில் செயல்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களிலும் அப்படியே செயல்படும். தமிழக உரிமைகள், தமிழக நலன்களைப் பாதுகாப்பதில் அமையப்போகும் தி.மு.க தலைமையிலான அரசு முன்கள வீரராக நின்று செயல்படும். எக்காரணத்தைக் கொண்டும் அ.தி.மு.க அரசுபோல் அடிமை அரசாக, பா.ஜ.க-வின் எடுபிடி அரசாக தி.மு.க ஆட்சி இருக்காது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநில உரிமைகளின் அடிப்படையில் செயலாற்றும். உரிமைக்குக் குரல் கொடுக்கும் அதேவேளையில், உறவுக்குக் கைகொடுப்போம்.’’

‘` `கல்விக் கடன் ரத்து, நீட், எழுவர் விடுதலை போன்றவை மாநில வரம்புக்கு அப்பாற்பட்டவை. இவையெல்லாம் மக்களை திசைதிருப்பும் வாக்குறுதிகள்’ என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உங்கள் பதில்?’’

‘`அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை திசைதிருப்ப என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், தி.மு.க-வைப் பொறுத்தவரை நான் ஏற்கெனவே சொன்னபடி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நன்கு விவாதித்துதான் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., பா.ஜ.க-வின் விமர்சனம் அர்த்தமற்றது. நல்ல மனம் இருந்தால், உரிய மார்க்கம் உண்டு.’’

``500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையொப்பம் போட்டுச் செயல்படுத்த நினைப்பது எதை?’’

‘`முதல் 100 நாள்களில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிகளின் மூலம் உறுதி ஏற்றிருக்கிறேன். அதுவும் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்து வாசலில் இருந்து அந்த உறுதிமொழியை எடுத்துள்ளேன், பேரறிஞர் அண்ணாமீது ஆணையாக, கலைஞர்மீது ஆணையாக, தமிழ்நாட்டு மக்கள்மீது ஆணையாக எடுத்துள்ளேன். அதற்குண்டான வழிமுறைகளுக்கே முதல் கையொப்பமாக இருக்கும்.’’

``ஒவ்வொரு கூட்டணியிலும் இருக்கும் கட்சிகள் தனித்தனியாகத் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுகின்றன. அந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஆளுங்கட்சிக்கு வருமா?’’

‘`தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கான அறிக்கை. ஆகவே, கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படும்.’’

*******

“அ.தி.மு.க-விலும் பா.ஜ.க-விலும்தான் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது!”

காலையில் கும்மிடிப்பூண்டி, மாலையில் சிவகங்கை, இரவு தஞ்சை என ஒரே நாளில் தமிழகத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் பிரசாரம் என வேகம் எடுத்துச் செல்கிறார் ஸ்டாலின். இம்முறை அவரின் பிரசாரப் பயணத்திட்டத்தை வித்தியாசமாகத் தயார் செய்துள்ளார்கள். மண்டலங்களாக மாவட்டங்களைப் பிரித்து, ஒரே நாளில் மூன்று வெவ்வேறு மண்டலங்களுக்குப் பயணம் செய்யும் வகையில் பயணத்தைத் திட்டமிட்டுள்ளனர். ஒரே நாளில் கார், விமானம், வேன் என ஸ்டாலினின் பயணம் வேகமாக உள்ளது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அவர் இருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா இது.

ஸ்டாலின் பிரசாரத்திற்கு என்றே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட இரண்டு வேன்கள் வந்துள்ளன. இரண்டுமே ஒரே நிறுவனத்தில் சொகுசாக வடிவமைக்கப்பட்டவை. ஸ்டாலினின் பிரசார வேனில் மனைவி துர்கா, வாகனத்தில் செயல்படும் மைக்கை ரெடி செய்யும் பணியாளர் ஆகியோருடன் ஸ்டாலினின் உதவியாளர் தினேஷ் இருப்பார். எந்த மாவட்டத்திற்குப் பிரசாரத்திற்குச் செல்கிறாரோ அந்த மாவட்ட எல்லையில் மாவட்டச் செயலாளர் பிரசார வேனில் ஏறிக்கொள்கிறார்.

கடலை மிட்டாய், பிஸ்கட் இரண்டுமே ஸ்டாலினுக்குப் பிடித்தவை. கூட்டத்தில் பேசும் முன்பாக ஃபிளாஸ்க்கில் இருக்கும் வெந்நீரைக் குடித்துவிட்டே பேசுகிறார். பேசி முடித்தவுடன் காபி அல்லது கிரீன் டீ என ஒன்றை வேனில் வைத்தே ஸ்டாலினுக்குக் கொடுக்கிறார் துர்கா.

பிரசாரத்திற்குச் செல்லும் இடங்களில் எல்லாம் வாக்கிங் போக முடியாது என்பதால், இரவில் எங்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறாரோ அங்கு மட்டும் சுமார் அரை மணி நேரம் நடந்து வாக்குகள் சேகரிக்கிறார். ‘`உடலுக்கும் நல்லதாப் போச்சு... மக்களையும் நெருக்கமாகச் சந்தித்த மாதிரி ஆச்சு’’ என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள். சமீபத்தில் ஸ்டாலினுக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால், பிரசாரப் பயணத்தில் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இருக்கிறார். அசைவ உணவுகளை முடிந்த அளவு தவிர்த்துவிடுகிறார்.

ஸ்டாலினுக்குத் தேவையான மாத்திரைகள், உடைகள் உள்ளிட்ட பொருள்கள் பிரசார வேனுக்குப் பின்னாலேயே தனியாக காரில் போகின்றன. காலையில் ஓர் இடம், மாலை நான்கு மணி முதல் பத்து மணி வரை இரண்டு இடங்கள் என்று ஒரு நாளைக்கு மூன்று இடங்களில் மட்டுமே ஸ்டாலினின் பிரசாரம் நடக்கிறது.