அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டுப் போட்டதாகச் சொல்லப்படும் திமுக பிரமுகரைத் தாக்கி அரை நிர்வாணமாக்கியது, அரசு உத்தரவை மீறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது, ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது என அடுத்தடுத்து மூன்று வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், உயர் நீதிமன்றம் மூன்று வழக்கிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, `சென்னை பூந்தமல்லி சப்-ஜெயில் என்பது பொடா, தடா வழக்கில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகள் அடைக்கப்படும் சிறை. அங்குதான் என்னை அடைத்தார்கள். குடிக்கத் தண்ணீர் இல்லாமல், வெறும் தரையில் படுத்திருந்தேன். ஆனால் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அ.தி.மு.க பயப்படாது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை" எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக தி.மு.க-வின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்,"நில அபகரிப்பு, பொதுவெளியில் அராஜகம், கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட புகார்களுக்கு ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர, இப்படிப் பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல.
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வியூகத்தை ஜெயக்குமார் முன்னெடுக்கிறார். அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், ஏன் சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத அவரைக் கைதுசெய்வது அ.தி.மு.க-வை எச்சரிப்பதாக எப்படி அமையும்?.

ஜெயக்குமார் எத்தனையோ அவதூறுப் பேட்டிகளைக் கொடுத்தாலும், அதற்காக அவர் கைதுசெய்யப்படவில்லை. அதுவே எங்கள் கழகத் தலைவர் காட்டிய பெருந்தன்மை.
ஆனால் முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயக்குமாரே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு `மெயின் ரோட்டில்’ அராஜகத்தில் ஈடுபடும்போது சட்டத்தின் ஆட்சிதான் அவரைக் கைதுசெய்ததே தவிர தி.மு.க-வோ, எங்கள் கழகத் தலைவரோ இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வது நல்லது.

அவர் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையல்ல. தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது புழுதிவாரி வீசுவதை ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.