தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடந்த மாதம் 14-ம் தேதி தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியல் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அவை ஆதாரமற்றவை எனத் தெரிவித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மன்னிப்புக் கேட்குமாறும், நஷ்டஈடு செலுத்துமாறும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதற்கடுத்தகட்டமாக முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள்களுக்கு முன்பு அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இத்தகைய சூழலில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது இன்று அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த நிலையில், `அண்ணாமலை நிச்சயம் ஓராண்டு சிறைத் தண்டனை பெறுவார்' என ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார்.
அண்ணாமலை மீது வழக்கு தொடுத்த பிறகு டி.ஆர்.பாலுவுடன் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ``தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கழக முன்னோடிகள்மீது ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவதூறாகப் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டார்.
அவர் பேட்டியளித்த அரை மணி நேரத்துக்குள்ளேயே அவருக்கு தி.மு.க சார்பில் நாங்கள் பதில் தந்துவிட்டோம். நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதமாகியும் இதுவரையில் அவர் பதில் சொல்லவில்லை. போதுமான அவகாசம் கொடுத்தப் பிறகும், மன்னிப்புக் கேட்காததால் இரண்டு நாள்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் சார்பில், சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் அண்ணாமலை மீது மனுத்தாக்கல்செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலு சார்பில் இன்றைக்கு சைதை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது. தி.மு.க-வுக்கு யார் மீதும் பொய் வழக்கு போடும் பழக்கம் கிடையாது.

இதேபோல்தான் 1962-63-ல் அப்போதைய பொருளாளர் கருணாநிதி கட்சிப் பணத்தில் பூம்புகார் என்ற படம் எடுத்தார் என்று நாத்திகம் எனும் பத்திரிகையில் நாத்திகம் ராமசாமி எழுதினார். அதை எதிர்த்து எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாநிதி அன்றைக்கே வழக்கு தொடர்ந்தார். அதில் நாத்திகம் ராமசாமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது என்பது வரலாறு. அன்றைய பொருளாளருக்குப் பிறகு இன்றைய பொருளாளர் டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது வழக்கு தொடுத்திருக்கிறார். நிச்சயமாக அண்ணாமலை ஓராண்டு தண்டனை பெறப்போகிறார்" என்றார்.