தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, கரூர் உட்பட பல இடங்களில் சோதனை நடந்துவருகிறது. இதில் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளைச் சூழ்ந்து முடக்கி அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தினர்.

இந்த நிலையில், `எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கவே பா.ஜ.க இவ்வாறு வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது' என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ``இந்த ஜனநாயக நாட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளைப் பழி வாங்கிவிடலாம் என்று அவர்கள் (பா.ஜ.க) கனவு காண்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கும், ஜப்பானுக்கும் முதல்வர் ஸ்டாலின் சென்றிருக்கும் வேளையில், அது தொடர்பான செய்திகளைத் திசை திருப்ப பா.ஜ.க அரசு இன்று ரெய்டு நடத்தியிருக்கிறது. செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் இல்லாத நேரத்தில் இப்படிச் செய்வது பா.ஜ.க-வின் கேவலமான அரசியலைக் காட்டுகிறது. திட்டமிட்டு இன்று அதிகாலை முதல் கரூர், பிற இடங்களில் செந்தில் பாலாஜிக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகளிலெல்லாம் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் கிடைக்கவில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளரே சொல்கிறார்.

கடந்த ஆட்சியில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது, எவ்வளவு கலவரங்கள் நடந்தன. அன்று ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா... யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதிகாரிகள் ரெய்டு நடத்தி என்ன முடிவு எடுத்தாலும் எடுக்கட்டும். அதைப் பற்றிக் கவலை இல்லை. கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு எல்லா எதிர்க்கட்சிகளும் மிக வேகமாக இணையக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இதைச் சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இது போன்ற ரெய்டுகளை நடத்துகிறார்கள்.

போர்க்களத்தில் படைகளைப் பயன்படுத்துவதுபோல இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தி பழிவாங்க நினைக்கிறார்கள். அண்ணாமலை சொல்கிறார், சொன்னது போல் ரெய்டு நடக்கிறது. அவர் என்ன சி.பி.ஐ இயக்குநரா... வருமான வரித்துறையினரின் வாகனம் தெரியாமல் தாக்கப்பட்டிருக்கிறது. நடந்தது தவறுதான். போலீஸ் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறது, வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.