Published:Updated:

`மக்கள் போராட்டமாக மாறும்!’ - CAA போராட்டத்தில் ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் பேரணி நடத்தின.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாமில் தொடங்கிய போராட்டத் தீ மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவியது. மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் மெல்ல அரசியல் கட்சிகளும் களம் இறங்கத் தொடங்கின.

இந்த நிலையில், தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தின. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தாளமுத்து நடராஜன் மாளிகையில் தொடங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது. 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பேரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். ட்ரோன் கேமரா மூலம் முழு பேரணியும் காட்சிப்படுத்தப்பட்டன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பேரணியின் நிறைவில் பேசிய ஸ்டாலின், "இது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணி அல்ல; போர் அணி. குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாவிட்டால் பேரணி, ஆர்ப்பாட்டம் என்பதுடன் நிற்காமல் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சேர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக முன்னெடுப்போம். எங்களின் பேரணிக்குத் தடை விதிக்காத நீதிமன்றத்துக்கு நன்றி. பேரணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறைக்கு நன்றி" என்று கூறி முடித்தார்.