Published:Updated:

அடேங்கப்பா ஆன்மிக அரசியல்: எங்க ஊரு மாரியாத்தா!

அடேங்கப்பா ஆன்மிக அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
அடேங்கப்பா ஆன்மிக அரசியல்

ஸ்டாலின் எடுக்கும் தாரை தப்பட்டை

அடேங்கப்பா ஆன்மிக அரசியல்: எங்க ஊரு மாரியாத்தா!

ஸ்டாலின் எடுக்கும் தாரை தப்பட்டை

Published:Updated:
அடேங்கப்பா ஆன்மிக அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
அடேங்கப்பா ஆன்மிக அரசியல்

கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க’ என்று பரப்புரை கிளம்பியது. அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘தி.மு.க-வில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்தான்’’ என்றார். இப்போது பா.ஜ.க, அ.தி.மு.க தொடங்கி ரஜினி வரை ஆன்மிக அரசியலை கையில் எடுத்திருக்கும் நிலையில், ‘இந்துக்களின் எதிரி’ என்று தனக்கு எதிராக வீசப்படும் ஆயுதத்தை வீழ்த்த, அதே இந்துக்களின் சிறுதெய்வ வழிபாட்டை கையில் எடுத்திருக்கிறது தி.மு.க.

பெரியாரியத்தை அடையாளமாகத் தரித்துக்கொண்ட கட்சியான தி.மு.க-வுக்கு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, இந்துக்களுக்கு எதிரான பேச்சு இவையெல்லாம் புதிதல்ல. தீவிர கடவுள் மறுப்பாளரான கருணாநிதி கடைசி வரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். தவிர, அவர் உயிருடன் இருந்தபோது ‘இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்றெல்லாம் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். இதையெல்லாம் முன்வைத்தே இப்போதும் தி.மு.க-வை எதிர்க்கும் கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க-வின் ‘கடவுள் மறுப்பு’ என்கிற பகுத்தறிவுவாதத்தை இந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக ஒருங்கிணைக்க முயற்சி செய்துவருகின்றன.

அடேங்கப்பா ஆன்மிக அரசியல்
அடேங்கப்பா ஆன்மிக அரசியல்

ரஜினியின் பெரியார் எதிர்ப்புப் பேச்சு தொடங்கி தி.மு.க மீதான பா.ஜ.க-வின் தொடர் தாக்குதல்கள் வரை அனைத்துமே மேற்கண்ட வியூகத்தில் நடப்பவைதான். வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இல்லாவிட்டாலும் ரஜினியின் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து, இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யலாம் என்பது பா.ஜ.க-வின் திட்டமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை தி.மு.க எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்தான், தி.மு.க-வின் தேர்தல் வியூகத்தை வகுக்கும் பொறுப்பு பிரபல தேர்தல் வியூக வல்லுநரான பிரஷாந்த் கிஷோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஓர் இடத்தில் பிரஷாந்த் கிஷோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய விஷயம் ஒன்றுதான், இப்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. டெல்லியில் கெஜ்ரிவாலின் வெற்றிக்கான காரணங்களை விளக்கிய பிரஷாந்த் கிஷோர், ‘‘கெஜ்ரிவால் இந்துத்துவத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இந்துக்களுக்கான தலைவராகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இங்கே பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களிடம், ‘தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல; மதவெறியைத் தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவ பா.ஜ.க-வுக்குத்தான் எதிரி’ என்கிற எண்ணத்தை ஆழ விதைக்க வேண்டும்’’ என்று ஆரம்பித்து அதற்கான ஒரு செயல்திட்டத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார். கிராமங்களில் தி.மு.க-வுக்கு ஆதரவைத் திரட்டும்விதமாக கிராமங்களில் உள்ள சிறுதெய்வங்களின் கோயில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டத்தின் சாராம்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்ச் சமூகத்தில் கிராமங்களில் எல்லை தெய்வ வழிபாடும் குலதெய்வ வழிபாடும் மக்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்தது. ஆனால் ராமர் கோயில் கட்டுவது, விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கே பா.ஜ.க முக்கியத்துவம் அளிக்கிறது. வடமாநிலங்களில் உள்ள வழிபாட்டுமுறையை இங்கே புகுத்தி, சிறுதெய்வ வழிபாட்டை மறக்கடிப்பதே பா.ஜ.க-வின் திட்டம் என்பதை நடுத்தர மற்றும் அடித்தட்டு இந்து மக்களிடம் விளக்க வேண்டும். இதற்காக கிராமக் கோயில் பூசாரிகளை ஒருங்கிணைத்து கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டை நடத்த வேண்டும்; சிறுதெய்வ வழிபாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரஷாந்த் கிஷோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி, பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களுக்கும் தி.மு.க பாதுகாப்பு அளிக்கும் என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம். கிஷோர் தரப்பின் இந்த ஆலோசனை, ஸ்டாலினுக்கும் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு ஒரு காரணமும் உண்டு.

அடேங்கப்பா ஆன்மிக அரசியல்
அடேங்கப்பா ஆன்மிக அரசியல்

2001-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில், அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி ‘பூசாரிகள் நல வாரியம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், பூசாரிகள் நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டது. அதேசமயம் கடவுள் மறுப்பு இயக்கமான தி.மு.க இந்த உத்தியைக் கையில் எடுத்தது பெரிய முரணாகத் தெரியவில்லை. காரணம்... கிராமக் கோயில் பூசாரிகள், எல்லைத் தெய்வங்களுக்கும் குலசாமிகளுக்கும் பூஜைகள் செய்பவர்கள். ராமர், பெருமாள், கிருஷ்ணர், சிவன் போன்ற கடவுள்களுக்கு அவர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதனால்தான், தற்போதும் தி.மு.க மாரியம்மன், முனியப்பன், கருப்பன், இசக்கி போன்ற சிறுதெய்வ வழிபாட்டுக்கு ஆதரவான நிலைப்பட்டை கையில் எடுத்தால், அது முரண்பாடாக விமர்சிக்கப்பட வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுகிறது.

அதேசமயம் தி.மு.க-விலேயே இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். ‘‘சிறுதெய்வ வழிபாட்டை தி.மு.க முன்னெடுக்கும்பட்சத்தில், `இனி தீபாவளிக்கு தி.மு.க வாழ்த்து சொல்லுமா?’ என்ற கேள்வியை இந்து அமைப்புகள் முன்வைக்கும். தி.மு.க-வின் மதச்சார்பின்மை கேள்வியாக்கப்படும். `கருணாநிதி உறுதியாக நம்பிய பகுத்தறிவு என்கிற தி.மு.க-வின் அடிப்படை சித்தாந்தத்தையே அடகுவைத்துவிட்டார்கள்’ என்று விமர்சனம் வரும்’’ என்றெல்லாம் அவர்கள் சுட்டிக்காட்டியிருக் கிறார்கள். ஆனாலும் தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பலருமே, ‘‘காலத்துக்கேற்ப, சூழலுக்கேற்ப மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிரியை வெல்ல எதிரியின் ஆயுதத்தையே கையில் எடுப்பதும் ராஜதந்திரம்தான்’’ என்று இந்தத் திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்களாம்.

இதுகுறித்து தி.மு.க-வின் கருத்தை அறிய அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். ‘‘கட்சியை வலுப்படுத்த கிஷோர் சில செயல்திட்டங்களை இப்போதுதான் வகுக்க ஆரம்பித்துள்ளார். அந்தத் திட்டங்கள் பற்றி தலைவர் எங்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது எங்கள் கருத்துகளை அவரிடம் தெரிவிப்போம். நீங்கள் சொல்வது போன்று எந்தச் செயல்திட்டமும் இதுவரை எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசப்படவில்லை” என்று முடித்துக்கொண்டார்.

‘‘பெருவரவேற்பு கிடைக்கும்!’’

தமிழ்நாடு கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தத்திடம் பேசினோம். “மதுரை தமுக்கம் மைதானத்தில் 2000-ம் ஆண்டு கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு வந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி எங்களின் எட்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைத்துக் கொடுத்தார். பிறகு ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்தச் சலுகைகள் நிறுத்தப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளாக மாத வருமானம் ஏதுமில்லாமல் கிராமக் கோயில் பூசாரிகள் மிகுந்த சிரமத்தில் தவிக்கின்றனர். எங்களுக்கு ஓய்வு ஊதியமாக 3,000 ரூபாய் தருவதாக அறிவித்த ஜெயலலிதா, அதை நிறைவேற்றவில்லை. இப்போது மசூதி உலமாக்களுக்கு மட்டும் ஓய்வூதியமாக 3,000 ரூபாய் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, கிராமக் கோயில் பூசாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், கிராமக் கோயில்களை மையப்படுத்தி தி.மு.க தலைவர் ஸ்டாலின் சில திட்டங்களை முன்னெடுத்தால், பெருவரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

இது நம்ம சாமி!

எழுத்தாளரும் சிறுதெய்வங்கள் குறித்து கள ஆய்வு செய்தவருமான வெ.நீலகண்டனிடம், சிறுதெய்வ வழிபாட்டு முறை குறித்துப் பேசினோம்.

‘‘தமிழர் வழிபாடு என்பது, இயற்கையை வணங்குவது மற்றும் நன்றி அறிவித்தல் ஆகிய இரண்டு வழிபாடுகளை அடிப்படையாகக்கொண்டது. இனக்குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்த மக்கள், எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்து நின்ற தங்கள் தலைவன் உயிரிழந்த பிறகு, அவன் நினைவாக நடுக்கல் நடுவார்கள். அவன் பிறந்த நாளிலோ இறந்த நாளிலோ அவனுக்குப் பிடித்த உணவுகளையும் பொருள்களையும் அந்த நடுக்கல் முன்பு படைத்துக் கொண்டாடுவார்கள். இப்படித்தான் வழிபாடு வளர்ந்தது. ஊருக்காக வாழ்ந்தவர்கள் காவல் தெய்வமானார்கள்; குடும்பத்துக்காக வாழ்ந்தவர்கள் குலதெய்வமானார்கள்.

இன்று சிறுதெய்வங்கள் என்று கூறப்படுகிற கிராமத்துக் காவல் தெய்வங்கள் எல்லாம், தம் மக்களுக்காக வாழ்ந்து மடிந்த நம் முன்னோர்கள்தான். கிராமங்களைக் காலிசெய்துவிட்டு நகரங்களில் குடிபெயர்ந்தவர்கள் எதற்குச் செல்கிறார்களோ இல்லையோ தங்கள் கிராமக் கோயிலின் கொடைக்கோ குதிரையெடுப்புக்கோ சென்றுவிடுவார்கள். காரணம், தலைமுறை பந்தம். தவிர சாதி, மத பேதம் தாண்டி சிறுதெய்வ வழிபாட்டில்தான் கிராமத்து மக்கள் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்.

நீலகண்டன் - வாசு - நரசிம்மன்
நீலகண்டன் - வாசு - நரசிம்மன்

சமீபகாலமாக, புதிய ஊடுருவல் ஒன்று நிகழ்ந்து வருவதைக் கவனிக்க முடிகிறது. சிறுதெய்வக் கோயில்களில் பிள்ளையார் சிலைகள் திடீரென முளைக்கின்றன. கிடா வெட்டு, சேவல் வெட்டு சாமிகளுக்கும் பிள்ளையாருக்கும் நடுவில் திரை போட்டு வழிபாடுகள் நடக்கின்றன. தலைமுறை தலைமுறையாகப் பூசாரியாக இருந்தவர்கள், கருவறைக்கு வெளியில் தூபக்கால் எடுத்துக் கொடுக்கவும் பொங்கல் வைக்கவும் பணிக்கப்படுகிறார்கள். சிறுதெய்வ வழிபாட்டு மரபு படிப்படியாகக் குலைந்துவருகிறது. இதைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.

‘‘இந்த வியூகம் தோற்கும்!’’

தி.மு.க எடுத்துள்ள சிறுதெய்வ வழிபாடு வியூகம் குறித்து, முன்னாள் எம்.பி-யும் தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான கிருஷ்ணகிரி நரசிம்மனிடம் கேட்டதற்கு, ‘‘இந்துக்கள் மற்றும் கடவுள்களின் விரோதி தி.மு.க என்பது, காலம்காலமாக எல்லோராலும் அறியப்பட்ட விஷயம்தான். இப்போது தேர்தலுக்காக போலி நாடகம் ஆடப்பார்க்கிறார்கள். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் இந்த முயற்சி நிச்சயம் தோல்வியில்தான் முடியும்’’ என்றார்.

“கலைஞரின் கருணைப் பார்வை!”

கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசுவிடம் பேசினோம். ‘‘தமிழகத்தில் அரசுக் கட்டுப்பாட்டில் 38,000 கோயில்கள் இருக்கின்றன. இதில் 55 சதவிகிதத்தினர் பிராமணர்கள் அல்லாதவர்கள்தான் கோயில் பூசாரிகளாக இருக்கிறார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத சுமார் ஒரு லட்சம் கோயில்களில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான பூசாரிகளாக நாங்கள் இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பார்த்தால் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறோம். கடவுள் நம்பிக்கைகொண்ட அ.தி.மு.க அரசு, இந்து கோயில் பூசாரிகளுக்குச் செய்ததைவிட கடவுள் நம்பிக்கையில்லாத தி.மு.க அரசு எங்களுக்குச் செய்த உதவிகள்தான் ஏராளம். கடவுள் பாதையும் கலைஞர் பாதையும் வெவ்வேறாக இருந்தபோதும் கலைஞரின் கருணைப் பார்வையால் கிராமப் பூசாரிகள் பயனடைந்தோம். அதனால், கிராமக் கோயில்களையும் சிறுதெய்வ வழிபாட்டையும் தி.மு.க முன்னெடுத்தால் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism