Published:Updated:

`உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழிலும் அவசியம் இருக்க வேண்டும்!’ - ஸ்டாலின் கோரிக்கை

2018-ம் ஆண்டு நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பிற மொழிகளிலும் தீர்ப்பு வெளியிட வேண்டும் என்ற தன் கருத்தை வெளியிப்படுத்தியிருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

உலகம் முழுவதும் உள்ள முதன்மை நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லது தங்களின் தாய்மொழிகளிலேயே தீர்ப்பு வழங்கப்படும். முதல் முறையாக இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலம் அல்லாமல் பிற ஐந்து மொழிகளில் வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம் இல்லாமல் இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடா, ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதற்காக உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் புதிதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரம் அல்லது பத்து நாள்களில் ஆறு மொழிகளில் தீர்ப்புகள் வெளியாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் அதிகமாக வழக்குகள் பதிவு செய்யும் மொழிகளை வைத்து இந்த ஐந்து மொழிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஐந்து மொழிகளில் தமிழ் இல்லாததற்குத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த நல்ல முயற்சியை மனதார வரவேற்கின்றேன்.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

வழக்குகளைத் தொடுப்பவர்கள் மொழிப் பிரச்னையின்றி, எந்தவிதக் குழப்பமும் சந்தேகமும் இல்லாமல், தீர்ப்புகளின் சாரம்சத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், வழக்கை நடத்திய தங்களின் வழக்கறிஞர்கள் எடுத்துவைத்த வாதங்களையும், எதிர்த் தரப்பின் பிரதி வாதங்களையும் நன்கு தெரிந்து புரிந்துகொள்ள வழிவகுக்கும் இந்த முயற்சி இந்திய நீதி பரிபாலனச் சரித்திரத்தில் மிக முக்கிய மைல்கல் என்றே கருதுகின்றேன்.

இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும். அதே வேளையில், தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

தமிழ்
தமிழ்

இந்திய அரசின் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது. ஆகவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.