Published:Updated:

``புதுச்சேரியில் திமுக ஆட்சி மலரும்!” – காங்கிரஸ் கட்சியை சீண்டிய ஸ்டாலின்; பின்னணி என்ன?

திமுக தலைவர் ஸ்டாலின்

”ஏற்கெனவே நாம் புதுவையில் ஆட்சியில் இருந்தவர்கள்தான். இதே புதுவை மாநிலத்தில் ஃபரூக் மரைக்காயர் தலைமையிலும், டி.ராமச்சந்திரன் தலைமையிலும், ஜானகிராமன் தலைமையிலும் நமது தி.மு.க ஆட்சி நடைபெற்றிருக்கிறது.” – தமிழக முதல்வர் ஸ்டாலின்

``புதுச்சேரியில் திமுக ஆட்சி மலரும்!” – காங்கிரஸ் கட்சியை சீண்டிய ஸ்டாலின்; பின்னணி என்ன?

”ஏற்கெனவே நாம் புதுவையில் ஆட்சியில் இருந்தவர்கள்தான். இதே புதுவை மாநிலத்தில் ஃபரூக் மரைக்காயர் தலைமையிலும், டி.ராமச்சந்திரன் தலைமையிலும், ஜானகிராமன் தலைமையிலும் நமது தி.மு.க ஆட்சி நடைபெற்றிருக்கிறது.” – தமிழக முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
திமுக தலைவர் ஸ்டாலின்

புதுச்சேரி மாநில தி.மு.க-வின் அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி சிவக்குமாரின் மகன் திருமணம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான பட்டானூர் சங்கமித்ரா திருமண நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின், “தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சி மலர்ந்திருக்கிறது. அதை `திராவிட மாடல் ஆட்சி’ என இன்று பெருமையுடன் கூறுகிறோம். அப்படிப்பட்ட ஒரு திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது தேவைதான். எனக்கு முன்பு பேசியவர்கள் தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கூறினார்கள். உங்களுக்கு மட்டுமா அந்த ஆசை இருக்கிறது... எனக்கும்தான் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட அந்த வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போய்விட்டது. ஆனால் அதற்காகக் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.

புதுச்சேரி
புதுச்சேரி

இந்தப் புதுவை மாநிலத்தில் இப்போது ஓர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால், அது மக்களுக்காக நடைபெறுகிறதா... ஒரு முதல்வர் இருக்கிறார். அவர் உயர்ந்த மனிதர்தான் உயரத்தில். ஆனால் அடிபணிந்து கிடக்கிறார். பொம்மை முதல்வராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரைக் குறைசொல்ல விரும்பவில்லை. அவர் நல்லவர்தான். ஆனால் நல்லவர் வல்லவராக இருக்க வேண்டுமா, வேண்டாமா... ஒரு கவர்னர் ஆட்டிப்படைக்கும் வகையில், புதுவையில் ஓர் ஆட்சி நடைபெறுகிறது என்றால் வெட்கப்பட வேண்டாமா... அதைக் கண்டு வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா... ஆனால் அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் நிலையில் இங்கு ஓர் ஆட்சி நடைபெறுவது புதுவை மாநிலத்துக்கு மிகப்பெரிய இழுக்காக அமைந்திருக்கிறது. இந்த ஆட்சியில் புதுவைக்கு ஏதாவது ஒரு நன்மை நடந்திருக்கிறதா?

புதுவையில் இப்படிப்பட்ட ஓர் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான், நம்முடைய தோழர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய ஆட்சி இங்கு வர வேண்டும் என்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஏற்கெனவே நாம் இங்கு ஆட்சியில் இருந்தவர்கள்தான். இதே புதுவை மாநிலத்தில் ஃபரூக் மரைக்காயர் தலைமையிலும், டி.ராமச்சந்திரன் தலைமையிலும், ஜானகிராமன் தலைமையிலும் நமது தி.மு.க ஆட்சி நடைபெற்றிருக்கிறது. அதனால் நிச்சயமாக தி.மு.க ஆட்சி புதுவை மாநிலத்தில் மீண்டும்  உதயமாகும். அதில் எந்தவிதச் சந்தேகமும் பட வேண்டாம். காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர்களாக இருந்த வைத்திலிங்கம், நாராயணசாமி போன்றவர்களுடன் நாம் கூட்டணி ஆட்சி நடத்தவில்லையா?

நாராயணசாமி
நாராயணசாமி

ஆக... அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஆனால் உறுதியாக புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக் கூடாது. அதில் நாம் கண்ணும் கருத்துமாக இருந்தாக வேண்டும். விரைவில் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் இப்போதே நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்கள் பணியைத் தொடருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி, எப்படிக் கூட்டணி, அது எந்த வகையில் அமையப்போகிறது என்பது குறித்து அப்போது முடிவெடுக்கப்படும். அது வேறு. ஆனால் வெற்றிக்கு அச்சாரமாக இப்போதே நாம் கடமையாற்ற முன்வர வேண்டும்” என்றார்.

புதுச்சேரி காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்தாலும், தி.மு.க தங்களை மதிப்பதில்லை என்றும், தங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையிடம் புலம்பிவந்தனர். இந்த நிலையில்தான், டிசம்பர் 1-ம் தேதி புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரியில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. சமீபகாலமாக மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டங்கள் தி.மு.க தலைமையில் நடைபெறுவதாகத்தான் செய்திகள் வெளியாகின்றன.

முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி

போராட்டங்களுக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் நாம் பங்கேற்கவேண்டிய அவசியமில்லை. கூட்டணிக் கட்சி ஒத்துழைக்காவிட்டால், காங்கிரஸ் சார்பில் தனித்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை. ஒவ்வொரு துறையாகச் சென்று போராட்டம் நடத்தப்படும்’’ என்று ஆவேசமாகத் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்திருந்த புதுச்சேரி தி.மு.க அமைப்பாளர் எம்.எல்.ஏ சிவா, “தி.மு.க-வுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது. எங்கள் கொள்கையைக் கூறி கட்சியை வளர்க்கிறோம். தலைமை சொல்வதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று மட்டும் தெரிவித்திருந்தார். அதேசமயம்

அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “புதுவையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடத்தப்படும் போராட்ட நிகழ்வுகளில், காங்கிரஸ் கட்சிதான் தலைமையேற்க வேண்டும் என்றுதான் கூறியிருந்தேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அகில இந்திய காங்கிரஸ் சொல்லும் போராட்டங்களை தி.மு.கவுடன் இணைந்து செயல்படுத்துகிறோம். புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி போராட்டங்கள் என்று வந்தால் அதற்கு காங்கிரஸ்தான் தலைமை ஏற்கும். சமீபத்தில் நடந்த இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டங்களில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அமைப்பாளர் சிவா தலைமையேற்றதாகச் செய்திகள் வெளியாகின. கூட்டணிக்குத் தலைமை என்பது காங்கிரஸ்தான்.

அப்படி ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இதைத்தான் நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதி செய்தோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ”காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு புதுச்சேரியில் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அதேசமயம் மக்கள் மத்தியில் எங்கள் கட்சிக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆறு இடங்களைப் பெற்றிருக்கிறோம். காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டிருந்தால் இன்னும் அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்.  அதையெல்லாம் சுட்டிக்காட்டித்தான் எங்கள் தலைவர் காங்கிரஸ் கட்சிக்குக் குட்டு வைத்திருக்கிறார்” என்கின்றனர் தி.மு.க-வினர்.