கட்டுரைகள்
Published:Updated:

நாற்பதுக்கு நாற்பது இலக்கு... முதல்வரின் கனவு சாத்தியமா?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

தற்போது, தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க தங்களின் செல்வாக்கை மேம்படுத்தியிருக்கிறது.

“கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்குங்கள். வலுவான கூட்டணியுடன்தான் போட்டி யிடுவோம். கூட்டணி தொடர்பாக, தேர்தல் நேரத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளுங்கள்’’ எனக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் இதே கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்திப் பேசிவருகிறார் ஸ்டாலின்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. இந்தக் கூட்டணி தமிழகத்தின் தேனி நாடாளுமன்றத் தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இதே அணியில் மேலும் சில கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. மொத்தத் தொகுதிகளான 234-ல் 159 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றிபெற்று தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த நிலையில்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகித வெற்றியை நோக்கிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைக் களமிறக்குகிறார் ஸ்டாலின்.

“தற்போதுள்ள சூழலில், மீண்டும் அப்படியொரு வெற்றி தி.மு.க கூட்டணிக்குச் சாத்தியமா?”-கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

``2019 தேர்தலுக்கும் 2024 தேர்தலுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. மோடி அரசாங்கத்தின்மீது ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல காரணிகளால் எழுந்த எதிர்ப்பலை, எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின்மீது, ‘மத்திய அரசுக்கு அடிபணிந்துபோவது, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள்’ உள்ளிட்ட காரணங்களால் வந்த எதிர்ப்பலை என நிறைய காரணங்கள் இருந்தன. மறுபுறம், தி.மு.க கூட்டணி வலுவாகக் காலூன்றியிருந்ததை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாற்பதுக்கு நாற்பது இலக்கு...
முதல்வரின் கனவு சாத்தியமா?

தற்போது, தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க தங்களின் செல்வாக்கை மேம்படுத்தியிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள். அதேபோல, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலமாகவும் ஒரு வாக்குவங்கியை உருவாக்கப் பார்க்கிறார்கள். இத்தனை சவால்கள் இருக்கும்போது, இதே கூட்டணியைத் தக்கவைத்துக்கொண்டாலும், தி.மு.க கூட்டணி நாற்பது இடங்களில் ஜெயிப்பது என்பது எளிதான காரியமல்ல. கடுமையாக உழைத்தாலன்றி அந்த இலக்கை எட்ட முடியாது’’ என்கிறார் அவர்.

``தி.மு.க கூட்டணி வலுவானதாகவே இருக்கிறது. அதில், இன்னும் சில கட்சிகளும் இணையவிருக்கின்றன. அதனால், நிச்சயமாக நாற்பது தொகுதிகளில் வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன’’ என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. மேலும் அவர், ``உதயநிதி ஸ்டாலின் மூலமாக கமல்ஹாசன் தி.மு.க கூட்டணிக்குள் வரவிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் எடுத்திருக்கும் 2.5 சதவிகித வாக்குகளும் தி.மு.க கூட்டணிக்கு வலு சேர்க்கும். அதேபோல 3.8 சதவிகித வாக்குகள் எடுத்த பா.ம.க-வும் தி.மு.க-வை நோக்கி நகர்கிறது. அதனால், இந்தக் கூட்டணி இன்னும் வலிமையாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், எதிரணி சிதறுண்டு இருக்கிறது. எடப்பாடியும் பன்னீர்செல்வமும் இணைந்து தான் அ.தி.மு.க-வுக்கு 33 சதவிகித வாக்குகள் கிடைத்தன. பன்னீரைக் கட்சியைவிட்டு நீக்கியதன் மூலம் அவர் சார்ந்த சமூக வாக்குகள் கிடைக்காது. அதனால், தி.மு.க-வுக்குச் சாதகமான ஓர் அரசியல் சூழல்தான் உருவாகியிருக்கிறது...” என்றார்.

சிவ.ஜெயராஜ்
சிவ.ஜெயராஜ்

இது குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சிவ.ஜெயராஜிடம் பேசினோம். ``எதிர்க்கட்சியாக இருந்தபோதே பலமான அ.தி.மு.க-வை வீழ்த்தி 39 இடங்களில் வெற்றிபெற்றோம். இப்போது ஆளுங்கட்சியாகப் பல்வேறு சாதனைகளைச் செய்திருக்கிறோம். இன்னும் எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணைய விருக்கின்றன. மோடிக்கு எதிராக ஒரு வலுவான அலையை உருவாக்கவிருக்கிறோம். போன முறை இழந்த ஒரு தொகுதியையும் இந்த முறை இழக்க மாட்டோம். பூத் கமிட்டிகள் அமைத்து, வேலைகளைத் தொடங்கிவிட்டோம். நாற்பது தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றிபெறுவோம்’’ என்கிறார் உறுதியாக.