Election bannerElection banner
Published:Updated:

ஸ்டார் தொகுதிகள்: கொளத்தூரில் ஸ்டாலினை வீழ்த்துவது சுலபமல்ல!

ஸ்டாலின்
ஸ்டாலின்

கருணாநிதி மீதுகூட தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஜெயலலிதா மீதும் இருந்தது. எடப்பாடி, பன்னீர் மீதும் இருக்கிறது

கடந்த 2011-ல், தொகுதி மறுசீரமைப்பில் உருவான கொளத்தூர் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரே ஸ்டாலின்தான். தொடர்ச்சியாக 2016-ல் வெற்றிபெற்றவர், மூன்றாவது முறையாக கொளத்தூரில் களமிறங்குகிறார். தி.மு.க-வின் தலைவர் என்ற இமேஜும், கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருப்பதும் ஸ்டாலினுக்கு ப்ளஸ். தொகுதியின் சாதி, மதக் கணக்குகளைத் தாண்டி கருணாநிதி, ஜெயலலிதா போல அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராகவும் ஸ்டாலின் இருப்பது, அவருக்குக் கூடுதல் ப்ளஸ்.

கருணாநிதி மீதுகூட தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஜெயலலிதா மீதும் இருந்தது. எடப்பாடி, பன்னீர் மீதும் இருக்கிறது. ஆனால், ஸ்டாலின் மீது அப்படி பெரிதாக இல்லை. அந்த இமேஜுடன் தேர்தலை அணுகுகிறது ஸ்டாலின் தரப்பு. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் ஆதிராஜாராம், ஏற்கெனவே 2006 சட்டமன்றத் தேர்தலின்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராகக் களம் கண்டவர். அந்தத் தேர்தலில், 2,468 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஸ்டாலின் வெற்றிபெற்றார். அதனாலேயே, வாக்குச்சாவடி அரசியலில் கைதேர்ந்தவரான அ.தி.மு.க தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளரான ஆதிராஜாராமை ஸ்டாலினுக்கு எதிராக நம்பிக்கையுடன் களமிறக்கியிருக்கிறது அ.தி.மு.க.

ஸ்டார் தொகுதிகள்: கொளத்தூரில் ஸ்டாலினை வீழ்த்துவது சுலபமல்ல!

ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் ஆதிராஜாராம், ‘‘ஸ்டாலினின் தவறுகளை எக்ஸ்போஸ் செய்வதுதான் எனது வியூகம். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் மீது எந்த ஊழல் புகாரும் இல்லையென்பது எனக்கும் தெரியும். எல்லோரையும் மாட்டிவிட்டு தப்பிச் செல்வதுதான் அவர்கள் குடும்பத்தின் வாடிக்கை. ஆ.ராசா, கனிமொழி, சாதிக் பாட்சா உள்ளிட்டோரைச் சிக்கவைத்துவிட்டு ஸ்டாலின் குடும்பம் எஸ்கேப் ஆகிவிட்டது. இதையெல்லாம் பிரசார களத்தில் எடுத்துச் சொல்வேன். ஸ்டாலினுடன் ஏற்கெனவே மோதியிருப்பதால் அவரைப் பற்றிய அனைத்து விஷயங்களும் எனக்கு அத்துப்படி. இதுமட்டுமன்றி, எங்கள் அரசின் பத்து ஆண்டுக்கால சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளையும் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்துவருகிறேன். நிச்சயம் ஸ்டாலினைத் தோற்கடித்து வரலாறு படைப்பேன்’’ என்கிறார் உற்சாகம் குறையாமல்!

ஆதி ராஜாராம்
ஆதி ராஜாராம்

மக்களிடமும் தொண்டர்களிடமும் நெருக்கமாக இல்லாதது ஸ்டாலினுக்கான பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை, தி.மு.க-வின் வாரிசு அரசியல் போன்றவற்றை வைத்து பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்குள் பல்வேறு பணிகளை தனது மேம்பாட்டு நிதியிலிருந்து செய்திருக்கிறார் ஸ்டாலின். மாதத்துக்கு இரு முறையாவது தொகுதிக்கு விசிட் அடித்திருக்கிறார். அவரை வீழ்த்துவது அத்தனை சுலபமல்ல என்பதே கள நிலவரம்.

-

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு