Election bannerElection banner
Published:Updated:

`அவர் பெயர் என்ன?’ - மைக்கில் விசாரித்த பெண்... அதிர்ச்சியடைந்த ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

பேச அழைத்த ஸ்டாலினைக் கைகாட்டி அருகிலிருந்தவர்களிடம், `அவர் பெயர் என்ன?’ என்று கேட்ட பெண்ணால், ஸ்டாலின் அதிர்ச்சியடைந்தார்.

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பரப்புரையைத் தி.மு.க தலைவர் ஸ்டாலின், திருவண்ணாமலையில் இன்று தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார். மனுக்களை ஒரு பெட்டியில் போட்டு, `சீல்’ வைத்து சாவியை எடுத்துக்கொண்டார். ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார். முன்னதாக, மனு கொடுத்தவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கோரிக்கையை நேரடியாகக் கேட்டறிந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பெண் ஒருவர், காணாமல்போன தன் கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரினார். தொழிலாளி ஒருவர், `நீங்கதான் வருங்கால முதல்வர். எனக்குக் கறவை மாடு வாங்கிக் கொடுங்க’ என்றார். தொடர்ந்து, சந்திரம்மாள் என்ற பெண்ணைப் பேச அழைத்தார் ஸ்டாலின். கூட்டத்தில் எழுந்து நின்ற அந்தப் பெண்ணிடம் தி.மு.க-வினர் மைக் கொடுத்தனர். மைக்கை வாங்கிப் பிடித்த அவர், ஸ்டாலினைக் கைகாட்டி அருகிலிருந்தவர்களிடம், `அவர் பெயர் என்ன?’ என்று கேட்டார்.

அனைவரும் திகைத்துப்போய் அந்தப் பெண்ணைப் பார்த்தனர். ஸ்டாலின் பெயரைத் தெரிந்துகொள்ளாமலேயே பேசத் தொடங்கிய சந்திரம்மாள், `என் புருஷன் செத்துட்டாரு. ரெண்டு பசங்களும் கரூர்ல இருக்கிற ஸ்வீட் கடையில் வேலை செய்யிறாங்க. கூரை வீடு இருந்துச்சு. மழையில அது இடிஞ்சு போச்சு. ரெண்டு பசங்களுக்கும் வீடு கட்டிக்கொடுங்க. எனக்கு சரியா கண்ணு தெரியலை. உங்க அம்மா மாதிரி என்ன நெனச்சிக்கோங்க.

மனு பெட்டிக்கு சீல் வைக்கும் ஸ்டாலின்
மனு பெட்டிக்கு சீல் வைக்கும் ஸ்டாலின்

உங்க புள்ள குட்டியெல்லாம் நல்லாயிருக்கும். ரெண்டு வீடு மட்டும் கட்டிக்கொடுத்திருங்க’ என்றார். அதற்கு ஸ்டாலினும் தலையை ஆட்டி அமைதியானார். `என்னை அம்மா மாதிரி நெனச்சிக்கோங்க’ என்று சொன்ன சந்திரம்மாளும் கிட்டத்தட்ட ஸ்டாலின் வயதுடையவர்தான். இதனால், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. இப்படியே, காமெடியாக நிகழ்ச்சி சென்றது.

தொடர்ந்து, நிறைவுரை ஆற்றிய ஸ்டாலின், ``கோபாலபுரத்திலுள்ள கலைஞர் இல்லத்தின் வாசலில் நின்று உறுதிமொழி எடுத்துவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறேன். 14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி திருவாரூர் மண்ணில் தமிழ் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் 95 வயது வரை தாய்த் தமிழ்நாட்டுக்காக உழைத்தார்.

முதியவரிடம் பேசும் ஸ்டாலின்
முதியவரிடம் பேசும் ஸ்டாலின்

அவர் போராளியாக மட்டுமல்ல, மிகச்சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார். கலைஞரால் உருவாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. மலைகளால் உயர்ந்த திருத்தணி முதல் கடலால் சூழ்ந்த கன்னியாகுமரி வரையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொடுத்தவர் கலைஞர். அதனால்தான் அவரை ஐந்து முறை தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தனர். கலைஞரின் மகன் நான். அவரின் வழியில் சொன்னதைச் செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன். தமிழ்நாட்டில் என் கால்படாத கிராமங்களே கிடையாது’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு