Published:Updated:

கொங்கு ரேஸ்... கொடியசைக்கும் ஸ்டாலின்... களத்தில் நிர்வாகிகள்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

2021 சட்டமன்றத் தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியைப் பிடித்தாலும், கொங்கு மண்டலத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை அந்தக் கட்சியால் எட்ட முடியவில்லை

கொங்கு ரேஸ்... கொடியசைக்கும் ஸ்டாலின்... களத்தில் நிர்வாகிகள்!

2021 சட்டமன்றத் தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியைப் பிடித்தாலும், கொங்கு மண்டலத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை அந்தக் கட்சியால் எட்ட முடியவில்லை

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் தி.மு.க அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி, ஜூலை 28-ம் தேதி தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது அ.தி.மு.க. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக, கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அப்போது அவர் பேசிய வார்த்தைகள்தான் இந்தக் கட்டுரைக்கே அச்சாரம்.

“இன்றைக்கு நம்மிடமிருக்கும் யூனியன் சேர்மன், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து பிரசிடென்ட்டுகள்கிட்ட போயி சில பேர் ’தி.மு.க-வுக்கு வாங்க’னு அழைச்சிருக்காங்க. ஒரு விஷயத்தை மனசுலவெச்சுக்கோங்க, தி.மு.க-வுக்குப் போனால் அது ஒரு நாள் செய்திதான். அ.தி.மு.க-வோட உண்மையான தொண்டன் அப்படிப் போக மாட்டான். தி.மு.க-வோட ஆசைவார்த்தையை நம்பி ஒரு கிளைச் செயலாளர்கூட போகக் கூடாது. இங்கேயிருந்தால்தான் மரியாதை” என்று ஆவேசமாகப் பேசினார் வேலுமணி. அவரின் ஆவேசத்துக்குக் காரணம் இருக்கிறது. கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து ‘கொங்கு ஆபரேஷன்’ என்கிற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதால், வேலுமணி உள்ளிட்ட கொங்கு மண்டல அ.தி.மு.க தலைவர்கள் வெளிறிப் போயிருப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கொங்கு ரேஸ்... கொடியசைக்கும் ஸ்டாலின்... களத்தில் நிர்வாகிகள்!

‘அமைச்சர்களுக்குக் குறி’ கொங்கு ஆபரேஷன்!

2021 சட்டமன்றத் தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியைப் பிடித்தாலும், கொங்கு மண்டலத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை அந்தக் கட்சியால் எட்ட முடியவில்லை. கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் மேற்கு மண்டலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில், 24-ல் மட்டுமே தி.மு.க வெற்றிபெற்றது. குறிப்பாக, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் ஒன்றைக்கூட தி.மு.க கைப்பற்றவில்லை. ஜெயலலிதா இருந்தபோதும் கொங்கு மண்டலம் தி.மு.க-வுக்குச் சவாலாக இருந்தது. ஜெயலலிதா மறைந்து, எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் என்கிற இரட்டைத் தலைமை வந்த பிறகும்கூட, தங்களுக்குச் சாதகமாக கொங்கு மண்டலத்தை தி.மு.க-வால் மாற்ற முடியவில்லை. இதைத் தனது தலைமைக்கான சவாலாகவே இப்போது பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம் ஸ்டாலின். “தேர்தலுக்கு முன்பாக கொங்கு மண்டலத்தில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தலைமைக்கு நாங்கள் வலியுறுத்தினோம். அந்த நேரத்தில் அதை ஸ்டாலின் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுவே கொங்குப் பகுதியில் கட்சியின் சரிவுக்குக் காரணமானது. இதனால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கொங்குமண்டலத்தில் தி.மு.க-வை வலுவாக்க வேண்டும். அதேநேரம், அ.தி.மு.க-வை அமைப்புரீதியாக வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்கிற நீண்டகாலத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறார் ஸ்டாலின்’’ என்கிறார் கொங்கு மண்டல தி.மு.க நிர்வாகி ஒருவர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற இந்த முன்னாள் அமைச்சர்களை டார்கெட் செய்தாலே கொங்குப் பகுதியில் அ.தி.மு.க வலுவிழந்துவிடும் என்று கணக்கு போடுகிறதாம் தி.மு.க தலைமை. இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், “இந்த முன்னாள் அமைச்சர்களின் துறைகளில் ஏகப்பட்ட முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமியிடம், இந்த முறைகேடுகள் குறித்துத் தகுந்த ஆதாரங்களைத் திரட்ட முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஒருவர் தலைமையில் கோவைக்குச் சென்ற ஒரு டீம், வேலுமணிக்கு எதிராகப் பெரும் ஆதாரங்களைத் திரட்டிவந்தது. அதேபோல தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் எனப் பலர் குறித்தும் அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். டெண்டர்கள், துறைரீதியாக நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக ஆதாரங்கள் திரட்டப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்’’ என்றார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரை முதலில் கைவைப்பார்கள் என்று அ.தி.மு.க-வினரே எதிர்பார்க்கவில்லையாம். அதே பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் அழுத்தத்தால்தான், எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறிவைக்கப்பட்டார் என்கிறார்கள். பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு, அந்த அமைச்சர் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்க, பொறியில் சிக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். அதேநேரம், கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், இப்போதே லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு மனதளவில் தயாராகிவிட்டாராம். தனது உறவினர் ஒருவர் மூலம், ஆளும்தரப்புக்கு நெருக்கமான லாட்டரி புள்ளியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால், லாட்டரி அதிபர் தரப்பு, “ஆளுங்கட்சியிடம் உங்கள் விவகாரம் குறித்துப் பேச முடியாது” என்று கைவிரிக்கவே, ஆளும்தரப்பைச் சரிக்கட்ட வேறு வழியைப் பார்த்துவருகிறாராம் அந்த முன்னாள் அமைச்சர்.

மின்துறையில் நடந்த குளறுபடிகளை ஏற்கெனவே சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. இப்போது அதில் நடந்த முறைகேடுகளைத் தனியாக விசாரிக்கவும் ஆளும் தரப்பு உத்தரவிட்டிருப்பதால், அந்தத் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. எடப்பாடிக்கும் இறுதியாக நெருக்கடி தரத் திட்டமாம். இப்படி முதலில் கொங்கு மண்டல அமைச்சர்களுக்கும் முக்கியப்புள்ளிகளுக்கும் அடுத்தடுத்து நெருக்கடி கொடுப்பதன் மூலம் அவர்களின் பிம்பங்களை உடைத்து, அ.தி.மு.க-வை அந்தப் பகுதியில் பலவீனப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க!

கொங்கு ரேஸ்... கொடியசைக்கும் ஸ்டாலின்... களத்தில் நிர்வாகிகள்!

கோவைக்கு முக்கியத்துவம்! - களத்தில் சர்வே டீம்

ஒரு பக்கம், முன்னாள் கொங்கு அமைச்சர்கள் மீது நடவடிக்கை. மற்றொரு பக்கம், அந்தப் பகுதிக்குக் கூடுதல் திட்டங்களை அறிவிக்கவும் திட்டமாம். கோவை மாநகரில், விரைவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆரம்பிக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். தொழில்துறையினர் அதிகம் நிறைந்த பகுதிகளுக்குச் சிறப்பு தொழிலாக்க மையங்களையும் விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தில் அதிகமான மனுக்கள் கொங்கு மண்டலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்திலிருந்துதான் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இப்படி கொங்கு மண்டல வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி, ‘நீங்க எங்களுக்கு ஓட்டுப் போடாவிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்காக உழைப்போம்’ என்று வாக்காளர்களின் மனதைத் தொட நினைக்கிறாராம் ஸ்டாலின்.

தி.மு.க-வுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம், ‘கொங்கு மண்டலத்தில் கட்சியின் கட்டமைப்பு சரியில்லை. அந்தப் பகுதியில் கட்சியை வலுப்படுத்துங்கள்’ என்று தேர்தலுக்கு முன்னரே குறிப்பிட்டிருந்ததாம். இப்போது, அந்த டீமில் பணியாற்றிய 20 பேரைக் கையில் எடுத்திருக்கும் தி.மு.க தலைமை, அவர்கள் மூலமாக கொங்கு மண்டலத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டு வருகிறதாம். இந்த டீமை முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன்தான் கண்காணிப்பதாகச் சொல்கிறார்கள். இந்த டீமின் செயல்பாடு குறித்து நம்மிடம் பேசிய ஒன்றியச் செயலாளர்கள் சிலர், “மாவட்டம் முதல் ஒன்றியம் வரை இந்த டீம் இப்போது ஆய்வு செய்துவருகிறது. தி.மு.க-விலிருந்து விலகிச் சென்றவர்கள், ஒதுங்கியிருப்பவர்கள் என்று பலரையும் இந்த டீமைச் சேர்ந்தவர்கள் சந்திக்கிறார்கள். அவர்களின் குறைகளைக் கேட்டறிகிறார்கள். அதேபோல அ.தி.மு.க-வுக்கு பலமாகவுள்ள முக்கிய சமூகத்தை தி.மு.க-வும் கையில் எடுக்கிறது. அந்தச் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றே, கொங்கு மண்டத்திலுள்ள பிற சமூகத்தினருக்கும் கட்சியில் பதவி கொடுக்கவும் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே டீம் பணிகள் முடிந்த பிறகு, கட்சிக்குள் நிர்வாக ரீதியாகப் பல மாற்றங்களைச் செய்ய ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். தற்போது ஈரோடு முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டவர்கள் தி.மு.க-வின் முகமாக கொங்கு மண்டத்தில் இருக்கிறார்கள். இவர்களைப் போன்று மேலும் வலுவான தலைவர்களை அந்தப் பகுதியில் உருவாக்க நினைக்கிறார் ஸ்டாலின். எதிர்வரும் ராஜ்யசபா தேர்தலில் கொங்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கவும் கட்சித் தலைமை திட்டமிட்டிருக்கிறது” என்றனர்.

ஆளை இழு... பதவியைப் பிடி!

முன்னாள் அமைச்சர்களுக்குக் குறி, கொங்குப் பகுதி வளர்ச்சி, சர்வே டீம் என தி.மு.க நகர்த்தும் காய்களைவிட, ஸ்டாலின் அறிவித்திருக்கும் ஒரு பரிசுத் திட்டம்தான் அ.தி.மு.க-வினரை வெகுவாகக் கலக்கமடையச் செய்திருக்கிறது. கொங்கு மண்டலத்திலுள்ள ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க தொண்டர்களை தி.மு.க-வுக்குக் கொண்டு வருபவர்களுக்குப் பதவிகளை அள்ளித் தர முடிவெடுத்திருக்கிறாராம் ஸ்டாலின். இந்தப் பரிசுத் திட்டம் குறித்து நம்மிடம் பேசிய கொங்கு ஏரியா தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர், “ஏற்கெனவே மக்கள் நீதி மய்யத்திலிருந்து வந்த மகேந்திரனுக்குத் தகவல் தொழில்நுட்ப அணியில் பதவி அளிக்க திட்டமிட்டிருக்கிறது கட்சித் தலைமை. அதேபோல நாமக்கல் முன்னாள் எம்.பி சுந்தரம், சிவசேனாபதி உள்ளிட்ட பலரையும் வைத்து கட்சியை பலப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார்கள். சேலம் மாவட்ட அ.தி.மு.க-விலிருந்து பலரும் தி.மு.க பக்கம் தாவியதுபோல, இனி கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடிகள் அரங்கேறும்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர்
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர்

பத்தாயிரம் அ.தி.மு.க தொண்டர்களை தி.மு.க-வுக்குக் கொண்டுவந்தால் ஒரு பதவி, இருபதாயிரம் பேரைக் கொண்டுவந்தால் ஒரு பதவி என ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, பதவிகள் வழங்க முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின். அவரின் இந்த உத்தி ‘யார் இதில் முந்துவது?’ எனக் கட்சிக்குள் ஒரு ரேஸை உருவாக்கியிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரேஸில் முந்தி, கட்சிக்குள் அதிகாரம் செய்ய நினைக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆனால், செந்தில் பாலாஜியைக் கொங்கு மண்டலத்தில் லாபி செய்ய விடக் கூடாது என அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி உள்ளிட்டோர் தீவிரமாகக் களமாடி வருகிறார்கள். இந்தப் போட்டிகளைத் தாண்டி, இனி தி.மு.க வலுவடையத் தேவையான மாற்றங்கள் கொங்கு மாவட்டங்களில் நிகழும்” என்றார்.

தி.மு.க-வின் கொங்கு மண்டலப் பொறுப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கவனித்து வந்தார். ஆனால், தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் பேசிய சர்ச்சைப் பேச்சால், கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வுக்குச் சரிவு ஏற்பட்டதாக அப்போதே புகார் எழுந்தது. ஆ.ராசாவுக்கு எதிரான இது போன்ற விஷயங்களைப் பட்டியலிட்டு, “தன்னுடைய நீலகிரி தொகுதிக்கே அவர் வருவதில்லை, அவரை வைத்து இங்கு கட்சியை வளர்க்க முடியாது” என்று ஓரு டீம் தலைமையிடம் புகாரளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம் என்கிற பேச்சும் அறிவாலயத்தில் ஓடுகிறது. அனைத்து அமைச்சர்களிடமும், அவரவர் துறைவாரியாக கொங்கு மண்டலத்துக்கு எனச் சில திட்டங்களைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கொங்கு மண்டலத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வின் செல்வாக்கைத் தகர்க்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நிற்கிறார் ஸ்டாலின். இதன் மூலமாக, இந்தப் பகுதியில் பா.ஜ.க தனியாகச் செல்வாக்கு செலுத்த ஆரம்பிப்பதையும் தடுக்க முடியுமென அவர் கருதுகிறாராம். ‘கொங்குப் பகுதியை தி.மு.க வசமாக்குங்கள்’ என முழங்கி, கொடியசைத்து ரேஸை ஆரம்பித்து வைத்திருக்கிறார் ஸ்டாலின். கொங்கு அரசியலில் இனி புழுதிபறக்கும்!

செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க தலைமை ஏக கடுப்பில் இருக்கிறதாம். சமீபத்தில் மோடியைச் சந்தித்த எடப்பாடி - பன்னீர் கூட்டணி, செந்தில் பாலாஜி மீது ஏற்கெனவே நிலுவையிலுள்ள வருமான வரி வழக்கைக் கையிலெடுத்து அவருக்கு நெருக்கடி கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. அதற்கு, பிரதமர் தரப்பில் மௌனமே பதிலாகக் கிடைத்திருக்கிறதாம். இந்தப் பஞ்சாயத்துக்கு நடுவே, மற்றொரு பஞ்சாயத்து தி.மு.க-வினரால் முன்வைக்கப்படுகிறது. “கொங்கு மண்டலத்தை கவனிக்கும் இனிப்பான அமைச்சர் ஒருவர் ஏற்கெனவே அ.தி.மு.க புள்ளிகளுடன் நெருக்கமாக இருந்தார். தேர்தல் செலவுக்குக்கூட அந்த முன்னாள் அமைச்சர்களின் உதவியை அவர் பெற்றார். இப்போது அவர் மூலமாகத் தங்கள்மீது எந்த நடவடிக்கையையும் தி.மு.க அரசு எடுத்துவிடாமல் தடுக்க, அந்த முன்னாள் அமைச்சர்கள் முயல்கிறார்கள். இதை தி.மு.க தலைமை கண்டித்துவைக்க வேண்டும்’’ என்று குமுறுகிறார்கள் கொங்கு ஏரியா தி.மு.க புள்ளிகள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism