Published:Updated:

'தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா... அண்ணாமலை பட்டியல் வரட்டும்!' - அமைச்சர் மனோ தங்கராஜ்

அமைச்சர் மனோதங்கராஜ்

``அண்ணாமலை சொன்னதுபோல பட்டியல் வரட்டும், தி.மு.க-வுக்கு மடியில் கனம் இல்லை, அதனால் மனதில் பயம் இல்லை” என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

Published:Updated:

'தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா... அண்ணாமலை பட்டியல் வரட்டும்!' - அமைச்சர் மனோ தங்கராஜ்

``அண்ணாமலை சொன்னதுபோல பட்டியல் வரட்டும், தி.மு.க-வுக்கு மடியில் கனம் இல்லை, அதனால் மனதில் பயம் இல்லை” என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

அமைச்சர் மனோதங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சித் தொடக்கவிழா நாகர்கோவில் பால் பண்ணை சந்திப்பில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மகேஷ் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைத்தார். இதில் முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் கலந்துகொண்டார். உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின், `உடன்பிறப்பாய் இணைவோம், தமிழராய் தலைநிமிர்வோம்’ என்ற முழக்கத்தோடு தி.மு.க புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்றுவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க முடிவுசெய்திருக்கிறோம்.

`வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. படுக்கை வசதிகளும் போதுமான அளவு இருப்பு இருக்கின்றன. நாம் கொரானா பரவலை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கிறோம். மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

தி.மு.க உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
தி.மு.க உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

2021-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறை ஒற்றை இலக்க எண்ணில்தான் வளர்ச்சி பெற்றிருந்தது. இப்போது அந்த இலக்கு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. 2023-ம் ஆண்டு 26.6 சதவிகித இலக்கை எட்டியிருக்கிறது. சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் 2 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறோம். கலைஞர் ஆட்சியில் ஐடி பிரிவில் புரட்சி இருந்துவந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிப் பிடித்திருக்கிறது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாகக் கூறியிருக்கிறார். நம்ம ஊரில், 'மாக்கான் கரைஞ்சு மழை பெய்யுமா?' என ஒரு பழமொழி சொல்வார்கள். `தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா?’ என்பதுதான் அந்தப் பழமொழி. இதையெல்லாம் நீங்களே புரிந்துகொள்ள வேண்டும்.

உறுப்பினர் படிவம் வழங்கல்
உறுப்பினர் படிவம் வழங்கல்

அண்ணாமலை சொன்னதுபோல பட்டியல் வரட்டும், தி.மு.க-வுக்கு மடியில் கனம் இல்லை, அதனால் மனதில் பயம் இல்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்ட மாநாட்டில் கலந்துகொண்டார். கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்திலும் கலந்துகொண்டார். சனாதனவாதிகள் சாதியால் மக்களைப் பிளவுபடுத்தி, மூடநம்பிக்கையை ஏற்படுத்தி, மக்களை நம்பவைத்து கழுத்தை அறுத்தார்கள் என்பதை மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சனாதனத்தை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டதால், அவர்கள் சனாதன ஆட்சி என்ற பேச்சைக் குறைத்திருக்கின்றனர். ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையைப் பார்த்து ஊரே சிரிக்கிறது. இதனால் ராகுல் காந்தியின் பெயருக்கு உயர்வுதான் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அடிப்படையே கிடையாது. வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு அப்பீல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது" என்றார்.