Published:Updated:

உதயநிதி போற்றி போற்றி!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் தோற்றுவித்த திமுக-வை, மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் வழிநடத்த வேண்டும்.

உதயநிதி போற்றி போற்றி!

அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் தோற்றுவித்த திமுக-வை, மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் வழிநடத்த வேண்டும்.

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி
“என்னைப் புகழ்ந்து பேசி சபை நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று முதல்வர் ஸ்டாலின் சொன்ன பிறகும், “உங்களைத்தானே புகழக் கூடாது. உங்கள் மகனைப் புகழலாம் அல்லவா?” என்பதுபோல தி.மு.க அமைச்சர்கள் உதயநிதியைப் போற்றிப் பாடிய துதிகள், கவிதை (?!) அர்ச்சனைகளில் சிலவற்றைப் பார்ப்போம்!
உதயநிதி போற்றி போற்றி!
உதயநிதி போற்றி போற்றி!

செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சர்

“பூவைப் போன்ற எழில் முகம். எப்போதும் நெஞ்சத்துப் பசுமை காட்டும் பொழில் முகம். தேனினும் இனிய குணம். வானினும் பெரிய மனம். பொல்லாத மனிதர்கள் வீசிடும் விமர்சன முட்கள்கூட பொன்னான உங்கள் முகத்தால் புற்களாய் மாறி கம்பளம் விரிக்கும். வில்லேந்தி ஆயிரம்பேர் களத்தில் நின்றாலும், இனிமையான சொல்லேந்தி உள்ளங்களை வென்றுவரும் எங்கள் சின்னவரே! நீங்கள், கலைஞரும் தலைவரும் கலந்தெடுத்த வார்ப்பு. அதனால்தான் தமிழகம் முழுவதும் உங்களின் மேல் ஈர்ப்பு. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை... திருவல்லிக்கேணியின் தங்கப்பிள்ளை... மாண்புமிகு அண்ணன் உதயநிதி அவர்களை வணங்குகிறேன்.”

உதயநிதி போற்றி போற்றி!

சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

“மதிப்புமிகு உதயநிதி, பெயரிலேயே விடியலின் வெளிச்சத்தை வைத்திருக்கிறார். சேப்பாக்கத்துக்கு ஒரு சிறப்பு உண்டு, அது தினந்தோறும் இரண்டு உதயத்தைப் பார்க்கிறது; ஒன்று, கடலுக்குக் கிழக்கே உதயமாகும் சூரிய உதயம்; இன்னொன்று, கரைக்கு மேலே உதயநிதி எனும் சூரியன் உதயமாகும் உதயம்! திரையில் கதாநாயகனாகவும், அரசியலில் கள நாயகனாகவும் எழுச்சி நடைபோடும் இளைஞர்களின் இதயமே!”

உதயநிதி போற்றி போற்றி!

ஆவடி நாசர், பால்வளத்துறை அமைச்சர்

“கனகவிசயன் தலையில் கல்லைச் சுமந்து சேர நாட்டில் கண்ணகிக்குக் கோட்டம் கட்டியவன் சேரன் செங்குட்டுவன், அது சிலப்பதிகாரம்! எங்கள் இளைய தளபதியே... உதயநிதியே... நீ தூக்கிக் காட்டிய ஒரு செங்கல்லில் புனித ஜார்ஜ் கோட்டையே கழகக் கோட்டையானது. இது செங்கலதிகாரம்! கல்லுக்கும் உனக்கும் என்ன உறவோ தெரியவில்லை... உன் படமான ‘ஒரு கல்... ஒரு கண்ணாடி...’ புரட்டிப்போட்டது தமிழ்த் திரையுலகை. ஒரே ஒரு செங்கல் புரட்டிப்போட்டது ஆட்சி அதிகாரத்தை. முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு தோனி வந்தால்தான் கூட்டம் வரும்... இப்போது நம் அருமைச் சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது. அந்த வரலாற்றையும் மாற்றிவிட்டாய்!”

உதயநிதி போற்றி போற்றி!

எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அமைச்சர்:

“கந்தபுராணத்திலே முருகனுக்குத் துணையாக வீரபாகு வந்தான். கம்ப ராமாயணத்திலே ராமனுக்குத் துணையாக அனுமன் வந்தான். மகாபாரதத்திலே தர்மனுக்குத் துணையாக கண்ணன் வந்தான். ராஜராஜ சோழனுக்குத் துணையாக ராஜேந்திர சோழன் இருந்ததுபோல, இந்தக் கழக ஆட்சியைக் கட்டி முடிப்பதற்கு என் தளபதிக்கு துணையாக இருந்தது என் தம்பி உதயநிதி என்று சொன்னால் அது மிகையாகாது!”

உதயநிதி போற்றி போற்றி!

காந்தி, கைத்தறி, துணிநூல்துறை அமைச்சர்

“தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்பார்களே... அதுபோல, ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால், அவருடைய மகன் 32 அடி பாய்வதுபோல் செயலாற்றுகிறார்.”

உதயநிதி போற்றி போற்றி!

மூர்த்தி, வணிக வரித்துறை அமைச்சர்

“அன்புக்கு இலக்கணமாம் ஆருயிர் உதயநிதி அவர்களே... நீங்கள் நடித்ததோ, ‘ஒரு கல்... ஒரு கண்ணாடி...’ நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது... நீங்கள் நடித்ததோ ‘கெத்து’... நீங்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து. எதிரிகளையும் தன் சிரிப்பால் ‘நண்பேன்டா’ என்று சொல்லவைக்கும் அன்பன் நீங்கள்! உங்கள் நடிப்பில் உருவானதோ ‘மனிதன்.’ நிஜத்தில் நீங்கள்தான் மாமனிதன். நீங்கள் ‘நிமிர்ந்த’போது தமிழ்நாட்டில் இளைஞர்கள் நிமிர்ந்தார்கள். ‘இப்படை வெல்லும்’ என்றீர்கள். இப்படைதான் எப்போதும் வெல்லும் என்பதை நித்தமும் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். பொதுவாக உங்கள் மனசு தங்கம். ‘சரவணன் இருக்க பயமேன்’ என்பது நீங்கள் நடித்த படம். ‘உதயநிதி இருக்க பயமேன்’ என்பது தமிழகத்து இளைஞர்களின் எண்ணம். `நெஞ்சுக்கு நீதி’யின் அடுத்த பாகமாகவே வாழ்கிறீர்கள்.”

உதயநிதி போற்றி போற்றி!

ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

“அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் தோற்றுவித்த திமுக-வை, மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் வழிநடத்த வேண்டும். அவரது அறிக்கையைப் பார்த்தேன். அப்படியெல்லாம் சொல்லக் கூடாது; முதலமைச்சருக்குப் பிறகு நீங்கள்தான் தமிழகத்தை வழிநடத்த வேண்டும்!”

உதயநிதி போற்றி போற்றி!

அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

“நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சேப்பாக்கம் தொகுதி மக்களுமே நினைக்கிறார்கள்... எங்களுக்கு மட்டுமே இவ்வளவு பண்ணுகிறாரே, இவர் உயரிய பொறுப்புக்கு வந்தால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் பயனுள்ளவராக இருப்பாரே என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய தாத்தா, அப்பாவினுடைய ‘ஜீன்’ போலவே மக்களுக்காக உழைக்கும் சின்சியாரிட்டியை வெளிப் படுத்துகிறார். ஓர் அமைச்சராக மட்டுமல்ல, சிறிய வயதிலிருந்து பார்த்துவரும் உற்ற நண்பனாகவும் சொல்கிறேன் உதயநிதி அமைச்சராக வேண்டும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism