Published:Updated:

`ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிந்தே இது நடக்கிறதா?'- ஆதாரத்துடன் கூறும் தி.மு.க எம்.எல்.ஏ.

செ.சல்மான் பாரிஸ்

``தண்ணீர் திருட்டு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இது தெரியுமா அல்லது அவருக்குத் தெரிந்தே இது நடக்கிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்''

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

``ராட்சத குழாய்கள் மூலம் அதிகாரிகள் துணையுடன் தண்ணீர் திருடப்படுகிறது. துணை முதலமைச்சரின் மாவட்டத்தில் நடைபெறும் இந்தத் திருட்டை அரசு கண்டுகொள்ளவில்லை'' என்ற குற்றச்சாட்டை மதுரை மத்திய தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எழுப்பியுள்ளார்.

ஆதாரத்துடன்  விளக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
ஆதாரத்துடன் விளக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தண்ணீர் திருடப்படும் ஆதாரங்களைக் காட்டி இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், ``மதுரை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமான வைகை அணைக்கு, பெரியாறு அணையிலிருந்து வரக்கூடிய தண்ணீர் திருடப்படுவதை தடுக்க அரசு அதிகாரிகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடந்த 2016-ம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்புகார் பற்றி கடிதம் எழுதினேன். அப்போது அவர் எடுத்த நடவடிக்கையின் பயனாக ஒரே நாளில் 160 கன அடி தண்ணீர் அதிகரித்தது. அவரது மறைவுக்குப் பின்னர் மறுபடியும் தண்ணீர் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதால் தொடர்ந்து துறைச் செயலருக்கும், அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

என் தொகுதி மக்கள் தண்ணீருக்காக தினமும் படும் அவதியை நேரடியாகக் காண்கிறேன். முறையான தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே திருடப்படுவதால் மதுரை நகருக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.

திருடப்படும் தண்ணீரை படத்துடன் காட்டும் எமெலே
திருடப்படும் தண்ணீரை படத்துடன் காட்டும் எமெலே

இது சில இடங்களில் மட்டுமல்ல, திட்டமிட்டே வணிக லாபத்துக்காக பெரியாறு அருகிலுள்ள நஞ்சை நிலங்களில் பெருமளவில் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் திருடுகின்றனர். இதற்கு ஆளுங்கட்சியினர் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை அதிகாரிகளும் துணை போகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், இடையில் கூடலூர், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், சீலையம்பட்டி, பி.சி.பட்டி, தேனி மக்களின் குடிநீருக்கும் அங்குள்ள பகுதிகளின் விவசாயத்திற்கும் போக தண்ணீரின் அளவு முழுமையாக வைகை அணைக்கு வருவதில்லை. இது குறித்து விசாரித்து விரிவான அறிக்கையை பொதுப்பணித்துறை செயலருக்கும், மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுப்பணித்துறை வைகை-பெரியாறு பிரிவு செயற்பொறியாளருக்கும் அனுப்பினேன்.

`ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிந்தே இது நடக்கிறதா?'- ஆதாரத்துடன் கூறும் தி.மு.க எம்.எல்.ஏ.

தண்ணீர் திருட்டு தற்போது நடைபெறவில்லை என பொதுப்பணித்துறை வைகை-பெரியாறு பிரிவு செயற்பொறியாளர் உட்பட அனைவருமே உண்மைக்கு மாறாக தகவல் தெரிவித்தனர். இத்தண்ணீர் திருட்டு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இது தெரியுமா, அல்லது அவருக்கு தெரிந்தே இது நடக்கிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்'' என்றார்.