அலசல்
Published:Updated:

“அமைச்சர் ஜெயக்குமார் உண்மையிலேயே மீனவ நண்பனா?”

அனிதா ராதாகிருஷ்ணன் - அமைச்சர் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
அனிதா ராதாகிருஷ்ணன் - அமைச்சர் ஜெயக்குமார்

கொதிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

“கலக்கிட்ட அனிதா!” - மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற மீன்வளத் துறை மானிய கோரிக்கை விவாதத்துக்குப் பிறகு, திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணனை அருகில் அழைத்து இப்படித்தான் பாராட்டினாராம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். காரணம், சட்டமன்றத்தில் அனிதாவுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்குமான ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம். இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனைச் சந்தித்தோம்.

“அமைச்சர் ஜெயக்குமாருக்கும் உங்களுக்குமான விவாதம் பெரிதாக வெடித்துள்ளதே?”

“கடந்த நான்கு வருடங்களில் என்றாவது ஒரு நாள் அமைச்சர் ஜெயக்குமார் தென்மாவட்ட மீனவ கிராமங்களுக்கு வந்துள்ளாரா? மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவதற்கும் பின்னுவதற் கும் மீன் வலைக்கூடங்களைப் பயன்படுத்து கின்றனர். அதேபோல் மீன்களை ஏலம் விடுவதற்கு விற்பனைக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் கடலுக்கு அருகிலேயே இருப்பதால், காலப்போக்கில் கடல் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன.இதற்கு மத்திய அரசுடன் கலந்தாலோசித்து ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும். இந்தப் பிரச்னையில் ஜெயக்குமார் என்ன சாதித்தார்?

மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் ஏற்றி நிறுத்தி வைப்பார் கள். திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டு படகுகள் தரைக்குள் அமுங்கிவிடுகின்றன. இதை வெளியே எடுப்பதற்குள் பெரும்பாடாகிவிடுகிறது. படகுகளை நிறுத்த மீனவ கிராமங்களில் மினி துறைமுகம் அமைத்துத் தர பலமுறை கேட்டும் ஜெயக்குமார் கண்டுகொள்ளவில்லை. அவர் சென்னை மாவட்ட அமைச்சராக மட்டுமே செயல் படுகிறார். 15 லட்சம் மீனவர்கள் தமிழக மெங்கும் உள்ளனர். அவர்களைப் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.’’

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

“சரி, முதல்வரிடம் என்ன விவாதம்?”

“தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு 19.8.2013-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். இதுகுறித்து மாநிலங்களவையில் ஜூலை, 2017-ல் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காக கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவ தற்கு நாங்கள் போராடிக் கொண்டி ருக்கிறோம். இது ஊடகங்கள் உட்பட உலகுக்கே தெரியும்.

ஆனால், ‘இஸ்ரோ தலைவர் சிவன் கன்னியாகுமரி மாவட்டத் தைச் சேர்ந்தவர், பக்கத்து ஊர்க்காரர் என்பதால்தான் இந்தத் திட்டத்தை குலசேகரப் பட்டினத் துக்கு கொண்டுவந்துள்ளார்’ என்று தவறான, மிகவும் அபத்தமான கருத்தை முதல்வர் சட்டமன்றத்தில் பேசினார். அதனால் தான் எனக்கும் முதல்வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.”

“அமைச்சர் ஜெயக்குமாரை பதவி விலகக் கூறியுள்ளீர்களே?”

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

“ஆமாம். டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2-ஏ, குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட முக்கிய வி.ஐ.பி-கள் யாரும் சிக்கவில்லை. அவர்களை இந்த ஆட்சியாளர்கள் காப்பாற்றிவருகின்றனர்.எனவே, ஊழலைத் தடுக்க தவறிய அமைச்சர் ஜெயக்குமாரும், அதை கண்காணிக்கத் தவறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பதவி விலக வேண்டும். அப்போதுதான் விசாரணை நேர்மையாக நடைபெற்று, உண்மை வெளிச்சத்துக்கு வரும்.”

“சாகர் மாலா திட்டத்தாலும் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்படுகிறதே?”

“அந்தத் திட்டம் 2003-ம் ஆண்டில் வாஜ்பாய் அரசால் கொண்டுவரப்பட்டது. கடும் எதிர்ப்பு காரணமாக அப்போது கிடப்பில் போடப்பட்டது. 2009-ம் ஆண்டில் சட்ட முன்வரைவு கொண்டுவரப் பட்டபோதும் அரசியல் கட்சி களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. மீனவர் களுக்கும் மீனவ கிராமங்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்துக்கு 2015, மார்ச் 25-ல் மோடி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, நமது மீனவர்கள் 12 கடல் மைல் எல்லைக்குள்தான் மீன் பிடிக்க முடியும். ஆனால், வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று மீன் பிடிப்பதற்கும், கப்பலிலேயே தங்கியிருந்து மீன்களைப் பதப்படுத்தி வேறு கப்பல்களுக்கு மாற்றுவதற்கும் மத்திய அரசு வழிவகை செய்கிறது. சூரை மீன் பிடிப்பதற்கு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கி, நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய் கிறது. இந்தத் திட்டத்தால் மீனவ கிராமங்கள் பலவற்றையும் காலி செய்ய வேண்டியிருக்கும்.

மீனவர்களின் பதிவு, உரிமம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மாநில மீன்வளத் துறையிடமிருந்து பறிக்கப்பட்டு, கடலோர காவல்படைக்கு அளிக்கப்படும். சாகர் மாலா திட்டத்தால் நமது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டம் 1983 செல்லாததாகிவிடும். ‘எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மீனவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். நீட் விவகாரத்திலும் இதே வசனத்தைத்தான் பேசினார். அமைச்சர் ஜெயக்குமார், தன்னை மீனவ நண்பன்... மீனவர்களின் பிரதிநிதி என்றெல்லாம் அடிக்கடி பிரஸ்தாபித்துக் கொள்கிறார். ஆனால், அவரின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள், அவர் உண்மையிலேயே மீனவ நண்பனா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.’’