Published:Updated:

`ஆயிரம் இரவுகள் வந்தாலும் அந்த இரவை மறக்க முடியாது!' - சர்ச்சையில் சிக்கிய தி.மு.க எம்.எல்.ஏ.

JAYAVEL B

தொகுதிப் பிரச்னைகளைப் புகழேந்தி பேச ஆரம்பித்ததும் முன்னாள் அ.தி.மு.க எம்.பி மரகதம் குமரவேல், ``இதையெல்லாம் இங்கே பேசாதீங்க…” என எதிர்ப்பு தெரிவித்தார்.

MLA Pugazhenthi
MLA Pugazhenthi

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள 11 பள்ளிகளைச் சேர்ந்த 3,700 மாணவர்கள் விழாவுக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவில் அமைச்சர் பெஞ்சமின், காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வழக்கமாக, அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அரசு விழா மேடைகளில் தொகுதிப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவார் மதுராந்தகம் தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி. தொகுதி தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைப்பார். அதேபோல், லேப்டாப் வழங்கும் விழாவிலும் பேசப் போய் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

Dmk, admk fight
Dmk, admk fight

``நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் வாக்களித்து அந்த வாக்குகள் எண்ணப்பட்டு, நான் வெற்றிபெற்ற சான்றிதழ் இந்த இடத்தில்தான் வழங்கப்பட்என்பதால், இந்த இடத்தை என்னால் மறக்க முடியாது. ஒரு பெண்ணைப் பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும், வாழ்வின் கடைசிக் காலத்தை நெருங்குகிற நேரத்தில் அவர் நினைத்து நினைத்து மலைத்துப் போவது முதல் இரவு என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை, ஆயிரம் நிகழ்வுகளைச் சந்தித்துக்கொண்டிருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தைத் தந்தது இந்தப் பள்ளியே என்பதை நான் மறக்க மாட்டேன்.

மதுராந்தகம் ஏரியைத் தூர்வார வேண்டும் என நான் சட்டமன்றத்தில் சொன்னேன். சட்டமன்றத்தில் முதலமைச்சரும் தூர்வாரித் தரப்படும்னு சொன்னார்” எனத் தொகுதிப் பிரச்னைகளைப் புகழேந்தி பேச ஆரம்பித்ததும் முன்னாள் அ.தி.மு.க எம்.பி மரகதம் குமரவேல் ``இதையெல்லாம் இங்கே பேசாதீங்க…” என எதிர்ப்பு தெரிவித்தார்.

Laptop Presenting event
Laptop Presenting event

``இது தொகுதிப் பிரச்னைங்க. ஏரியைத் தூர் வாருவேன்னு சொன்னாங்க. தூர்வாரப்படணும். அமைச்சரிடம் சொல்லி தூர்வாரப்படணும்னு சொல்றேன்” எனக் கோபமாகப் பதில் அளித்தார். மேடைக்கு எதிர்புறம் இருந்த ஆளும் கட்சியினரும் எம்.எல்.ஏ பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.