Published:Updated:

வேலூர்: `அழைப்பு வரும் என்று காத்திருந்தேன்!’ - முதல்வர்மீது கொதித்த துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

``முதலமைச்சரைக் கண்டிக்கிறோம். `என்னை விட்டுவிட்டு ஆய்வுக் கூட்டம் நடத்த மாட்டார்’ என்று நம்பிக்கையாக இருந்தேன்’’ என்கிறார் துரைமுருகன்.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதிகார மட்டத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், தி.மு.க-வைச் சார்ந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்களை மட்டும் புறக்கணித்துவிட்டு, அ.தி.மு.க-வினரை அழைத்து கட்சிக் கூட்டம்போல் நடத்தியிருப்பதாக முதலமைச்சருக்கு கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார் தி.மு.க பொருளாளர் துரைமுருகன். இது தொடர்பாக இன்று மாலை 5:30 மணியளவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய துரைமுருகன், ``எங்களுடைய மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வுசெய்ய வருகிறார் என்று அறிந்தவுடன் முதலில் மகிழ்ச்சியடைந்தோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருக்கும் எங்களையும் அழைப்பார்கள் என்று இன்று காலை வரை எதிர்பார்த்திருந்தோம். எங்களுக்கு அழைப்பு இல்லை என்று பின்னரே தெரியவந்தது. சரி, அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் ஆய்வாக இருக்குமோ என்னமோ... அதனால்தான் எம்.பி., எம்.எல்.ஏ-க்களைக் கூப்பிட மாட்டார்கள் என்று நினைத்து அமைதியாகிவிட்டோம்.

வேலூர்: `சீக்ரெட் பிளான்; அழைத்துச் சென்ற துரைமுருகன்!’ - திமுக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்

பின்னரே செய்தி வந்தது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து கூட்டத்தில் இருக்கையும் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது, அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. அரசாங்கத்தின் நடைமுறைகளை முதலமைச்சர் ஆய்வுசெய்வது தவறில்லை. ஆனால், அ.தி.மு.க-வைச் சார்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு நடத்தியிருப்பதுதான் கண்டிக்கத்தக்கது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், தி.மு.க பிரதிநிதிகள்தாம் அதிகமாக இருக்கிறோம்.

துரைமுருகன்
துரைமுருகன்

முதலமைச்சர் நடத்தியது, அரசாங்க ஆய்வுக் கூட்டமா அல்லது அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டமா என்று தெரியவில்லை. அ.தி.மு.க-வினர் பலபேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறியுள்ளனர். திட்டமிட்டு தி.மு.க பிரதிநிதிகளை ஒதுக்கியுள்ளனர். இதுவா நிர்வாகம்... ஜனநாயக முறை... நிர்வாக நடைமுறை? முதலமைச்சரைக் கண்டிக்கிறோம். `என்னை விட்டுவிட்டு ஆய்வுக் கூட்டம் நடத்த மாட்டார்’ என்று நம்பிக்கையாக இருந்தேன். ஆனால், திருட்டுத் தாலி கட்டுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? கொரோனாவைக் கட்டுப்படுத்தியிருப்பதாக முதலமைச்சர் புள்ளிவிவரங்களோடு சொல்லியிருப்பது பொய்க் கணக்கு’’ என்று சீறினார்.

அடுத்த கட்டுரைக்கு