அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க சங்கிகளின் சொம்பு! - சொல்கிறார் பரந்தாமன் எம்.எல்.ஏ

 பரந்தாமன் எம்.எல்.ஏ
பிரீமியம் ஸ்டோரி
News
பரந்தாமன் எம்.எல்.ஏ

தி.மு.க-வில் இருப்பவர்கள் போலக் கட்சியின் மீது பற்றும் கொள்கைப்பிடிப்பும் கொண்டவர்கள் வேறெந்தக் கட்சியிலும் இல்லை.

தி.மு.க அணிகளுக்கான நிர்வாகிகள் நியமனத்தில் எழுந்திருக்கும் சர்ச்சைகள், அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், ஆளுநரிடம் அ.தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து எழும்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“தி.மு.க-வில் அணிகள் தொடங்கி அமைச்சரவை வரை மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே முன்னுரிமை தரப்படுவதாகக் கட்சி நிர்வாகிகளே குற்றச்சாட்டு வைக்கிறார்களே?”

“ஒருவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் தி.மு.க-வில் சேர்ந்த பிறகு, ‘மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்’ என்று சொல்வது தவறானது. கட்சித் தலைமை, கொள்கைமீது நம்பிக்கை வைத்து ஒருவர் இணையும்போது அவரின் உழைப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொறுப்பு வழங்குவது இயல்பானதுதான். அதைத்தான் தலைவரும் செய்கிறார்.”

“ஆனால், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்துவரும் நிர்வாகிகளைக் குறைத்து மதிப்பிடுவதுபோல இருக்கிறதே?”

“தி.மு.க-வில் இருப்பவர்கள் போலக் கட்சியின் மீது பற்றும் கொள்கைப்பிடிப்பும் கொண்டவர்கள் வேறெந்தக் கட்சியிலும் இல்லை. எனவேதான் கட்சியில் அவரவர் உழைப்புக்கேற்ற மரியாதையைக் கொடுத்துக்கொண்டே வருகிறது தலைமை. இளையவர்களைப் பெருமளவு இணைத்துக்கொண்டு, மூத்தவர்களின் ஆலோசனையோடு செயல்படுகிறோம். இதுதான் தி.மு.க-வின் வளர்ச்சிக்கான சூத்திரம்.”

“முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னார், சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அமைச்சர்களின் அடாவடிப் பேச்சு நின்றபாடில்லையே?”

“எல்லோரும் பொறுப்புணர்வோடுதான் இருக்கிறார்கள். தலைவர் சொன்னதை மனதில் வைத்துத்தான் பேசுகிறார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், நிகழ்வுகளில் வாய் தவறி வந்த வார்த்தைகள் பெரிதாக்கப்படுகின்றன. அவற்றை உள்நோக்கத்தோடு பேசப்பட்டதாக, தலைவரின் உத்தரவை மீறி நடந்துகொண்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. யானைக்கும் அடி சறுக்கும். ஆனால், சிலர் இதைவைத்து அநாகரிக அரசியல் செய்கிறார்கள்.”

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க சங்கிகளின் சொம்பு! - சொல்கிறார் பரந்தாமன் எம்.எல்.ஏ

“யானைக்கு அடிக்கடி சறுக்கிக்கொண்டே இருப்பதால்தானே இந்தக் கேள்வியே எழுகிறது?”

“பொதுமக்களை பாதிக்கும் வகையில் எந்த அமைச்சரின் பேச்சும் இருக்கிறதா... அரசுக்கோ, தனிமனித உரிமைக்கோ எதிரானதாக இருக்கிறதா... அப்படி ஏதாவது இருந்தால் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்.”

“அமைச்சர்கள் பொன்முடி, பி.டி.ஆரின் பேச்சுகள் உங்கள் கவனத்துக்கும் வந்திருக்கும்தானே?”

“இன்றைய சூழலில் கழிவறையும் படுக்கையறையும் மட்டும்தான் கேமரா இல்லாத இடங்களாக இருக்கின்றன. எது வீடியோவாக சிக்கினாலும், அதில் உள்நோக்கத்தோடு பேசப்படாதவைகூட இங்கே பெரிதுபடுத்தப்படுகின்றன.”

“ ‘திராவிட மாடல் ஒரு தோல்வியடைந்த மாடல்’ என எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ `திராவிடம்’ என்பதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியையும் சேர்த்துத்தான் நாங்கள் சொல்கிறோம். தி.மு.க அளவுக்கு இல்லையென்றாலும், அவர்களும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஓரளவு பங்காற்றியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதைப் பெருந்தன்மையோடு எங்கள் தலைவரும் சொல்கிறார். இந்த விமர்சனத்தின் மூலம் தன்னுடைய ஆட்சி திராவிடச் சித்தாந்தத்தின் வழியில் நடக்கவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி தன் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் ‘எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க சங்கிகளின் சொம்பு’ என்ற குட்டு வெளிப்பட்டிருக்கிறது.”

“எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், தனிமனிதத் தாக்குதலாக இருக்கிறதே?”

“எடப்பாடி பொய்யைப் பரப்புகிறார். ‘விடியா அரசு... விடியா அரசு’ எனத் தனிமனிதத் தாக்குதலைச் செய்கிறார். ‘தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றதை டி.வி-யில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ எனச் சொன்னவருக்கு எங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.”

“உதயநிதியை வரவேற்க கட்சிக்காரர்களுக்குள் நடக்கும் தள்ளு முள்ளுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கோயிலுக்குச் செல்லும்போது பூசாரி கொடுக்கும் பிரசாதத்தை வாங்க தள்ளு முள்ளு நடக்குமில்லையா... அப்படித்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். தி.மு.க மாதிரியான வளர்ந்த கட்சியின் எதிர்காலமாகப் பார்க்கப்படும் இளம் தலைவர் வரும்போது தொண்டனின் கண் அந்தத் தலைவரின்மீதுதான் இருக்குமே தவிர, பக்கத்தில் இருப்பவர்களைக் கண்டுகொள்ள மாட்டான். அப்படியான சந்தர்ப்பத்தில் தள்ளு முள்ளு நடப்பதெல்லாம் இயற்கையானதுதான்.”

“அப்படியானால் நீங்கள் அறிவாலயத்தைக் கோயிலாகவும், உங்கள் தலைவர்களை தெய்வமாகவும் பார்க்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா?”

“ஆலயம் என்றாலே வழிபாடு என எடுத்துக்கொண்டால் பகுத்தறிவுக்கான ஆலயம் அறிவாலயம்தான். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர்தான் மும்மூர்த்திகள்!”

“மின்கட்டண உயர்வு, சொத்து வரி, பால் விலை உயர்வு என மக்கள்மீது தி.மு.க அரசு மும்முனைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறார்களே?”

“விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்படவில்லை. ஒருவேளை அப்படி பாதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் மக்கள் வீதிக்கு வந்து போராடியிருப்பார்கள். உண்மையில் மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சியினர்தான் இதை அரசியலாக்குகிறார்கள்.”

“சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கிடப்பிலுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வாங்க என்ன முயற்சி மேற்கொண்டிருக்கிறீர்கள்?”

“என்ன முயன்றாலும் தனக்கிருக்கும் அதிகாரத்தால், ‘ஆளுநர்’ என்ற பெயரில் அரசியல் செய்துகொண்டிருக்கும் ஆர்.என்.ரவி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். விரைவில் நீதிமன்றத்தை நாடி நிலுவையிலுள்ள மசோதாக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்!”