Published:Updated:

கே.பி. சங்கர் ஏன் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்? - பின்னணியில் பல கதைகள்!

கே.பி. சங்கர் - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி. சங்கர் - ஸ்டாலின்

மாதவரம் சுதர்சனத்துக்கும், கே.பி.சங்கருக்கும் இடையிலான மோதல்தான் இதன் பின்னணி. இது நேற்று தொடங்கியதல்ல.

கே.பி. சங்கர் ஏன் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்? - பின்னணியில் பல கதைகள்!

மாதவரம் சுதர்சனத்துக்கும், கே.பி.சங்கருக்கும் இடையிலான மோதல்தான் இதன் பின்னணி. இது நேற்று தொடங்கியதல்ல.

Published:Updated:
கே.பி. சங்கர் - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி. சங்கர் - ஸ்டாலின்

சென்னை மாநகராட்சிப் பொறியாளரைத் தாக்கியதாக எழுந்த புகாரையடுத்து, திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கரை, அவர் வகித்துவந்த பகுதிச் செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இந்நிலையில் பொறியாளரைத் தாக்கியதாக சென்னை மாநகராட்சி சார்பில் கே.பி.சங்கர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.எல்.ஏ-வால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பொறியாளர் தரப்பிலும், காவல்துறையில் புகாரளிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘எம்.எல்.ஏ - மாவட்டச் செயலாளர் தரப்புக்கிடையேயான மோதல்தான், பதவிப் பறிப்பின் பின்னணி’ என்கிறார்கள் வடசென்னை உ.பி-க்கள்!

‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதால், பகுதிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்’ என்று மட்டுமே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன். எனினும், ஆங்கில நாளிதழ்களில் மாநகராட்சி அதிகாரியை அடித்தார் என்று செய்திகள் வெளியாகின. இதன் பின்னணி குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம். “சம்பவம் நடந்த அன்று, கமிஷன் குறித்த பிரச்னையில்தான் மாநகராட்சி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் எகிறினார் சங்கர். அவர்களோ, ‘மாவட்டச் செயலாளர்களை கவனித்துவிட்டோம்’ என்று சொல்ல, ‘நான்தான் தொகுதி எம்.எல்.ஏ. என்னை மதிக்க மாட்டீங்களா?’ என்று சங்கரும், அவரது ஆட்களும் சண்டையிட்டனர். பொறியாளரை சங்கர் தாக்கியதாகவும் சொல்கிறார்கள். பொறியாளர், கமிஷனரிடம் முறையிட... அவர் மூலம் நேரடியாக முதல்வர் காதுக்கு விவகாரம் சென்றதால், உடனடி ஆக்‌ஷன் எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

கே.பி. சங்கர் ஏன் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்? - பின்னணியில் பல கதைகள்!

கே.பி.சங்கரை நன்கு அறிந்த கட்சிப் புள்ளிகள் சிலரிடம் விசாரித்தோம். அவர்களோ வேறுவிதமாகச் சொல்கிறார்கள், “மாதவரம் சுதர்சனத்துக்கும், கே.பி.சங்கருக்கும் இடையிலான மோதல்தான் இதன் பின்னணி. இது நேற்று தொடங்கியதல்ல. 2021 சட்டமன்றத் தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியை சங்கர் மட்டுமின்றி, கிழக்குப் பகுதிச் செயலாளர் தனியரசுவும் கேட்டார். தனக்குத் தோதான ஒருவர் வேண்டும் என்பதால், மா.செ என்கிற முறையில் சுதர்சனம், தனியரசுவை ரெஃபர் செய்தார். எனினும், கே.பி.சங்கருக்குத்தான் சீட் கொடுக்கப்பட்டது. கே.பி.சங்கரின் அண்ணன் கே.பி.பி.சாமி, கனிமொழியின் தீவிர ஆதரவாளர். இதனால், கனிமொழி தனக்கான கோட்டாவில் கே.பி.சங்கரை ரெக்கமண்ட் செய்தார். சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டதால், புதியவர்களை நிறுத்தி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று எண்ணிய ஸ்டாலினும் சங்கரைத் தேர்வுசெய்தார். இதுதான் முதல் மோதல்.

ஆட்சி அமைந்த பிறகு, கமிஷன் வடிவில் அடுத்த மோதல் வெடித்தது. தி.மு.க-விலும் அ.தி.மு.க-விலும் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் பலர், எம்.எல்.ஏ-க்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். மா.செ-வும் எம்.எல்.ஏ-வும் வேறு வேறு நபராக இருந்தால், பொதுவாக ஒப்பந்ததாரர்கள் மா.செ-வை மட்டுமே கவனிப்பார்கள். திருவொற்றியூர் தொகுதியிலும் அதுதான் நடந்தது. கட்டட, சாலைப் பணிகளுக்காக எம்.எல்.ஏ என்கிற முறையில் சங்கரின் ஆதரவாளர்கள் மாநகராட்சி, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் ‘மா.செ-வை கவனித்துவிட்டோமே!’ என்றே பதில் வர, இது சங்கர் தரப்பை மேலும் சூடாக்கியிருக்கிறது.

சமீபத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கவுன்சிலர் வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. திருவொற்றியூர் தொகுதிக்குள் வரும் 18 மாநகராட்சி வார்டுகளையும் முழுமையாகத் தன்னிடம் கொடுத்தால், ஜெயிக்கவைத்துக் காட்டுகிறேன் என்று சங்கர் தரப்பில் கேட்டுள்ளனர். ஆனால் சுதர்சனம் தரப்பு அதற்கு மறுத்ததோடு, வெறும் இரண்டு வார்டுகளைக் கொடுப்பதாகக் கூறியுள்ளது. ஏற்கெனவே புகைந்துகொண்டிருந்த பகை, இதன் மூலம் மேலும் பற்றிக்கொண்டது. சங்கரை வீழ்த்த நேரமும், தோதான காரணமும் பார்த்துக்கொண்டிருந்த சுதர்சனம் தரப்பு, இந்தச் சம்பவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.

பொதுவாக சாலை அமைக்கும்போது, ஏற்கெனவே இருக்கும் சாலையை மில்லிங் செய்துவிட்டு அதன்மீதுதான் புதிய தார் சாலையை அமைக்க வேண்டும் என முதல்வரே உத்தரவிட்டுள்ளார். ஆனால், திருவொற்றியூர் நடராஜன் சாலையில், மாநகராட்சி அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் பழைய சாலையின் மீதே புதிய சாலை அமைக்கத் தொடங்கினார்கள். அதை சங்கர் தரப்பில் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது உருவான பிரச்னையைப் பெரிதுபடுத்தி, மாநகராட்சி அதிகாரிகள் கமிஷனரிடம் புகார் செய்துள்ளனர். மா.செ தரப்பில் கட்சிரீதியாகவும், கமிஷனர் மூலம் நிர்வாகரீதியாகவும் புகார்கள் சென்றதால் தலைமை நடவடிக்கை எடுத்துவிட்டது” என்று முடித்தனர்.

கே.பி. சங்கர் ஏன் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்? - பின்னணியில் பல கதைகள்!

சுதர்சனத்திடம் இது குறித்துக் கேட்டோம். “சங்கர் என்ன காரணத்துக்காகக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்குள் எந்த மனவருத்தமும் இல்லை. தலைமைக்கு, சங்கர் குறித்த எந்தப் புகாரும் என் மூலம் செல்லவில்லை. இதுதான் உண்மை!” என்றார் உறுதியாக.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் கேட்டோம். “கே.பி.சங்கர் பதவி நீக்கத்துக்கான காரணங்களை வெளிப்படையாக அறிவிக்கவேண்டிய அவசியமில்லை. கட்சி விதிகளை மீறியிருப்பதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்குள் இது பற்றி விசாரிப்பதற்கென குழு அமைத்துள்ளோம். சுதர்சனத்துக்கும் சங்கருக்கும் இடையேயான பிரச்னை என்றால், மொத்த பேரையும் அல்லவா நீக்கியிருக்க வேண்டும்? அதெல்லாம் யூகங்கள் மட்டுமே!” என்றார்.

இறுதியாக, எம்.எல்.ஏ கே.பி.சங்கரைத் தொடர்புகொண்டோம், “கமிஷன் விவகாரமெல்லாம் ஒன்றுமில்லை. மில்லிங் செய்யாமல் சாலை அமைப்பதாக மக்கள் கூறியதால், நேரில் ஆய்வுக்குச் சென்றேன். எம்.எல்.ஏ என்கிற முறையில் என்னை மதிக்காமல் மாநகராட்சிப் பொறியாளர் பிரச்னை செய்ததால், லேசாகத் தள்ளிவிட்டேன்... அவ்வளவுதான். மற்றபடி அடிக்கவில்லை. இதை மாவட்டச் செயலாளர் சுதர்சனம், பகுதிச் செயலாளர் தனியரசு என இருவரும்தான் பூதாகரமாக்கித் தலைமையிடம் போட்டுக் கொடுத்துள்ளனர். சுதர்சனம் சாதிரீதியாகவே செயல்பட்டுவருகிறார். தலைவரைச் சந்தித்து நடந்ததைச் சொன்னேன். மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுக்கச் சொன்னார்கள், அதையும் கொடுத்துவிட்டேன்” என்றார்.

தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்பும் இந்த விஷயத்துக்குள், இன்னும் என்னென்ன விவகாரமெல்லாம் இருக்கிறதோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism