திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினராகவும், தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் க.செல்வராஜ். இவரின் பெயரைப் பயன்படுத்தி, சபரிவாசன் என்பவர் பணம் பறிக்கும் நோக்கத்தோடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு பெண்ணிடம் ரூ.2 லட்சம் பெற்றிருக்கிறார் என திருப்பூர் தெற்கு உதவி காவல் ஆணையரிடம் செல்வராஜ் புகார் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரில், ``என் பெயரைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்தோடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித்தருவதாக சபரிவாசன் என்பவர் மோசடியில் ஈடுபட்டுவருகிறார். இந்த மோசடியில் ஈடுபட்டவரைக் கைதுசெய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்ன நடந்தது என எம்.எல்.ஏ செல்வராஜிடம் பேசினோம். ``நாள்தோறும் உதவிக்காக என்னைத் தேடிப் பலர் வருகின்றனர். அவர்களுக்கு சிபாரிசுக் கடிதம் கொடுப்பது என் வழக்கம். அதன்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு வேண்டும் என்று வந்தவர்களுக்கு அண்மையில் சிபாரிசுக் கடிதம் கொடுத்தேன். அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித்தருவதாக, சபரிவாசன் என்பவர் திருப்பூர் மாநகராட்சி 51-வது வார்டைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் பெற்றிருக்கிறார்.
இது அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சிக்காரர் மூலம் எனக்குத் தெரிந்தது. பண மோசடி செய்த நபரின் செல்போனுக்கு அழைத்து `யார் உங்களிடம் பணம் வாங்கச் சொன்னார்கள்?’ என்று கேட்டால், அந்த நபர், `எம்.எல்.ஏ செல்வராஜ்தான் பணம் வாங்கச் சொன்னார். நீங்கள் சென்று சிபாரிசுக் கடிதம் கேட்டால் தர மாட்டார். எனக்கு மட்டும்தான் சிபாரிசுக் கடிதம் தருவார்' என்று சொல்கிறார். என் பெயரைச் சொல்லி யார் பணம் கேட்டாலும், கொடுத்து ஏமாறக் கூடாது என்பதற்காகத்தான் புகார் அளித்திருக்கிறேன்’’ என்றார்.

இது குறித்துப் பணம் பெற்றதாகக் கூறப்படும் சபரிவாசனிடம் பேசுகையில், ``தி.மு.க-வில் 15 ஆண்டுகளாக இருக்கிறேன். எம்.எல்.ஏ செல்வராஜ் எனக்குத் தேவை என்கிறபோதெல்லாம் பணம் தருவார். அந்தப் பழக்கத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு கேட்டவர்களிடம் எம்.எல்.ஏ-விடம் பேசி வீடு வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன். பணத்தைப் பற்றிப் பேசவில்லை. என்னைப் பிடிக்காத சிலர் போனில் நான் பேசிய ஆடியோவை ரெக்கார்டு செய்து பரப்பிவிட்டனர்’’ என்றார்.