Published:Updated:

புதுச்சேரி: ``பாரடைஸ் பீச் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முறைகேடு" - திமுக கண்டனம்

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா

``சுற்றுலாப்பயணிகளின் உயிர்களைப் பணயம்வைத்து பாதுகாப்பற்ற முறையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதிப்படுத்தாத சுற்றுலாத்துறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்." - தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா

புதுச்சேரி: ``பாரடைஸ் பீச் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முறைகேடு" - திமுக கண்டனம்

``சுற்றுலாப்பயணிகளின் உயிர்களைப் பணயம்வைத்து பாதுகாப்பற்ற முறையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதிப்படுத்தாத சுற்றுலாத்துறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்." - தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா

Published:Updated:
புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி பாரடைஸ் பீச்சில் தனியார் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த மோசடி குறித்து 'புத்தாண்டு கொண்டாட்ட மோசடி' - சொதப்பிய தனியார் நிறுவனம்; கைவிரிக்கும் சுற்றுலாத்துறை' என்ற தலைப்பில் நமது இணைய பக்கத்தில் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதனடிப்படையில் புதுச்சேரி தி.மு.க-வின் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எல்.ஏ சிவா சுற்றுலாத்துறைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், "கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னர் புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. 

புதுச்சேரி - புத்தாண்டு கொண்டாட்டம்
புதுச்சேரி - புத்தாண்டு கொண்டாட்டம்

சுற்றுலாத்துறையை முறையாக மேம்படுத்தாமலேயே பல கோடிகள் மாநிலத்துக்கு குறிப்பிடத்தக்க வருவாயை அது ஈட்டித் தருவதாக இருக்கிறது. இந்த நிலையில்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சிறப்பான நகரம் எது என சுற்றுலாப்பயணிகள் தேடியபோது, இந்திய அளவில் புதுச்சேரிதான் சிறந்த நகர் என்று தேர்வுசெய்தார்கள் என்பது நமது மாநிலத்துக்கான பெருமை. இதை, தனது சாதனையாகப் பறைசாற்றிய புதுவை அரசு, புத்தாண்டு தினத்துஜ்க்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால், நடந்தது என்ன?

சுற்றுலாப்பயணிகளிடமிருந்து பெருமளவிலான தொகையை பல்வேறு வழிகளில் ஈர்த்ததற்கு ஏற்ப, அவர்களுக்கான எந்த வசதியையும் புதுச்சேரி அரசு செய்து தரவில்லை. புத்தாண்டு முதல் நாளில் மகிழ்ச்சியைக் கொண்டாட கடற்கரை சாலைக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தடியடி நடத்தி, அவர்களைக் கலைத்த செயல் இந்த அரசின் மெத்தனத்தையும் இயலாமையும் பறைசாற்றுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் அந்த மக்கள் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்றதுபோல், சிறிய நகரான புதுச்சேரியில் அதற்கு மாற்றாக அலறித் துடித்து ஓடி அவமானம் அடைந்ததுதான் மிச்சம். அதேபோல், நோணாங்குப்பம் படகுத்துறை புதுவையின் சுற்றுலாவுக்குப் பெயர்போனது. எவ்வித விளம்பரமும் இன்றி சுற்றுலாப்பயணிகள் குவியும் இடம் மட்டுமன்றி, புத்தாண்டு போன்ற திருவிழா நாள்களிலும், வார இறுதி நாள்களிலும் விழாக்கோலம் பூண்டு வருமானத்தை வாரிக் கொட்டும் இடம்.

புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டம்

ஆனால், இந்த ஆண்டு அந்த வருமானத்தைத் தனியார் கொள்ளையடிக்கும்விதத்தில் மாற்றியமைத்து, சுற்றுலாப்பயணிகளை அதிக கட்டணத்துக்குச் சுரண்டும் விதியை அரசே ஏற்படுத்தியிருப்பதும், பணத்துக்கான எந்த உபசரிப்பும் செய்யாமல், ஏன் தண்ணீர்கூடக் கொடுக்காமல் ஏமாற்றிய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். புத்துணர்ச்சியுடன், மகிழ்ச்சியோடு உறவுகளுடன் புத்தாண்டைக் கொண்டாட புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப்பயணிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பது வேதனையளிக்கிறது. புதுச்சேரியின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல்வேறு குளறுபடிகளுடன் நிறைவடைந்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நூதன முறையில் ஏமாற்றுவதுதான் பாஜக சொன்ன `Best Tourism Hub’ மாடலா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

'ரெஜி கோட்டிங் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட்' என்ற சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் புத்தாண்டில் அந்தப் படகுக் குழாமை குத்தகைக்கு எடுத்து, சுற்றுலாப்பயணிகளை பாரடைஸ் பீச்சுக்கு அழைத்துச் சென்று `உணவு, மது வகைகள் வழங்கப்படும்’ என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை ஆன்லைனில் வெளியிட்டு, ஒரு டிக்கெட் ரூபாய் 2,000 முதல் 25,000 வரை வசூல் வேட்டை நடத்தியிருப்பதும், அதில் சொற்ப அளவில் சுற்றுலாத்துறைக்கு வாடகை செலுத்தியிருப்பதும் ஏமாற்று வேலை. புக்கிங் டாட்காம், பேடிஎம் மூலம் டிக்கெட்டுகளை விற்ற இந்த நிறுவனம், டிக்கெட் வாங்கியவர்களைப் படகில் பாரடைஸ் பீச்சுக்கு அழைத்துச் சென்று, `டிக்கெட்டின் விலைக்கு ஏற்ப அசைவ உணவு, மது போன்றவை வழங்கப்படும்’ என்றும் தெரிவித்திருக்கிறது. 

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

ஆன்லைனில் புக்கிங் என்பதால், பாரடைஸ் பீச்சின் கொள்ளளவைவிட அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு, புத்தாண்டு அன்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் டிக்கெட்டுகளுடன் குவிந்திருக்கின்றனர். நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் சுற்றுலாப்பயணிகளை ஒழுங்குபடுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளாமல், படகுக் குழாமில் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நிகழ்த்தி, பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியிருப்பதை புதுவை அரசாங்கம் மூடி மறைக்கப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. இவை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.

படகில் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு முறையாகப் பாதுகாக்கும் லைஃப் ஜாக்கெட் கொடுக்காமலும், குடிநீர்கூட வழங்காமலும், இரவு நேரத்தில் படகுகளை இயக்கியும், விதிகளுக்கு முரணாக அந்த நிறுவனம் செயல்பட்டிருக்கிறது. இதையெல்லாம் முறையாகக் கண்காணிக்காமல் சுற்றுலாத்துறை வெறுமனே வேடிக்கை பார்த்திருப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ சிவா
புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ சிவா

வெறும் வருமானத்துக்கு மட்டுமே இந்தப் படகுக் குழாமை நடத்தக் கூடாது. பயணிகளின் நலன் என்பது அவசியம். இந்த மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியும், பெயரும் கெடுவதற்கு இந்தச் செயல்கள் வழி ஏற்படுத்திவிடும். ஆகவே, தனியார் நிறுவனத்தின் முழு தவற்றுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். சுற்றுலாப்பயணிகளின் உயிர்களைப் பணயம்வைத்து பாதுகாப்பற்ற முறையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதிப்படுத்தாத சுற்றுலாத்துறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சேதாரத்துக்கு நஷ்ட ஈடு பெற வேண்டும். எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையே படகுப் போக்குவரத்தை முழுமையாக இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.