Published:Updated:

திருவாரூர்: `உங்க தலைவர்கிட்ட சொல்லுங்க!' - முதல்வர் - தி.மு.க எம்.எல்.ஏ சந்திப்பில் என்ன நடந்தது?

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் - எம்.எல்.ஏ  டி.ஆர்.பி ராஜா
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் - எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா

``முதலமைச்சர், தன்னோட கட்சி நிகழ்ச்சிக்காக இங்கே வரலை. ஆய்வுப் பணிக்காகத்தான் வந்திருக்கிறார். மக்கள் பிரதிநிதி என்ற முறையில், கலந்தாய்வுக் கூட்டத்துல கலந்துக்க எனக்கு முறையான அழைப்பு இல்லை.’’

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய இன்று காலை திருவாரூர் மாவட்டம் வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார். முதல்வரைச் சந்தித்து பேச தி.மு.க எம்.எல்.ஏ., டி.ஆர்.பி ராஜா ஆட்சியர் அலுவலகத்தில் நீண்டநேரம் காத்திருந்தார். முதல்வர் நிகழ்ச்சியின்போது அவரைச் சந்திக்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏ வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

பொதுவாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை எதிர்க்கட்சியினர் புறக்கணிப்பது வழக்கம். முறையான அழைப்பு இருந்தாலுமே, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு வருவதில்லை. இந்நிலையில், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ-வுக்கு அழைப்பு அனுப்பப்படாத நிலையிலும்கூட முதல்வரைச் சந்திக்க அவர் காத்திருந்ததாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்டநேர காத்திருப்புக்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துவிட்டு டி.ஆர்.பி ராஜா திரும்பினார். நம்மிடம் பேசிய அவர்,``திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ-வாக இருக்கேன். முதலமைச்சர், தன்னோட கட்சி நிகழ்ச்சிக்காக இங்கே வரலை. ஆய்வுப் பணிக்காகத்தான் வந்திருக்கிறார். மக்கள் பிரதிநிதி என்ற முறையில், கலந்தாய்வுக் கூட்டத்துல கலந்துக்க எனக்கு முறையான அழைப்பு இல்லை. தகவல்கூடச் சொல்லலை. ஆனாலும், பரவாயில்லை.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

திருவாரூர் மாவட்டத்துல தீர்க்கப்படாமல் உள்ள பல முக்கியப் பிரச்னைகளை அவரது கவனத்துக்குக் கொண்டுபோகணும்னு விரும்பினேன். அவர் ஏற்கெனவே திருவாரூர் மாவட்டத்துக்கு வந்தப்போ அறிவிச்ச திட்டங்களே இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கு. இது தொடர்பாக நேராகச் சந்திச்சிப் பேசுவோம்னு விரும்பினேன். எங்க கட்சித் தலைவர்கிட்ட அனுமதி கேட்டேன்.

அவரும் முழு மனதோடு,`உங்க மாவட்டத்துக்கு முதலமைச்சர் வர்றாரு. கண்டிப்பாக நீங்க போய் சந்திக்கணும்’னு என்னை ஊக்கப்படுத்தினார். காலையில 9:30 மணிக்கே கலெக்டர் ஆபீஸுக்கு வந்துட்டேன். ஆனா, `கொரோனா டெஸ்ட் இருந்தால்தான் முதல்வரைச் சந்திக்க அனுமதிப்போம்'னு அதிகாரிகள் சொன்னாங்க. `அவரை சந்திச்சாதான், நான் இங்கே இருந்து கிளம்புவேன்'னு பிடிவாதமாகச் சொல்லிட்டேன். இந்தத் தகவலை அதிகாரிகள், முதலமைச்சர்கிட்ட சொல்லியிருக்காங்க. `ராஜாகூட எத்தனை பேர் வந்திருக்காங்க'னு அவர் கேட்டிருக்கார். `ராஜா மட்டும் தனியாகத்தான் வந்திருக்காரு'னு அதிகாரிகள் சொன்னதும், `சரி சந்திக்கிறேன்'னு முதலமைச்சர் சொல்லியிருக்கார்.

முதல்வரின் திருவாரூர் ஆய்வுக் கூட்டம்
முதல்வரின் திருவாரூர் ஆய்வுக் கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம் முடிஞ்ச பிறகு, கலெக்டரோட ரூம்ல என்னை முதலமைச்சர் சந்திச்சார். பத்து நிமிடங்கள் பேசினோம். மக்கள் பிரச்னைகளை விரிவாக எடுத்துச் சொன்னேன். திருவாரூர் புறக்கணிப்படுவதாக என்னோட ஆதங்கத்தை தெரியப்படுத்தினேன். `அப்படியெல்லாம் இல்லை. உங்க தலைவரோட மாவட்டம்கறதுனாலதான் இங்கே கூடுதல் கவனம் செலுத்துறேன். இதை உங்க தலைவர்கிட்ட சொல்லுங்க'னு முதல்வர் சொன்னார். `கலெக்டர் அலுவலக வளாகத்துல இருக்கும் கலைஞர் பெயர்கொண்ட கல்வெட்டை அதிகாரிகள் மூடிவெச்சிருக்காங்க. நீங்க இங்க வர்றீங்கனுதான், அந்த மாதிரி செஞ்சிருக்காங்க'னு முறையிட்டேன். `அப்படியெல்லாம் இருக்காது. தூய்மைப் பணிக்காக மூடியிருப்பாங்க'னு முதலமைச்சர் சொன்னார்” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு