தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரி வாக்குச்சாவடியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அவர் மனைவி கிருத்திகா, செந்தாமரை ஆகியோர் வாக்களித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். மேற்கு மண்டலத்தில் சட்டமன்றத் தேர்தலில் எங்களால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
இந்தமுறை நல்ல வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன். தேர்தல் தோல்வி பயத்தால் கோவையில் அ.தி.மு.க-வினர் இப்படி செய்துள்ளனர். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியை என்னால் முடிந்த வரை நான் செய்துவருகிறேன். அமைச்சர் பதவியை எண்ணி நான் எந்த பணியும் செய்யவில்லை. அப்படி அந்த பதவி கிடைக்கும் பட்சத்தில் அது பற்றி பேசலாம்'' என்றார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,``தி.மு.க கூட்டணியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நேர்மையற்ற தேர்தல் நடைமுறைகளால் மக்கள் வெறுப்புடன் உள்ளனர். ஜனநாயக ரீதியாகத் தேர்தல் நடைபெற வேண்டும். இதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும்" என்றார்.
