Published:Updated:

கொரோனா: `குடிக்க தண்ணி கேட்பது பெரும் கொடுமை' -கொதித்த வேலூர் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்

எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்
எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி கொடுத்துவருகிறார். ஆனால், நோயாளிகளைச் சரிவர கவனிப்பதில்லை.

வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு, குடிக்க தண்ணீர்கூட தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தப் புகார் குறித்து தி.மு.க-வின் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் கலெக்டர் சண்முகசுந்தரத்தை இன்று காலையில் சந்தித்து, நான்கு பக்க மனுக்களைக் கொடுத்து பிரச்னைகளை முறையிட்டனர்.

பின்னர், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பேசிய வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார், ‘‘சென்னைக்கு அடுத்தபடியாக வேலூரில்தான் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்திருக்கிறது.

கலெக்டரிடம் மனு கொடுத்த எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்
கலெக்டரிடம் மனு கொடுத்த எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்

தடுப்புப் பணிகளை விரைவாக மேற்கொண்டு மக்களைக் காப்பாற்றவும், ‘ஸ்வாப்’ டெஸ்ட்டை அதிகப்படுத்தவும் கலெக்டரிடம் வலியுறுத்தினோம். எங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் கலெக்டர் ஏற்றுக்கொண்டு, நிறைவேற்றித் தருவதாகக் கூறியிருக்கிறார். அதேநேரம், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி கொடுத்துவருகிறார். ஆனால், நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை.

கொரோனா பணிகளுக்கு பணமில்லை... கோவையில் ரூ.1,600 கோடி பாலத்துக்கு டெண்டர்!

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, குடிக்க தண்ணீர்கூட கொடுப்பதில்லை. ‘கோவிட் பாசிட்டிவ் நோயாளி ஒருவர் தினந்தோறும் நான்கரை லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்’ என்று சி.எம்.சி தனியார் மருத்துவமனை அறிவுறுத்துகிறது. ஆனால், நாளொன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீரைக்கூட அரசு மருத்துவமனையில் தருவதில்லை. தொற்றுக்குள்ளான வேலூரைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு குடிக்க தண்ணீர் கேட்டனர். கேட்கவே, எவ்வளவு கொடுமையாக இருக்கிறது.

சானிடைஸரால் கைகளை சுத்தம் செய்கிறார்கள்
சானிடைஸரால் கைகளை சுத்தம் செய்கிறார்கள்

‘பத்திரிகையாளர்களுக்கே இந்த நிலைமை’ என்றால் சாமான்ய மக்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும். படுக்கை வசதிகளும் குறைவாக இருக்கிறது. அதனையும் அதிகப்படுத்த வேண்டும். நேற்றிரவு 10 மணியளவில், வயதான நோயாளி ஒருவரை வேறொரு மருத்துவமனைக்கு மாற்ற வார்டில் இருந்து கீழே இறங்கி வரச்சொன்னார்கள். நோய்க்குள்ளானவர்களை இரவு நேரத்தில்தான் அலைக்கழிக்க வேண்டுமா..?

இதுபற்றி எனக்குத் தகவல் கிடைத்தவுடன் மருத்துவமனை டீனிடம் பேசினேன். அதன்பிறகு, அந்த நோயாளியை வார்டுக்குச் சென்று ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள்’’ என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு