Published:Updated:

சொந்தக் கட்சிக்காரர்கள் மீது போலீஸில் புகாரளித்த எம்.பி! - உட்கட்சிப் பூசலால் திணறும் கொங்கு தி.மு.க

தி.மு.க எம்.பி சண்முகசுந்தரம்
தி.மு.க எம்.பி சண்முகசுந்தரம்

``நாங்கள் போஸ்டர் ஒட்டி, கொடிபிடித்து கட்சியில் வளர்ந்தோம். சண்முகசுந்தரம் 2009 தேர்தலில் தோற்று சென்றுவிட்டார். பிறகு 2019 தேர்தலில் சீட் கிடைத்த பிறகுதான் களத்துக்கு வந்தார்.’’

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதான கட்சிகள் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. கடந்த சட்டசபைத் தேர்தலில் நூலிழையில்தான் தி.மு.க., தனது வெற்றி வாய்ப்பை அ.தி.மு.க-விடம் பறிகொடுத்தது. அதற்கு முக்கியக் காரணம் கொங்கு மண்டலம். இங்கு பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க தோல்வியைத் தழுவியது. அதனால்தான், தி.மு.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. தி.மு.க-வின் தோல்விக்கு, கட்சியின் உட்கட்சிப் பூசல் மற்றொரு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

தி.மு.க வாட்ஸ்அப் குழு
தி.மு.க வாட்ஸ்அப் குழு
சட்டப்பேரவைத் தேர்தல் 2021:  ஒவைசி கூட்டணி....  தி.மு.க-வா, ம.நீ.ம-வா, நாம் தமிழரா?

இதனால், வரும் சட்டசபைத் தேர்தலில் உட்கட்சிப் பூசலைச் சமாளிக்க தி.மு.க தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதிருப்தியில் இருந்த சீனியர் நிர்வாகிகளுக்கு பதவி கொடுத்து உற்சாகப்படுத்தியது.

அப்படியிருந்தும் பதவிச் சண்டையில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர் கொங்கு மண்டல உடன்பிறப்புகள். திருப்பூர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க-வில் சமீபத்தில் பொறுப்புகள் போடப்பட்டன. இதில், அங்குள்ள சில உடன்பிறப்புகளுக்கு உடன்பாடில்லை என்று போர்க்கொடி எழுப்பினர். இதையடுத்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பணத்தை வாங்கிக்கொண்டு பரிந்துரை செய்தவர்களுக்கே பதவி கொடுக்கப்பட்டதாகப் புகார் கூறினர்.

எம்.பி புகார்
எம்.பி புகார்

இது தொடர்பாக, தி.மு.க வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகளும் பரவின. அந்தத் தகவல்களைப் பரப்பியதும் தி.மு.க உடன்பிறப்புகள்தான். இதில் ஆத்திரமடைந்த எம்.பி சண்முகசுந்தரம் அந்தத் தகவலைப் பரப்பிய தி.முக.-வினர் மீது காவல்துறையில் புகாரளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில், `சில விஷமிகள் நான் கட்சியில் எனக்கு வேண்டிய நபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, கட்சியில் பொறுப்பாளர்களை நியமித்ததாக வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிவருகின்றனர். விஷமிகளின் செயல் என் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதுடன், தி.மு.க-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இது தொண்டர்களிடையே மன உளைச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

போலீஸ் சம்மன்
போலீஸ் சம்மன்

இது தொடர்பாக தி.மு.க ஒன்றியக் குழு உறுப்பினர் உட்பட ஆறு பேர் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக நான்கு தி.மு.க பிரமுகர்களுக்கு போலீஸ், சம்மன் அனுப்பியிருக்கிறது.

இது குறித்து தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகணேஷ், ``நான் ஒன்றியச் செயலாளர் பதவி கேட்டேன். எங்களது ஒன்றியத்தைப் பிரித்தபோது, நாங்கள் சில நிர்வாகிகளுடன் முதன்மைச் செயலாளர் நேரு, கொறடா சக்கரபாணியிடம் முறையிட்டோம். எங்களுக்குத்தான் ஆதரவாளர்களும் அதிகம். ஆனால், எங்கள் மாவட்டப் பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ-வும், எம்.பி.சண்முகசுந்தரமும் உறவினர்கள். அதனால், எம்.பி சொல்வதை அவர் தட்ட மாட்டார். இது எங்கள் கட்சிக் குழுவில் நடந்த விவகாரம்.

தி.மு.க பாலகணேஷ்
தி.மு.க பாலகணேஷ்

அதைக் கட்சித் தலைமையைக் கேட்காமல், எம்.பி நேரடியாக காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டார். காவல்துறை சம்மன் தொடர்பாக எங்கள் தலைமைக்குத் தகவல் கொடுத்திருக்கிறோம். நாங்கள் போஸ்டர் ஒட்டி, கொடிபிடித்து கட்சியில் வளர்ந்தோம். சண்முகசுந்தரம் 2009 தேர்தலில் தோற்றதும் சென்றுவிட்டார். பிறகு 2019 தேர்தலில் சீட் கிடைத்த பிறகுதான் களத்துக்கு வந்தார். அவர் பிசினஸ்மேன்.

கே.என்.நேருவுடன், தி.மு.க-வினர்
கே.என்.நேருவுடன், தி.மு.க-வினர்

கட்சிக்கு உழைத்த எங்களுக்குப் பதவி கொடுக்காவிடில், நாங்கள் கட்சியிலிருந்து கூண்டோடு ராஜினாமா செய்துவிடுவோம். அதேபோல, எம்.பி சண்முகசுந்தரத்தின் ஆதிக்கத்தை சரிசெய்யாவிடில், கொங்கு மண்டலத்தில் தி.மு.க வெற்றி பெற முடியாது" என்றார்.

தி.மு.க உறுப்பினர் முத்துக்குமாரசாமி, ``பாலகணேஷ்தான் அந்தக் குழுவின் அட்மின். பதவி போட்டதில் முறைகேடு நடந்ததாகச் செய்தி வந்தது. அதை நான் விசாரித்துவிட்டு அந்தக் குழுவுக்கு ஃபார்வர்டு செய்தேன். மற்றபடி, எனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. இது உட்கட்சி விவகாரம். சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசியிருந்தாலே பிரச்னை முடிந்திருக்கும்.

முத்துக்குமாரசாமி
முத்துக்குமாரசாமி

இது போன்ற விவகாரங்கள் அ.தி.மு.க-வில் நடந்திருந்தால் வெளியிலேயே வந்திருக்காது. ஆனால், தவற்றைச் சுட்டிக் காட்டியதற்காக இப்படிச் செய்வது வருத்தமாக இருக்கிறது. ஆட்சியில் இல்லாதபோதே சொந்தக் கட்சிக்காரர்கள் மீது இப்படிச் செய்கிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று கவலையாக இருக்கிறது” என்றார்.

இது குறித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கூறுகையில், ``நிர்வாகிகளை நியமிப்பது மாவட்டப் பொறுப்பாளரும், தலைமைக் கழகமும்தான். இதில் எனது தலையீடு எதுவும் இல்லை. என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்விதமாக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி காவல்துறையில் புகாரளித்திருக்கிறேன். தவறு செய்திருந்தால் நான் கவலைப்பட வேண்டும். நான் எப்படி நடந்துகொள்வேன் என்று தலைமைக்குத் தெரியும். இது சாதாரணப் பிரச்னைதான்.

தி.மு.க எம்.பி சண்முகசுந்தரம்
தி.மு.க எம்.பி சண்முகசுந்தரம்

இதை நான் பெரிய விஷயமாகவெல்லாம் கொண்டு போக விரும்பவில்லை. தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து, தலைமையிடம் தகவல் சொல்வேன். தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சிகள் இது போன்ற விஷயங்களைப் பெரிதுபடுத்துவதைத் தவிர்க்க முடியாது" என்றார்.

உட்கட்சிப் பூசலை சரிசெய்யாவிடில், கொங்கு மண்டலம் தி.மு.க-வுக்கு மீண்டும் தலைவலியைக் கொடுக்கலாம்!
அடுத்த கட்டுரைக்கு