Published:Updated:

“பா.ஜ.க-வுக்குத் தேவை, இந்து இந்தியா!”

தயாநிதி மாறன்
பிரீமியம் ஸ்டோரி
தயாநிதி மாறன்

- தகிக்கும் தயாநிதி மாறன்

“பா.ஜ.க-வுக்குத் தேவை, இந்து இந்தியா!”

- தகிக்கும் தயாநிதி மாறன்

Published:Updated:
தயாநிதி மாறன்
பிரீமியம் ஸ்டோரி
தயாநிதி மாறன்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாமீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் தி.மு.க சார்பில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் உரை, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, மசோதா வரைவில் கிறிஸ்துவர்களைச் சேர்க்காத மத்திய அரசு, மேற்கத்திய நாடுகளுக்கு பயந்து இறுதிவடிவத்தில் சேர்த்திருப்பதாக அவர் குறிப்பிட்ட தகவல், தேசிய அரசியலில் பேசுபொருளானது. எப்போதுமே பரபரப்பு அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கும் தயாநிதி மாறனிடம், தற்போதைய அரசியல் சூழல்குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘அதீத பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன?’’

‘‘பொய்ப் பிரசாரங்கள் மூலம்தான் தேர்தலில் அவர்கள் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றிருக்கிறார்கள். வாக்கு வங்கிக்காக அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் பாகிஸ்தான். இந்தியாவில் சிறுபான்மை வெறுப்பு அரசியலை உருவாக்கி, யானைபலத்துடன் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை. தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, வருமானவரித் துறை என அனைத்தும் அவர்கள் கூட்டணியில் இருக்கின்றன. இவற்றைவைத்து மாநில அரசுகளைப் பணியவைக்க முயல்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைச் செயல் படுத்துவதே அவர்களின் நோக்கம். அந்தக் கொள்கைகளை வளர்த்தெடுக்கும் முயற்சியில் சிறு பங்கைகூட பொருளாதார வளர்ச்சிக்கான விஷயத்தில் அவர்கள் காட்டவில்லை. இந்தியப் பொருளாதாரம் பெரும்சீரழிவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. பணப்பரிமாற்றம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பொதுமக்கள் தலையில் வரிச்சுமை ஏற்றப்பட்டுவருகிறது. குறு, சிறு தொழில்கள் முற்றிலும் முடங்கிவிட்டன. இவற்றையெல்லாம் சரிசெய்ய வழி இல்லாத இந்த அரசு, மதத்தின் பெயரால் மக்களை திசைதிருப்பி தங்கள் தவறுகளை மூடி மறைக்கிறது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஆனால், பொருளாதார வீழ்ச்சி, மதவாத அரசியல் இந்த இரண்டைத் தாண்டி பா.ஜ.க அரசுமீது எந்த ஊழல் குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகளால் வைக்க முடியவில்லையே?’’

‘‘இந்த ஆட்சியில் ஊழல் நடக்கிறது. ஆனால், அதை வெளியில் சொல்ல அதிகாரிகள் அச்சப்படு கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க அரசு மீது எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அந்த அ.தி.மு.க-வை பா.ஜ.க ஏன் ஆதரிக்க வேண்டும்? பா.ஜ.க ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளுமே ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன. இதை வெளியே சொல்ல ஊடகங்கள் அச்சப்படுகின்றன.

பா.ஜ.க-வின் அசுர அலையை மிகத் திறமையாக எதிர்கொண்ட இரண்டு மாநிலங்கள் தமிழகமும் கேரளமும் மட்டுமே. ஒருகாலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்த பா.ஜ.க-தான், இப்போது காஷ்மீரில் அதைவிட மோசமான எமர்ஜென்சியை அமல்படுத்தியிருக்கிறது.’’

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

‘‘நீங்கள் உட்பட கனிமொழி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களைக்கூட மத்திய அரசு மிரட்டி பணியவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘அரசியலுக்கு வந்த பிறகு இதுபோன்ற நெருக்கடிகளைச் சந்தித்துதான் ஆகவேண்டும். வழக்கு போடட்டும். அதற்காக நாங்கள் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது. நாங்கள் தி.மு.க-வினர். இதுபோன்ற அச்சுறுத்தல் களுக்கெல்லாம் அஞ்சி எங்களுக்குப் பழக்கமே இல்லை. எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை. ஒருபோதும் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.’’

‘‘தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘இதுபோன்ற வதந்திகள்தான் பா.ஜ.க-வின் பலம். தி.மு.க உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என யார் சொன்னது? சிறப்பாகப் பேசுவது யார் என்பதில்தான் எங்களுக்குள் போட்டியே தவிர, வேறு எந்த முரண்பாடும் கிடையாது. தி.மு.க-வின் ஒவ்வொரு எம்.பி-யும் ஒருமித்த கருத்தோடு மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல்கொடுக்கிறோம்.’’

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

‘‘குடியுரிமை சட்டத்திருத்தத்தை இவ்வளவு கடுமையாக எதிர்க்க என்ன காரணம்?’’

‘‘அது, முற்றிலும் தவறான சட்டம். பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டதையெல்லாம் நிறைவேற்றிவருகிறார்கள். அந்தத் தேர்தல் அறிக்கையில் `கிறிஸ்துவர்கள்’ என்ற வார்த்தையே இல்லை. ஆனால், இந்தச் சட்டத்தில் கிறிஸ்துவர்களையும் ஒன்றாக இணைத்துள்ளார்கள். இதுவும் பா.ஜ.க-வின் தந்திரம்தான். கிறிஸ்துவர்களை இப்போது பகைத்துக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக மூக்கை நுழைக்கும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. நேபாளத்தில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர், இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினர்... அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை. அவர்களுக்குத் தேவை இந்து இந்தியா மட்டுமே!’’

‘‘பா.ஜ.க-வின் அசுரபலத்தை எதிர்க்கும் அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி இல்லை என்பது உண்மைதானே?’’

‘‘யதார்த்தமான உண்மை அதுதான். ஆனால், மாநிலங்களவையில் அந்த நிலை இல்லை. அ.தி.மு.க மற்றும் பா.ம.க ஆதரவளிக்காமல் இருந்திருந்தால், குடியுரிமைச் சட்டம் வந்திருக்காது. மக்களவையில் அ.தி.மு.க எம்.பி வாக்கெடுப்புக்கே வரவில்லை. ‘கூட்டணி தர்மம்’ என்று மற்றொரு பக்கம் ராமதாஸ் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசுகிறார். இலங்கை அகதிகள் விஷயத்தில் ராமதாஸுக்கு என்ன நிலைப்பாடு என்று சொல்ல முடியுமா?’’

இந்த ஆட்சி எப்போது முடியும் என்கிற எண்ணம் மக்களிடம் அதிகமாகியுள்ளது. `பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம்’ என அ.தி.மு.க நினைக்கிறது. ‘வாக்கு, விற்பனைக்கு அல்ல’ என்று மக்களும் முடிவு செய்யவேண்டும்.
தயாநிதி மாறன்

‘‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டத்தை பா.ஜ.க செயல்படுத்துவதாகச் சொல்கிறீர்கள். அதற்கு எதிராக வலுவான போராட்டக் களத்தை தி.மு.க-வால் மட்டும் உருவாக்கிவிட முடியுமா?’’

‘‘பா.ஜ.க-வை எதிர்த்துப் போராட பலரும் தயங்கியபோது, அவர்களை எதிர்த்துப் போராட்ட களத்துக்கு முதலில் வந்ததே தி.மு.க-தான். இப்போது மக்களும் பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க-வுடன் களமிறங்க ஆரம்பித்துள்ளார்கள்.’’

‘‘ஆர்.எஸ்.எஸ் கருத்தியலுக்கு முன்பாக தி.மு.க-வின் திராவிடக் கருத்தியல் பலவீனமடைந்துவிட்டதா?’’

‘‘நிச்சயமாக இல்லை. இன்றைக்குத்தான் பெரியாரின் அருமை அனைவருக்கும் புரிந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பதவியேற்கும்போது எதற்காக பெரியார், அண்ணா, கலைஞரைப் புகழ்ந்தோம்? பெரியார் ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான கொள்கையைக்கொண்டிருந்தார். அந்தக் கொள்கை இப்போது தேவைப்படுகிறது. அதைச் செய்யும் துணிவு தி.மு.க-வுக்கு மட்டுமே இப்போது இருக்கிறது.’’

‘‘தமிழகத்தின் எதிர்கால அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கும்?’’

‘‘அதற்கான முன்னோட்டம்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தந்த தீர்ப்பு. இந்த ஆட்சி எப்போது முடியும் என்கிற எண்ணம் மக்களிடம் அதிகமாகியுள்ளது. `பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம்’ என அ.தி.மு.க நினைக்கிறது. ‘வாக்கு, விற்பனைக்கு அல்ல’ என்று மக்களும் முடிவு செய்யவேண்டும். அடுத்து, நிச்சயமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். அதன் பிறகே தமிழகம் முன்னேற்றமடையும்.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக தி.மு.க தொடர்ந்து வழக்கு போட காரணமே தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க-வுக்கு உள்ள பயம்தான் என்று அ.தி.மு.க குற்றம்சாட்டுகிறதே?’’

‘‘அ.தி.மு.க-வின் பொய்ப் பிரசாரத்தை ஊடகங்கள் நம்புகின்றன. ‘தேர்தலை சீக்கிரம் நடத்துங்கள்’ என்றுதான் நாங்கள் சொல்கிறோம். அதேசமயம், முறைப்படி இடஒதுக்கீடு கொடுத்து மக்கள்தொகைக் கணக்கீடு அடிப்படையில் தேர்தலை நடத்துங்கள் என்றும் சொல்கிறோம். பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மிகச் சரியாகக் கொடுக்கச் சொல்கிறோம். இதையெல்லாம் செய்யாமல் தேர்தல் நடத்துவது தவறு என்பதே எங்களின் வாதம். தேர்தலை எதற்கு பிரித்து நடத்துகிறார்கள்... அதற்கான காரணத்தை அ.தி.மு.க சொல்லுமா?”