Published:Updated:

“திராவிட கொள்கையில் தி.மு.க-வினர் எந்தச் சமரசமும் செய்துகொள்ளகூடாது!”

செந்தில்குமார் எம்.பி
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார் எம்.பி

- செந்தில்குமார் எம்.பி ஆதங்கம்

“திராவிட கொள்கையில் தி.மு.க-வினர் எந்தச் சமரசமும் செய்துகொள்ளகூடாது!”

- செந்தில்குமார் எம்.பி ஆதங்கம்

Published:Updated:
செந்தில்குமார் எம்.பி
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார் எம்.பி

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தி.மு.க மக்கள் பிரதிநிதிகளில் முக்கியமானவர், மருத்துவர் செந்தில்குமார் எம்.பி. அதனாலேயே பல சர்ச்சைகளில் வலியப்போய் சிக்கிக்கொள்வதும் உண்டு. மழைக்காலக் கூட்டத்தொடர் முடித்து சென்னைக்குத் திரும்பிய அவருடன், ஒரு மாலைப் பொழுதில் தேநீர் அருந்தியபடி உரையாடினேன். தி.மு.க மீதான விமர்சனங்கள், இலவசம் குறித்த விவாதங்கள் உள்ளிட்டவை குறித்த நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...

“ ‘இனமானம் தன்மானம் இருப்பவர்கள் தி.மு.க-வை விமர்சிக்க மாட்டார்கள்’ என்று பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த இரண்டுக்குமான வரையறைதான் என்ன?”

“பெரியார், அண்ணா, கலைஞர், இன்றைய தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் வாழ்க்கைதான் அதற்கான வரையறை. சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதிக் கொள்கைகளை முதலில் பேசத் தொடங்கியவர் பெரியார். அதை வரித்துக்கொண்டவர்கள் அண்ணாவும் கலைஞரும். அதே பாதையில் முதல்வரின், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற இடத்தில் இப்போது பயணித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நோக்கத்தைத் தமிழ்நாட்டில் சிலர் பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் முதல்வர் குறிப்பிடுகிறார்.”

“தி.மு.க-வில் இருக்கும் முக்கியத் தலைவர்களுக்கேனும் இந்த இரண்டும் இருக்கின்றன என நினைக்கிறீர்களா?

“யாரும் இந்த இரண்டையும் இழந்துவிடக் கூடாது என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. கலைஞர் இருக்கும்போது, ‘நாம் இதைச் செய்தால், நாளை தலைவர் நம்மை அழைத்துக் கேள்வி கேட்பாரே?’ என அஞ்சி சில விஷயங்களைச் செய்யாமல் தவிர்த்திருப்போம். அதை இப்போதும் தி.மு.க-வினர் செய்யாமல் கடைப்பிடிப்பதுதான் நல்லது.”

“திராவிட கொள்கையில் தி.மு.க-வினர் எந்தச் சமரசமும் செய்துகொள்ளகூடாது!”

“இப்போது இருப்பவர்களைத் தலைவராக ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறீர்களா?”

“நிச்சயம் இல்லை. கலைஞர் கொடுத்த திராவிடக் கொள்கையைக் கையில் ஏந்தி மிகச் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் தலைவர். அண்ணா பேசிய ‘திராவிட மாடல், ஒன்றிய அரசு’ என்பதன் வழி வந்த திராவிட அரசியலை தலைவர் ஸ்டாலின்தான் மிகத் தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ‘முதல்வர் மட்டுமே செயல்பட்டால் போதுமா?’ என்பதுதான் என்னுடைய கேள்வி. முதல்வரே செய்யும்போது அதைப் பின்தொடர்வதில் மற்றவர்களுக்கு என்ன சிக்கல்?”

“அதாவது, ஸ்டாலினைத் தவிர்த்த தி.மு.க-வினரிடம், ‘திராவிட சித்தாந்தம் மழுங்கிப்போய்விட்டது’ என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“ ‘திராவிடம்’ என்ற தேரை ஒற்றை ஆளாக இழுத்துக்கொண்டிருக்கிறார் தலைவர். அவருடன் மற்றவர்களும் சேர்ந்துகொண்டால் அவரது சுமை குறையுமே என்கிறேன். தி.மு.க-வின் பலமே திராவிடக் கொள்கைதான். அதில் யாரும், எங்கும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்கிறேன்.”

“ ‘நீங்கள் மட்டும்தான் புத்திசாலியா?’ என்று உச்ச நீதிமன்றம் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்திருக்கிறதே?”

“அரசியலமைப்புச் சட்டப்படி, தீர்ப்பை வழங்குவது மட்டுமே நீதிபதிகளின் பணி. அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாக கோர்ட்டில் எதையும் சொல்லக் கூடாது. அதற்கு உரிமையும் இல்லை. அதேநேரத்தில் நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. தமிழ்நாடு செய்த சமூகச் சீர்திருத்தங்கள் குறித்த சிறு புரிதலும் இல்லை. விளிம்புநிலை மக்களின் வலியும் புரியவில்லை. அதனாலேயே அப்படியான விமர்சனங்கள் அவர்களிடமிருந்து வருகின்றன.”

“இப்போது இவ்வளவு பேசும் நீங்கள், இது தொடர்பாக போட்ட ‘ட்வீட்டை’ ஏன் டெலிட் செய்தீர்கள்?”

“நான் எதைப் பதிவிட்டாலும், நன்றாக யோசித்துத்தான் பதிவிடுவேன். அது என்னுடைய கருத்தின் வெளிப்பாடு. ஆனால், வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அதை என்னுடைய கருத்தாகப் பார்க்காமல், நான் சார்ந்திருக்கும் கட்சியின் கருத்தாகப் பார்க்கிறார்கள். அதைத் தவிர்க்க முடியாது. நம்முடைய ஒரு பதிவு நமக்கு நெருக்கமானவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தி, அதை ‘டெலிட்’ செய்யச் சொல்லி அன்பாகச் சொன்னால் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் இல்லையா... அப்படி நடந்ததுதான் அது. உடனே, அந்த நபர் யார் எனக் கேட்க வேண்டாம்.”

“இலவசங்கள் எல்லை மீறும்போதுதானே கேள்வி எழுகிறது?”

“தமிழ்நாட்டில் தி.மு.க கொடுத்ததாகச் சொல்லப்படும் இலவசங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் மக்கள்நலன், சமூகநலன் இருந்திருக்கின்றன. அதன் மூலம் மக்கள் வாழ்வும், சமூகமும் உயர்ந்ததற்கான தரவுகளும் இருக்கின்றன. இல்லை என்பதற்கு ஏதாவது ஓர் ஆதாரம் அவர்களைக் காட்டச் சொல்லுங்கள். தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களோடு அல்ல... வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் அளவுக்கு நம் தலைவர்கள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதை மற்றவர்களுக்குப் புரிய வைக்கவேண்டியது தமிழர்களாகிய நமது பொறுப்பு.’’

“சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் தேடுவதை மட்டுமே நீங்கள் செய்கிறீர்களா?”

“எதற்காக இந்தக் கேள்வி என்பது புரிகிறது. அறிஞர் அண்ணா காலத்திலேயே, ‘அரசு விழாக்களில் மத வழிபாடு இருக்கக் கூடாது’ என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறாது. ஜெயலலிதாகூட அதைப் பின்பற்றினார். அதை இப்போதும் பின்பற்றித்தானே ஆக வேண்டும்... நான் நாத்திகம் பேசவில்லை. அனைத்து மதங்களுக்கும் சம மதிப்பு அளியுங்கள் என்றுதானே பேசினேன்... நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மத வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தால் அங்கே செல்லாமல் தவிர்த்துவிடுவேன். ஆனால், என்னால் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க முடியவில்லை. எனவேதான் வீடியோ எடுக்கச் சொல்லி அதைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். சுயவிளம்பரத்துக்காக அல்ல.”

“சரி... மழைக்காலக் கூட்டத்தொடர் எப்படி நடந்தது?”

“ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை. பெரும்பாலான நாள்கள் ஒத்திவைப்பிலேயே கடந்துவிட்டன. அதைப் பயன்படுத்தி இரண்டு சட்டங்களை நிறைவேற்றியும்விட்டார்கள். குறிப்பிட்ட தேதிக்கு முன்பே நாடாளுமன்றக் கூட்டத்தை முடித்துவிட்டதால் இந்தக் கூட்டத்தொடரால் யாருக்கும், எந்தப் பயனும் இல்லை.”