Published:Updated:

தூத்துக்குடி: `மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சரியான திட்டமிடல் இல்லை!’ - கனிமொழி

``தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகமோ, மாநகராட்சியோ சரியாகத் திட்டமிடவில்லை” என கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர் கனமழை பெய்துவருகிறது. கடந்த 16-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 17 செ.மீ மழையும், மாவட்டம் முழுவதும் 800.40 மில்லிமீட்டர் மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதும் 80 கண்மாய்கள், குளங்கள் நிரம்பின. இந்தத் தொடர்மழையால் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். அதேநேரத்தில், சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் மழைநீரில் மூழ்கின.

கனிமொழி ஆய்வு
கனிமொழி ஆய்வு

இதனால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், உப்பளத் தொழிலாளர்களும் வேலையிழந்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் குளம்போலக் காட்சியளிக்கிறது. மாவட்டத்தின் பல கிராமப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருக்கிறது. மழையால் பல பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டி 3,000 கனஅடி தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. இந்தநிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு நடவடிக்கைகளை தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி ஆய்வு செய்தார். ஆய்வில், தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்த அவர், தனசேகரன் நகர், பி & டி காலனி, ஜார்ஜ் ரோடு, லசால் தெரு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார். சில பகுதிகளில் இடிந்த வீடுகளையும் பார்வையிட்டார்.

கனிமொழி ஆய்வு
கனிமொழி ஆய்வு

தொடர்ந்து செய்தியாளருக்குப் பேட்டி அளித்த கனிமொழி,``தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டு கனமழையின்போதும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடமோ, மாநகராட்சியிடமோ சரியான திட்டமிடல் இல்லை. தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டத்தை, அதைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க அரசு சரியாகச் செயல்படுத்தவில்லை என்பதால்தான், தற்போது மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு நாள் மழைக்கே மிதக்கும் தூத்துக்குடி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கழிவுநீர்க் கால்வாய்களும் திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம்” என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் பேசினோம். ``தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் மழை பாதிப்புகளைச் சரிசெய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனிமொழி ஆய்வு
கனிமொழி ஆய்வு

மாநகராட்சிப் பகுதியில் 36 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 102 பம்ப்கள் மூலமாக தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுவருகிறது. சில இடங்களில் ஜே.சி.பி-க்கள் மூலமாகவும் மழைநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மழைநீரை அகற்ற முடியாத இடங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் உறிஞ்சப்பட்டும் அகற்றப்பட்டுவருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு, பக்கிள் ஓடை வழியாக நீர் கடலுக்குச் செல்லும் வகையிலும் வெளியேற்றப்பட்டுவருகிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு