Published:Updated:

`ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மன்னிப்பு கோருகிறேன்!' - புதுச்சேரியில் உருகிய கனிமொழி

`மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்க நினைக்கிறது மத்திய பா.ஜ.க அரசு' என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியிருக்கிறார்.

கனிமொழி
கனிமொழி

இந்திய நிதி கூட்டாட்சியில் உள்ள சவால்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கு புதுச்சேரியில் இன்று தொடங்கியது. இந்தக் கருத்தரங்கில் முதல்வர் நாராயணசாமி, கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கனிமொழி, முதல்வர் நாராயணசாமி
கனிமொழி, முதல்வர் நாராயணசாமி

இதில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ``நிதி, மொழி உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசு `ஒன்று' என்ற சித்தாந்தத்தை நோக்கியே செல்கிறது. பிரச்னைகளுக்கு விவாதம் என்ற நிலைமாறி அனைவரும் மௌனத்தை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

அனைத்துத் தரப்பினரின் மௌனம் பயமாக இருக்கிறது. அனைத்திலும் `ஒன்று’ என்ற நிலை சர்வாதிகாரத்தை நோக்கியே செல்கிறது. ஜம்மு - காஷ்மீரின் பிரிவைத் தடுக்க முடியவில்லை. மக்களவையில் குரல் எழுப்பியும் என்னால், அதைச் செய்ய முடியவில்லை. அதற்கு மன்னிப்பு கோருகிறேன்.

தேசியக் கருத்தரங்கு
தேசியக் கருத்தரங்கு

15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளைப் பார்க்கும்போது நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாநிலங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்பதாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரள ஆகிய மாநிலங்கள் அதிக பாதிப்பை அடையும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம்தான் தி.மு.க-வின் செயல்பாடு.

`ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவாகவில்லை?!' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த கனிமொழி

அதனால்தான் அதை நோக்கி நாங்கள் குரல் எழுப்புகிறோம். ஆனால், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கட்சியாக தி.மு.க-வைக் காட்டுகிறார்கள்; சிக்கலையும் உருவாக்குகிறார்கள். ஜி.எஸ்.டி வரி வருவாயை எடுத்துக்கொண்டு அதற்கான மாநில அரசுகளின் பங்குகளைத் தராதது ஒருபுறமென்றால், மக்களவை உறுப்பினர்களுக்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் பணிகளை முடித்தவர்களுக்கு நிதியை தர முடியாத சூழல் நிலவுகிறது.

கருத்தரங்கு
கருத்தரங்கு

பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி முறையால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதுடன் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மாநிலங்களின் உரிமை, நிதி பறிப்பு ஆகியவற்றையும் தாண்டி மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை செயல்படுத்தும் போக்கில் மத்திய பா.ஜ.க அரசு இருக்கிறது. அதற்கு உதாரணம்தான் ஜம்மு- காஷ்மீர் பிரிப்பு. எப்போது வேண்டுமானாலும், எதுவும் நாட்டில் நடக்கலாம் என்ற சூழல்தான் தற்போது நிலவுகிறது” என்றார்.