Published:Updated:

`தமிழ்நாடு இல்லத்தில் அத்துமீறி நுழைந்து உளவுத்துறை மிரட்டல்!' - தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் புகார்

தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த்
தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் ( LSTV )

உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்ட சிலர், தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் அத்துமீறி நுழைந்து, தன்னை மிரட்டியதாக வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகாரளித்திருக்கிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகளோடு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா பரவல் அதிகரிப்பால் நாளையுடன் (செப்டம்பர் 23) முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேநீர் எடுத்து வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்
தேநீர் எடுத்து வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்

மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், துணை சபாநாயகரை முற்றுகையிட்டு அத்துமீறியதாக எட்டு உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், நடப்புக் கூட்டத்தொடரில் அனலைக் கிளப்பியிருக்கிறது. இதை எதிர்த்து இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் எட்டு எம்.பி-க்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் கூட்டாக இந்த விவகாரத்தை எழுப்புவதாக அறிவித்த பின்னர், அவர்கள் தர்ணாவை வாபஸ் வாங்கினர்.

`மாநிலங்களவை புறக்கணிப்பு.. 3 கோரிக்கைகள்; அழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்க்கட்சிகள்! - என்ன நடந்தது?

இந்தநிலையில், உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்ட சிலர், தன்னை மிரட்டியதாக வேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய கதிர் ஆனந்த், ``மதியம் 1:45 மணியளவில், இரண்டு, மூன்று பேர் நான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் எனது அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். தங்களை உளவுத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட அவர்கள், நாடாளுமன்றத்தில் நான் என்ன பிரச்னைகளை எழுப்பப்போகிறேன்...

தி.மு.க எம்.பி கதிர்ஆனந்த்
தி.மு.க எம்.பி கதிர்ஆனந்த்

எங்கள் கட்சி என்ன விவகாரங்களை விவாதத்துக்கு எழுப்பப்போகிறது... நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் என்னென... தமிழகத்திலுள்ள பிரச்னைகளில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன... போன்ற கேள்விகளைக் கேட்டு என்னை விசாரிக்க முயன்றனர். இது போன்ற பல்வேறு விவகாரங்களை அறிந்துகொள்ள அவர்கள் முயன்றனர்'' என்று புகார் தெரிவித்தார்.

பொதுச்செயலாளர் துரைமுருகன்; பொருளாளர் டி.ஆர்.பாலு! - அதிர்ச்சி கொடுத்த அறிவாலய நாடகம்

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இது தொடர்பாக எழுத்துபூர்வமாக புகார் அளிக்கும்படியும், இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்தார். சபாநாயகர் அவரை முழுமையாகப் பேச அனுமதிக்காத நிலையில், தி.மு.க-வின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர், தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து பிரச்னையை எழுப்ப முயன்றனர்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு
LSTV

அப்போது டி.ஆர்.பாலுவை அமைதியாக இருக்கும்படி சமாதானம் செய்த சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த விவகாரம் தொடர்பாக நிச்சயம் விசாரிப்பதாகக் கூறினார். உளவுத்துறையினர் தன்னை மிரட்டி விசாரணை செய்ய முயன்றதாக தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் எழுப்பிய புகார் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு