Published:Updated:

`நீங்கள் எடப்பாடி தொகுதிக்கு முதல்வரா, தமிழகத்துக்கு முதல்வரா?'- அறிவிப்பால் கொந்தளிக்கும் பழனிமாணிக்கம்

கே.குணசீலன்

தஞ்சை விவசாயிகளுக்கு முதல்வர் துரோகம் இழைப்பதாக தி.மு.க எம்.பி பழனிமாணிக்கம் குற்றம்சாட்டினார்.

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

``முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூரிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேலம், எடப்பாடி உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளை தூர் வாரி நிரப்ப உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இது தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாசன விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல்'' என்று தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான தி.மு.கவைச் சேர்ந்த பழனிமாணிக்கம் தெரிவித்திருக்கிறார்.

எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் பேட்டி
எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் பேட்டி

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். இவர் முதல்வரின் செயல் குறித்து கூறுகையில், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மேட்டூரிலிருந்து வெளியேறுகிற உபரி நீர் வீணாகக் கடலில் கலக்காமல் இருப்பதற்கு 565 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி என நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளை தூர் வாரி உபரி நீரை நிரப்ப உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இதனால் ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாக கடலில் கலக்காது என்றும் கூறியிருக்கிறார்.

இதில் எடப்பாடி முதல்வரின் சொந்த தொகுதி. கர்நாடக அரசு மேக்கே தாட்டூவில் அணை கட்டுவதற்கு என்ன காரணம் சொல்கிறதோ அதே காரணத்தை முதல்வரும் சொல்லி உபரி நீரை சேமிக்கிறேன் எனக் கூறுகிறார். இதன் மூலம் ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவிரி பாசன விவசாயிகளை மறைமுகமாக வதைக்கும் செயலைச் செய்கிறார்.

முதல்வரின் இந்தச் செயல் மூலம் காவிரி பாசனப் பகுதியை வறண்ட பகுதியாக மாற்றுவதற்கும், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மறைமுகமாக உதவுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

டெல்டா மாவட்டங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஏரிகளை முறையாக தூர் வாரினாலே வடமேற்குப் பருவமழைக் காலங்களில் மேட்டூரிலிருந்து வரும் நீரை எளிதாகத் தேக்கி வைக்க முடியும். கர்நாடகம் எப்படி காவிரி பாசன விவசாயிகளை வஞ்சிக்கிறதோ, அதேபோல் இவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு வஞ்சிக்கத் தொடங்கியிருக்கிறார்.

100 ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதாக முதல்வர் சொல்வதன் மூலம் மேட்டூர் பாசனப் பகுதிக்கு உட்பட்ட ஒரு புதிய பாசனத் திட்டத்தை தனது சொந்த தொகுதி என்பதால் இவர் அறிமுகப்படுத்த விரும்புகிறாரே என விவசாயிகள் அச்சம் கொள்ள வேண்டி இருக்கிறது. எட்டு வழிச் சாலையால் அவருக்கு சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட பலியை துடைப்பதற்காக தஞ்சை உள்ளிட்ட மாவட்ட மக்களை பலி வாங்கி சேலம் மாவட்ட மக்களை செயற்கையாக திருப்திபடுத்த இந்தத் திட்டத்தின் மூலம் விரும்புகிறார்.

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

இவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இவரின் செயல்கள் மேட்டூர் நீர்ப் பகிர்வு கொள்கையில் உள்ள காவிரி பாசன விவசாயிகளின் பழைய உரிமைகளை சிதைப்பதாகவே அமைந்து வருகிறது. ஆண்டு தோறும் ஜனவரி மாதம் மூடப்படுகிற மேட்டூர் அணை கடந்த காலத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலேயே அவசியம் கருதி ஓரிருமுறை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வரின் தொகுதியை நோக்கி ஓடும் வாய்க்கால்களில் 1000 கன அடிக்குக் குறையாமல் விதியை மீறி இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மேட்டூர் அணை நிர்வாகம் மற்றும் அதிகாரம் தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு தலைமை பொதுப்பணித்துறை பொறியாளரிடம் இருந்தது. அவற்றை தனக்கு கீழ் வரும் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் வசம் மாற்றி தண்ணீர் திறப்பதை முதல்வரே முடிவு செய்து கொள்வதும் துரோகச் செயலாக அமைந்திருக்கிறது. அவரின் இந்தச் செயல் மூலம் காவிரி பாசனப் பகுதியை வறண்ட பகுதியாக மாற்றுவதற்கும், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மறைமுகமாக உதவுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எனவே, முதல்வர் இந்தத் திட்டத்தை கைவிடுவதுடன் இதற்காக ஒதுக்க உள்ளதாகச் சொல்லப்பட்ட 565 கோடியை தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பாசனப் பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர்வாருவதற்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உயர்ந்த நோக்கம் கொண்ட முதல்வரின் நோக்கமும் நிறைவேறி விடும். மேலும் மேட்டூர் அணையைத் திறக்கும் அதிகாரத்தை தஞ்சை கலெக்டர் மற்றும் தமிழ்நாடு தலைமை பொதுப்பணித்துறை பொறியாளரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். பழைய விதியின் படியே மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். நீங்கள் எடப்பாடிக்கு மட்டும் முதல்வராக இல்லாமல் தமிழகத்திற்கே முதலமைச்சராக இருக்க வேண்டும்'' என்றார்.