அரசியல்
அலசல்
Published:Updated:

என் குரல் போன்று செட்டப் செய்திருக்கிறார்கள்! - ராஜேஸ்குமார் அந்தர்பல்டி

ராஜேஸ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேஸ்குமார்

‘மண் தேவைப்படுகிறது என்றால், முறையாக, சட்டப்படி அனுமதி பெற்று எடுங்கள்’ என்று வழக்கில் சிக்கிய நிர்வாகி ஒருவருக்கு அட்வைஸ் செய்துகொண்டிருந்தேன்.

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மணல் கடத்தலுக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சூழலில், அந்த வீடியோ குறித்து ராஜேஸ்குமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“மணல் கடத்தலுக்கு ஆதரவளிப்பதுபோல் அல்லவா இருக்கிறது உங்களது பேச்சு?’’

“அப்படியில்லை. இதில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் குறிப்பிட்டிருப்பது ‘மணல்’ அல்ல, ‘மண்.’ இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. மணல் என்பது ஆற்றுமணலைக் குறிக்கும். அதுவே, நான் அந்த வீடியோவில் சொன்ன மண் என்பது கிராவல் மண்ணைக் குறிக்கும். விவசாயத்துக்கு, வீட்டுக்கு அடித்தளம் இடுவதற்குப் பயன்படும் கிராவல் மண்ணை, அரசிடம் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மற்றபடி, நான் ஒருபோதும் மணல் கடத்தலுக்கு ஆதரவளிப்பதில்லை.”

என் குரல் போன்று செட்டப் செய்திருக்கிறார்கள்! - ராஜேஸ்குமார் அந்தர்பல்டி

“சரி... அந்த வீடியோ பற்றி விவரமாகச் சொல்லுங்களேன்?”

“அந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டது. ‘மண் தேவைப்படுகிறது என்றால், முறையாக, சட்டப்படி அனுமதி பெற்று எடுங்கள்’ என்று வழக்கில் சிக்கிய நிர்வாகி ஒருவருக்கு அட்வைஸ் செய்துகொண்டிருந்தேன். அதைத்தான் வீடியோ எடுத்துள்ளனர். அந்த நிர்வாகி ஒன்றியத் தேர்தலில் பொறுப்பு கேட்டார். ஆனால், அவர்மீது சட்டவிரோதமாக மண் எடுத்ததாகக் காவல் நிலையங்களில் வழக்குகள் விசாரணையில் இருப்பதால், கட்சியில் பொறுப்பு கொடுக்க முடியாது என்று சொல்லியிருந்தேன். அதனால், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வீடியோவின் இடைப்பட்ட பாகத்தை மட்டும் வெட்டி, என்மீது பழிசொல்வதற்காக வெளியிடப்பட்ட வீடியோ அது. நான் பேசியதை முழுமையாக வெளியிட்டிருந்தால் அதன் உண்மைத்தன்மை உங்களுக்குத் தெரியவரும்.”

“இத்தனை மாதங்கள் கழித்து ஏன் வெளியிட வேண்டும்?”

“தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தல் நடைபெறும் சமயத்தில் வெளியிட்டால், கட்சித் தலைமைக்கு என்மீது அதிருப்தி ஏற்படும் என்ற எண்ணத்தில் இப்போது வெளியிட்டுள்ளனர். ஆனால், கட்சித் தலைமையிடம் யார் அப்படிச் செய்தது, எதற்காகச் செய்தனர் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டேன்.”

“மற்ற மாவட்டச் செயலாளர்கள் காசு வாங்குவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறீர்களே?”

“எந்த மாவட்டச் செயலாளரையும் நான் குறிப்பிடவில்லை. முன்பே சொன்னதுபோல், வீடியோவில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை. வெளியாகியுள்ள இடைப்பட்ட பகுதியிலும் நான் பேசாததையெல்லாம் என் குரல் போன்று செட்டப் செய்திருக்கிறார்கள்.”

“வீடியோவை வெளியிட்டவர் யார்?”

“அதை ஊடகங்களிடம் சொல்ல முடியாது.’’

“மாவட்டப் பொறுப்பாளரான உங்கள்மீது ஏற்கெனவே அறிவாலயத்துக்கு நிறைய புகார்கள் சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“உள்ளூர் நிர்வாகிகள், காவல்துறை என யாரிடம் வேண்டுமானாலும் என்னைப் பற்றிக் கேட்டுப்பாருங்கள். எந்தப் புகாரும் என்மீது கொடுக்கப்படவில்லை.”