Published:Updated:

ஒன் பை டூ: அமித் ஷா தமிழக எம்.பி-க்களை சந்திக்க மறுப்பது சரியா?

செ.செந்தில்குமார் - பொன்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
செ.செந்தில்குமார் - பொன்.ராதாகிருஷ்ணன்

உள்துறை அமைச்சருக்கு நேரம் இருந்திருந்தால், நிச்சயம் தமிழக எம்.பி-க்களைச் சந்தித்திருப்பார். உள்துறை அமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்

செ.செந்தில்குமார், தி.மு.க எம்.பி., தருமபுரி

“மத்திய உள்துறை அமைச்சருக்கு எவ்வளவு வேலை வேண்டுமானாலும் இருக்கட்டும்... ஆனால், மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க வேண்டுமென நினைத்திருந்தால் ஐந்து நிமிடங்கள் போதும். உண்மையில், தமிழ்நாட்டின் எம்.பி-க்களைச் சந்திப்பதற்கு உள்துறை அமைச்சருக்கு விருப்பமே இல்லை. இதற்கு முன்பு குடியரசுத் தலைவரும் தமிழ்நாட்டின் எம்.பி-க்களைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கிறார் என்பதைவைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டு எம்.பி-க்களை, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்க வேண்டும் என்ற திட்டத்தோடுதான் ஒன்றிய அரசு செயல்பட்டதாகத் தோன்றுகிறது. உள்துறை அமைச்சகத்திலிருந்து சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பதாக அழைப்பு வந்ததை அடுத்துத்தான் எங்கள் எம்.பி டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அமைச்சரைச் சந்திக்கச் சென்றோம். ஆனால், பெரும்பான்மை பலத்தோடு இருப்பதால், ‘நாங்கள் நினைத்தால் எதையும் சாதித்துவிடுவோம்’ என்ற ஆதிக்க மனப்பான்மையில் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டார் அமித் ஷா. இப்படி இருந்தவர்களெல்லாம் வீழ்ந்ததை நாம் கண்கூடாகவே பார்த்திருக்கிறோம். தமிழ்நாட்டு எம்.பி-க்களைச் சந்திக்காமல் அவமதிப்பதை, பா.ஜ.க-வின் வீழ்ச்சிக்கான தொடக்கமாகவே பார்க்கிறேன். ஒன்றிய அரசுடன் முரண்பட தமிழ்நாடு விரும்பவில்லை. அதேநேரம், நமது உரிமையை எப்படிப் பெற வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். சட்டப்படி இவர்களை எதிர்கொண்டு நமது உரிமையை நிலைநாட்டுவோம். அதுதான் தி.மு.க-வின் அரசியல் வரலாறும்கூட!”

செ.செந்தில்குமார்
செ.செந்தில்குமார்
பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய இணை அமைச்சர், பா.ஜ.க

“உள்துறை அமைச்சருக்கு நேரம் இருந்திருந்தால், நிச்சயம் தமிழக எம்.பி-க்களைச் சந்தித்திருப்பார். உள்துறை அமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரைப் பார்க்க வேண்டும்; தங்கள் பகுதியிலிருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி, தேவையானதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைத்து எம்.பி-க்களுமே விரும்புவார்கள். அதேபோல அனைவருக்கும் உள்துறை அமைச்சரைச் சந்திக்கும் உரிமை இருக்கிறதுதான்... ஆனால், அதற்கான நேரம் உள்துறை அமைச்சரிடம் இருக்க வேண்டும் இல்லையா? ஆத்மார்த்தமான பிரச்னையாக இருந்து, தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் விஷயமாக இருந்து அதைச் சுட்டிக்காட்டியிருந்தால் நிச்சயம் உள்துறை அமைச்சர் தமிழக எம்.பி-க்களைச் சந்தித்திருப்பார். அரசியல் உள்நோக்கத்தோடு சந்திக்க நேரம் கேட்டிருந்தால், நேரம் ஒதுக்கியிருக்க மாட்டார். இதை ஒரு குறையாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக எம்.பி-க்கள் எந்த முறையில் நேரம் கேட்டார்கள் என்று தெரியவில்லை. உள்துறை அமைச்சரை இதுவரை எத்தனை முறை, எந்தெந்த விவகாரங்களுக்குச் சந்திக்க முயன்றார்கள், நாடாளுமன்றக் கூட்ட நேரத்தில் சந்திக்க முயன்றார்களா என்பதையெல்லாம் இவர்கள் விளக்க வேண்டும்.”