Published:Updated:

ஒன் பை டூ: ஏழைகள் அனைவரும் லட்சாதிபதிகளாகிவிட்டார்களா?

வழக்கறிஞர் பி.வில்சன் - வி.பி.துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
வழக்கறிஞர் பி.வில்சன் - வி.பி.துரைசாமி

“பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் ஏழைகள் அனைவரும் வீடுகட்டி லட்சாதிபதிகளாக மாறிவருகின்றனர்” என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமர் சொன்னது சரியான கருத்துதானா?

ஒன் பை டூ: ஏழைகள் அனைவரும் லட்சாதிபதிகளாகிவிட்டார்களா?

“பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் ஏழைகள் அனைவரும் வீடுகட்டி லட்சாதிபதிகளாக மாறிவருகின்றனர்” என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமர் சொன்னது சரியான கருத்துதானா?

Published:Updated:
வழக்கறிஞர் பி.வில்சன் - வி.பி.துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
வழக்கறிஞர் பி.வில்சன் - வி.பி.துரைசாமி

வழக்கறிஞர் பி.வில்சன், மாநிலங்களவை எம்.பி., தி.மு.க

“ஆமாம்... ஆமாம்... நம் பிரதமர் என்றைக்குப் பொய் சொல்லியிருக்கிறார்?! அவர் சொல்வது உண்மைதான்... அவருடன் நெருக்கமான உறவில் இருக்கிற, அவருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணிக்கிற கார்ப்பரேட் ‘ஏழை’ நண்பர்கள்தான் மேலும் மேலும் லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக மாறிவருகின்றனர். பா.ஜ.க ஆட்சியில் மோடி நண்பர்களின் சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. 139 கோடி மக்கள்தொகைகொண்ட இந்தியாவில், 50 சதவிகித மக்களுக்கு விலையில்லா அரிசியைக் கொடுப்பதாகக் கூறுகிறார் மோடி. அப்படியெனில் நாட்டில் 50 சதவிகிதம் பேர் ஏழைகள் என்பதைப் பிரதமரே ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்... பிறகு எப்படி ஏழைகள் லட்சாதிபதிகளாக மாறிவருகின்றனர் என்று சொல்ல முடியும்? தேர்தல் ஒன்றுதான் பிரதமரின் குறி... அதற்காகவே இப்படிப் பேசுகிறார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் எத்தனை பேர் பலனடைந்திருக்கிறார்கள் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை... இருக்கும் புள்ளிவிவரங்களுமே ஊதிப் பெரிதாக்கப்பட்டவைதான்! வேளாண் சட்டங்களை அமல்படுத்தி, எதிர்ப்பு காரணமாக ரத்துசெய்தனர். ஆனால், ‘சட்டங்கள் அமலில் இருந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களும் செல்லும்’ என்று மத்திய அரசு தற்போது சொல்கிறது. யாருக்காகச் சட்டம் இயற்றினார்களோ அவர்கள் பயனடைந்துவிட்டனர், அதனால் ரத்துசெய்துவிட்டனர். அதுபோலத்தான் இப்போது பிரதமர் பேசியிருப்பதும் ஏமாற்று வேலை!”

வழக்கறிஞர் பி.வில்சன்
வழக்கறிஞர் பி.வில்சன்
வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

வி.பி.துரைசாமி, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.க

“இந்தியா கலப்புப் பொருளாதார நாடு. இங்கு கார்ப்பரேட்கள் வளர்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அதேசமயம், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆவதைப் பற்றி யோசிக்காமல், ஏழைகள் லட்சாதிபதிகளாக மாறுவதைப் பற்றித்தான் மோடி அரசு யோசிக்கிறது. ஏழைகள் சொந்த வீடு கட்டுவதற்காக, பிரதமர் வீட்டு வசதித் திட்டம் மூலம் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் வரை நிதி அளிக்கப்படுகிறது. அந்தத் தொகையில் வீடுகட்ட முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். வாஸ்தவம்தான்... மேற்கொண்டு கொஞ்சம் தொகையைப் போட்டு வீடுகட்டி அதற்கு உரிமையாளராக மாறியதும், அந்த ஏழை லட்சாதிபதியாக மாறிவிடுகிறார்தானே! ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவக் காப்பீடு, பட்டியல் சமூக மாணவர்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் ஸ்காலர்ஷிப் உள்ளிட்டவையும் மத்திய அரசு கொடுக்கிறது. பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலை உறுதிசெய்யப்பட்டிருப்பதால், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகப்போகிறது. இதையெல்லாம் வைத்துத்தான் பிரதமர் இப்படிப் பேசியிருக்கிறார். நாங்கள் என்ன செய்தோம் என்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்... சொன்னால், `இப்படிப் பேசுவது நியாயமா?’ என்கிறார்கள். 350 பொருள்களுக்கு வரியைக் குறைத்தது மட்டுமின்றி, வரியே இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதைப் பாராட்ட மனமில்லாதவர்கள்தான் இப்படிக் குற்றம் சொல்கிறார்கள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism