Published:Updated:

`தமிழ்நாட்டுக்குள் நம்மால் கால்வைக்க முடியாது!’ -டி.ஆர்.பாலு செயலால் தகித்த தி.மு.க எம்.பி-க்கள்

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின்போது தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு செயலால் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் தி.மு.க எம்.பி-க்கள்.

நாடாளுமன்றத்தில் நடந்துவரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு மசோதா நிறைவேற்றப்படும்போதும் பல்வேறு விவாதங்கள் நடைபெறுகின்றன. அதிலும், நேற்று முன்தினம் தாக்கலான தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அமித் ஷா
அமித் ஷா

பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் இந்தியக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள். இதுதொடர்பாக 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில், `11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்' என விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் மாற்றம் செய்து இனி அவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்தியக் குடியுரிமையை வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டம்
போராட்டம்

இது மதத்தின் அடிப்படையில் உள்ளதாகவும் மதச்சார்பின்மை என்னும் இந்தியாவின் அடிப்படையையே சிதைத்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வருகின்றன. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

`கிழித்தெறியப்பட்ட நகல்; ஆதரவு 311!’- மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது குடியுரிமை மசோதா

இந்நிலையில், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படும் போது அதை ஏற்க மறுத்து தி.மு.க வெளிநடப்பு செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

மசோதா தாக்கலின்போது, மக்களவையில் பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ``இந்த மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர வகுப்பினர் இங்கு வந்து வாழ்கின்றனர். எனவே, உள்துறை அமைச்சர் அந்தக் குறையைச் சரி செய்ய வேண்டும். இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்” எனப் பேசியுள்ளார்.

அறிக்கை
அறிக்கை

பின்னர், `நாங்கள் இந்த மசோதாவைத் திருப்தியுடன் ஏற்கவில்லை. எனவே, வெளிநடப்பு செய்கிறோம்’ எனக் கூறி எழுந்து சென்றுள்ளார். இதை எதிர்பார்க்காத எம்.பி ஒருவர், `குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லையென்றால் தமிழகத்தில் நம்மால் கால்வைக்க முடியாது’ எனக் கூறியதாக தி.மு.க தரப்பிலிருந்து தகவல் வெளியானது. ஆனால், அதை டி.ஆர்.பாலு பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒரு மசோதா தாக்கல் செய்யும்போது அது திருப்திகரமாக இல்லையென்றால் அதற்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்வது ஆளும்கட்சிக்கே ஆதரவாக அமையும் என்பது பொதுவான கருத்து. இதன் காரணமாகவே தி.மு.க வெளிநடப்பு செய்ததாக வெளியான தகவல், சர்ச்சையாகியுள்ளது. மேலும், `டி.ஆர்.பாலு தி.மு.க தலைமையின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்' என்று அவர் மீது குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

கனிமொழி அறிக்கை
கனிமொழி அறிக்கை

இந்நிலையில், இந்தச் சர்ச்சை தொடப்பாக விளக்கம் அளித்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, “ குடியுரிமை சட்ட மசோதா 2019 இஸ்லாமியர்களுக்கு எதிரானது. திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் சிறுபான்மையினரைக் கைவிடாது. 10/12/2019 அன்று பாராளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் இம்மசோதா மீதான விவாதம் முடியும் வரை இருந்து, கழகத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்ற பொய்ப் பிரச்சாரம் அரசியல் காழ்ப்புணர்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு