Published:Updated:

சேலம் எட்டு வழிச்சாலை: ``திமுக எப்போதும் எதிர்ப்பாக இருந்தது கிடையாது!" - அமைச்சர் எ.வ.வேலு

எ.வ.வேலு

``சாலை போடுவதற்கு எப்போதும் தி.மு.க எதிர்ப்பாக இருந்தது என்பதெல்லாம் தவறான செய்தி" - எ.வ.வேலு

சேலம் எட்டு வழிச்சாலை: ``திமுக எப்போதும் எதிர்ப்பாக இருந்தது கிடையாது!" - அமைச்சர் எ.வ.வேலு

``சாலை போடுவதற்கு எப்போதும் தி.மு.க எதிர்ப்பாக இருந்தது என்பதெல்லாம் தவறான செய்தி" - எ.வ.வேலு

Published:Updated:
எ.வ.வேலு

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், விவசாயிகள் பலரும் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பான வழக்கில், சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ஸ்டாலின், அதன் மேல்முறையீட்டு மனுவில் சேலம் எட்டு வழிச்சாலையைத் தொடரலாம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என்று கூறியிருந்தார்.

சேலம் - சென்னை சாலை
சேலம் - சென்னை சாலை

அதுமட்டுமல்லாமல் 2021-ல் `விவசாயிகளுக்கெதிரான சேலம் எட்டு வழிச்சாலை நிறைவேற்றப்படாது' என்று ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, சாலை போடுவதற்கு தி.மு.க எப்போதும் எதிர்ப்பாக இருந்தது கிடையாது என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் சேலம் எட்டு வழிச்சாலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த எ.வ.வேலு, ``அந்த சாலைகளைப் போடுவதற்காகப் பிரச்னைகள் வந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர், `சாலை போடுவதற்கு எப்போதும் தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்காது. ஏனென்றால் நாங்களும் ஆட்சியில் இருந்திருக்கிறோம், நீங்களும் ஆட்சியில் இருந்திருக்கிறீர்கள். சாலை போடுவது மக்களுக்கு அத்தியாவசியமானது. பிரச்னைகள் பூதாகரமாக இருக்கின்றன. விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள். பிரச்னைகளைத் தீர்த்துவைத்து சாலை போடுங்கள் அல்லது வேறு மாற்று வழி காணுங்கள்' என்று தான் சொன்னார்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

தேர்தல் காலங்களில் எங்களுடன் கூட்டணியிலிருந்தவர்கள் சில பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதை இல்லை என்று மறுக்கத் தயாராக இல்லை. இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். ஒன்றிய அரசாங்கம் சாலை போடவேண்டும் என்று சொல்கிற போது ஒரு கொள்கை முடிவு எடுத்து தான் பதில் சொல்ல முடியுமே தவிர நானாக இதைச் சொல்ல முடியாது என ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதையே சொல்கிறேன் இதுவொரு கொள்கை முடிவு, கலந்து பேசி தான் முடிவு எடுக்க முடியும். சாலை போடுவதற்கு எப்போதும் தி.மு.க எதிர்ப்பாக இருந்தது என்பதெல்லாம் தவறான செய்தி. அப்படி நாங்கள் எப்போதும் எதிர்ப்பாக இருந்தது கிடையாது. ஆனாலும் கூட இது கொள்கை முடிவு தான். முதலமைச்சர் தான் இதில் முடிவெடுக்க முடியுமே தவிர நாங்கள் நேரடியாக முடிவெடுக்க முடியாது" என்று கூறினார்.