Published:Updated:

`உள்ளாட்சித் தேர்தல் அவசரச் சட்டத்தால் யாருக்கு லாபம்?' - `பின்னணி' அரசியல்

கூட்டணிக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை எதிர்த்து அ.தி.மு.க தலைமை மறைமுகமாக சுயேச்சை வேட்பாளர்களைக் களம் இறக்கும். இதில் குறைந்த எண்ணிக்கை உடைய கட்சியினர் எப்படியும் மேயர் பதவி கேட்கமாட்டார்கள் என்று கணக்கை வைத்துக்கொண்டுதான் எடப்பாடி இந்தத் திட்டத்தையே வகுத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளாளுக்கு மேயர் பதவி கேட்டு குடைச்சல் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டுதான் எடப்பாடி அரசு உள்ளாட்சித் தேர்தலில் மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்று அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது என்கிறார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களை சொகுசு விடுதியில் தங்க வைத்ததுபோல் கவுன்சிலர்களையும் தங்க வைக்கப்போகிறார் எடப்பாடி. உள்ளாட்சித் தேர்தல்களில் குதிரைபேர அரசியல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று புகார்களை வாசிக்கத் தொடங்கியுள்ளனர் எதிர்க்கட்சியினர். மறைமுக வாக்கெடுப்பு எந்தக் கட்சியினருக்கு லாபம், எந்தக் கட்சியினருக்கு நஷ்டம் என்று விசாரிக்கத்தொடங்கினோம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

2016 அக்டோபர் மாதம் தமிழகத்தில் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு சிக்கல்கள் காரணமாகத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க அரசின் நடவடிக்கைகளின் மீதான நீதிமன்ற வழக்குகளின் காரணமாக டிசம்பர் 13-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டுமென்று மாநிலத் தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் வேக வேகமாக உள்ளாட்சி வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

'கழற்றிவிட்டு' களமாடும் அ.தி.மு.க... 'தாராளம்' காட்டாத தி.மு.க... - உள்ளாட்சி கூட்டணி உள்குத்து!

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும் 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும் உள்ளன. மேலும், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் என ஏராளமான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் இதுவரை அவற்றின் உறுப்பினர்களைப் போல நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அதாவது மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டு மேயரையும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களையும் தேர்ந்தெடுத்து வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை நேற்று தமிழக அரசு பிறப்பித்தது. அதாவது, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில்தான் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

மேயருக்கு நேரடித் தேர்தல் ரத்து;  மறைமுகத் தேர்தலுக்கு முடிவு? - அரசின் புதிய திட்டம்

இதுகுறித்து சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்புகள் குறைவுதான்" என்று பேசத்தொடங்கினார். "உள்ளாட்சி அமைப்புகளின் அடித்தளத்தைத் தகர்க்கிற வகையில் அ.தி.மு.க அரசு, மக்கள் நேரிடையாக வாக்களித்து வெற்றி பெற முடியாது என்கிற காரணத்தால் மறைமுக தேர்தலைப் புகுத்தி, அதன்மூலம் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி, பதவிகளை அபகரித்து விடலாம் என்று திட்டம் தீட்டிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் குதிரைபேர அரசியலுக்கு அ.தி.மு.க தலைமை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறது.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

இது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று. மறைமுகத் தேர்தல் முறையைச் செயல்படுத்தினால் கண்டிப்பாக அ.தி.மு.க-வினருக்குச் சாதகமாக அமைய வாய்ப்பிருக்கும் என்று நம்புகிறார்கள். ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளாளுக்கு மேயர் பதவி கேட்டு குடைச்சல் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டுதான் எடப்பாடி உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் என்று அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறார்.

இதற்குக் காரணம் என்னவென்றால் சென்னையைப் பொறுத்தவரை குறைந்தது 120 தொகுதிகளுக்கும் மேல் அ.தி.மு.க வேட்பாளர்கள் நிற்பார்கள். மீதமுள்ள இடங்களுக்குக் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா போன்ற கட்சிகளுக்கு ஒதுக்குவார்கள். அதிலும் ஒரு சில வேலைகளை அ.தி.மு.க-வினர் செய்வார்கள். கூட்டணிக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை எதிர்த்து அ.தி.மு.க தலைமை மறைமுகமாக சுயேச்சை வேட்பாளர்களைக் களம் இறக்கும். இதில் குறைந்த எண்ணிக்கை உடைய கட்சியினர் எப்படியும் மேயர் பதவி கேட்கமாட்டார்கள் என்று கணக்கை வைத்துக்கொண்டுதான் எடப்பாடி இந்தத் திட்டத்தையே வகுத்திருக்கிறார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அத்தோடு உள்ளாட்சித் தேர்தல் முடிவதற்குள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கப்போகிறார்கள் அ.தி.மு.க-வினர். அத்தோடு இந்த உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறாது. இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று முடித்துக்கொண்டார்.

அவசரச் சட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ``மறைமுகத் தேர்தலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதை நானும் கேள்விப்பட்டேன். முதலமைச்சரை எம்.எல்.ஏ-க்களும் பிரதமரை எம்.பி-க்களும் தேர்வு செய்வதுபோல் மேயர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வது ஜனநாயக நடைமுறைதான். இதில் என்ன ஜனநாயகத்துக்கு எதிராக நாங்கள் செய்துவிட்டோம். இதில் என்ன தவறு இருக்கிறது'' என்றார்.