Published:Updated:

என் இஷ்ட தெய்வமே முருகன்தான்!

ஆர்.எஸ்.பாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.எஸ்.பாரதி

‘முருகனை’ கையிலெடுக்கும் ஆர்.எஸ்.பாரதி

தமிழக பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்குப் போட்டியாக பிரசாரப் பயணம் கிளம்பி தினம் தினம் கைதாகி, விடுதலையாகிறார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. கூடவே, மடாதிபதி தருமபுரம் ஆதினத்திடம் விபூதி பூசிக்கொண்டும், ஆசீர்வாதம் வாங்கியும் ‘இந்து’ ஓட்டுகளை கவர் செய்கிறார். இன்னொரு பக்கம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் மனமுருகப் பிரார்த்தனை செய்து போஸ் கொடுக்கிறார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இந்து வாக்குகளைக் கவர்வதற்கான முயற்சிகளில் தி.மு.க தீவிர கவனம் செலுத்திவருகிறதுபோல?’’

“தமிழ்நாட்டில் இந்து மதம் இப்போதுதான் இறக்குமதி ஆகியிருக்கிறதா என்ன... இந்து மதம் இங்கே தொன்று தொட்டு இருக்கிறது. நாங்களும் 1957-ம் ஆண்டிலிருந்து தேர்தல் அரசியலில் பங்கேற்று வருகிறோம். இப்போது மட்டும் இப்படிக் கேள்வி வருவது ஏன்?’’

“இல்லையே... முன்பெல்லாம் தி.மு.க தலைவர்கள் வெளிப்படையாகக் கோயில் தரிசனம் செய்ய மாட்டார்கள். ஆனால், பா.ஜ.க முருகக் கடவுளை பிரசார யுக்தியாகக் கையிலெடுத்திருக்கும் இந்த நேரத்தில், நீங்களும் திருச்செந்தூர் கோயிலில் முருகனை தரிசித்துவிட்டு, பகிரங்கமாக போஸெல்லாம் கொடுத்திருக்கிறீர்களே..?’’

“சூரசம்ஹாரத்துக்கு நான் திருச்செந்தூர் செல்வது வழக்கமானதுதான். ஏனெனில், என் இஷ்ட தெய்வமே முருகன்தான். இந்த வருடம் சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதனால், சூரசம்ஹாரத்துக்கு முந்தைய நாளே திருச்செந்தூர் சென்றுவந்தேன்.’’

“உதயநிதியும்கூட அங்காள பரமேஸ்வரியைக் கும்பிட்டுவிட்டே பிரசாரத்தைத் தொடங்குகிறார். இதெல்லாம் ‘இந்து வாக்குகளைத் தக்கவைக்க வேண்டும்’ என்ற பயத்தின் வெளிப்பாடுதானே?’’

“இந்தக் கேள்வியை நீங்கள் எங்களைப் பார்த்துக் கேட்கக் கூடாது. தமிழக பா.ஜ.க-வைப் பார்த்துத்தான் கேட்க வேண்டும். ராமர் பெயரை வைத்துக் கொண்டு இவ்வளவு நாளும் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அது எடுபடவில்லை என்பதைக் கடந்த 2019 தேர்தலில் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதனால், இப்போது முருகனின் வேலைப் பிடித்துக்கொண்டு யாத்திரை கிளம்பியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முக்கால்வாசிக் கோயில் கும்பாபிஷேகங்கள் தி.மு.க தொண்டர் களின் அன்பளிப்பில்தான் நடக்கின்றன. கோயில்களில் ஒரு வேளையாவது பூஜை நடைபெற வேண்டும் என்று சட்டம் போட்டவரே கலைஞர்தான்.’’

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

“அப்படியென்றால், ‘தமிழ்நாடு பெரியார் மண்’ என்று சொல்வதெல்லாம்..?’’

“தி.க-விலிருந்து பிரிந்துவந்த தி.மு.க., பெரியார் சொன்ன சமூகநீதியை நூறு சதவிகிதம் பின்பற்றிவருகிறது. ‘கடவுள் இல்லை’ என்று பெரியார் சொன்னதால், பெரிய மாற்றம் இங்கு வந்துவிடவில்லை. தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வந்ததற்குக் காரணமே இட ஒதுக்கீடு எனும் சமூகநீதிதான். இன்றைக்கும் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடுகிறோம். இதைத்தான் ‘பெரியார் மண்’ என்று சொல்லிக்கொள்கிறோம்.’’

“ஏழரை சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் அ.தி.மு.க அரசுக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதை ஏற்க முடியாமல்தான், ‘பத்து சதவிகித இட ஒதுக்கீடு ஏன் கொடுக்கவில்லை, கல்விக் கட்டணத்தை தி.மு.க-வே ஏற்கும் என்றெல்லாம் தி.மு.க ஸ்டன்ட் அடிக்கிறது’ என்று ஆளுங்கட்சியினர் விமர்சிக்கிறார்களே..?”

“நாங்கள் இதைக் கையிலெடுத்திருக்காவிட்டால், ஏழரை சதவிகித இட ஒதுக்கீடே கிடைத்திருக்காது. ஆளுநர் கையெழுத்திடாமல் தாமதப்படுத்தியபோதும் தி.மு.க-தான் போராட்டம் நடத்தி அழுத்தம் கொடுத்தது. இன்றைக்கும்கூட, கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், இட ஒதுக்கீடு இடங்களைப் பறிகொடுத்து விட்ட குழந்தைகளைச் சந்திக்க மறுத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. இந்த அரசுக்குத் தெளிவான முடிவெடுக்கும் திறன் கிடையாது. ‘மருத்துவப் படிப்புச் செலவை தி.மு.க-வே ஏற்றுக்கொள்ளும்’ என்று தி.மு.க அறிக்கை வெளியான பிறகே தமிழக அரசு ‘நாங்களே செலுத்துகிறோம்’ என்று அரசாணை வெளியிட்டிருக்கிறது.”

“ஆளுங்கட்சியினரின் டெண்டர் குறித்துக் கேள்வி எழுப்பிய தி.மு.க., ‘பொன்முடி, துரைமுருகன்’ உதாரணத்துடன் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்ததும் அமைதியாகிவிட்டதே..?’’

“தனியாருக்குச் சொந்தமான இடத்திலிருந்து செம்மண் எடுப்பதற்கான குவாரிக்கும் அரசிடமிருந்துதான் அனுமதி வாங்க வேண்டும். அந்தவகையில், பொன்முடி தரப்பிலிருந்து லைசென்ஸ் வாங்கியது சட்டப்படி சரியானதுதான். ஆனால், அரசுக்குச் சொந்தமான இடத்தில் குவாரி நடத்துவதற்கான உரிமையை அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகனுக்குக் கொடுத்திருப்பது முறைகேடானதுதான். நான் நான்கு முறை நகர்மன்றத் தலைவராக இருந்தவன். சாதாரணமாக நகராட்சி கவுன்சிலரே நகராட்சியின் டெண்டரை எடுக்கக் கூடாது. அதாவது பொது ஊழியர், அவரின் மனைவி, வாரிசு யாரும் எடுக்கக் கூடாது. அதனால்தான், 1992-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, டான்சி நிலத்தை வாங்கியபோது, வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றேன்.’’

“தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘எந்த ஊரில்தான் வாரிசு அரசியல் இல்லை...’ என்று வாரிசு அரசியலை நியாயப்படுத்திப் பேசுகிறாரே?’’

“காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவில் ஆரம்பித்து தமிழ்நாட்டில் தளபதி வரை வாரிசு அரசியல்தான் எடுபட்டிருக்கிறது. பா.ஜ.க-விலேயே வாரிசுகள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்று `முரசொலி’யில் பட்டியலே வெளியிட்டிருக் கிறோமே!’’