Election bannerElection banner
Published:Updated:

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி! - திமுக-வின் திட்டம் என்ன?

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

அமைச்சர்களுக்கு எதிராக, திமுக களம்காணும் என்றவர், அதற்காகச் சிறப்பு வியூகங்களும் அமைத்தார். அதன்படி, ஸ்டாலினின் மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் உள்ள வேலுமணிக்கு எதிராக, தொண்டாமுத்தூர் தொகுதியில் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களம்காண்கிறார்

``தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களைவிட கோவை மாவட்டத்தில் பெரிய அராஜகம் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும். வேலுமணி ஊழலாட்சித்துறை அமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இது உங்க அப்பா வீட்டுப் பணமா? மக்கள் வரிப்பணம். உங்களை அப்படியெல்லாம் விட மாட்டோம்.

வேலுமணி
வேலுமணி
சசி விடுதலை.. வேலுமணி-க்கு EPS செக்..புது ட்விஸ்ட்! | TN Elections 2021| Elangovan Explains

திமுக ஆட்சியமைந்தவுடன் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு பாயும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையில் பேசிய கருத்துகள் இவை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக, ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்கும் நபர் வேலுமணிதான்.

சட்டசபைத் தேர்தலில் அனைத்து அமைச்சர்களுக்கு எதிராகவும், திமுக களம்காணும் என்றவர், அதற்காக சிறப்பு வியூகங்களும் அமைத்துள்ளார். அதன்படி, ஸ்டாலினின் இந்த மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் உள்ள வேலுமணிக்கு எதிராக, தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சுற்றுசூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களம்காண்கிறார். கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில், தொண்டாமுத்தூர் தொகுதி திமுக-வில் கூட்டணிக் கட்சிக்கு சென்றது.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

விளைவு, வேலுமணி தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய வெற்றியைப் பெற்றார். அதனால், இந்தமுறை எப்படியாவது வேலுமணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக காங்கேயத்திலிருந்து தொண்டாமுத்தூருக்கு களமிறக்கப்பட்டுள்ளார் கார்த்திகேய சேனாபதி. வேலுமணி மீதான ஸ்டாலினின் இந்தக் கோபத்துக்கு ஒரு டஜன் காரணங்கள் உள்ளன.

2019 நாடாளுமன்றக் காலகட்டம். மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். கோவையும் வந்தார். ஆனால், இங்கு பேசிவிட்டுச் சென்றவுடன், அமைச்சர் வேலுமணி மீது அவதூறு பரப்புகிறார் என்று ஸ்டாலின் மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. தனது அதிகாரத்தால், கோவை திமுக நிர்வாகிகளையும் கவனித்து, திமுக-வின் வளர்ச்சியைத் தடுக்கிறார் என்று வேலுமணி மீது புகார் உள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதையும் மீறி அவருக்கு எதிராகச் செயல்படும் திமுக-வினர் மீது வழக்கு பாயும் என்பது எழுதப்படாத கோவை விதி. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கோவை தேவராயபுரம் கிராமத்தில் நடந்த திமுக மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அது தொண்டாமுத்தூர் தொகுதி என்பதால் உடன்பிறப்புகளிடம் உற்சாகம் எகிறியிருந்தது. ஸ்டாலினும் வேலுமணியை கடுமையாகச் சாடிக்கொண்டிருந்தார். திடீரென்று எழுந்த ஒரு பெண், ஸ்டாலினிடம் ஆக்ரோஷமாகப் பேசத் தொடங்கினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதற்கு, ``நீங்க யார்... எந்த ஊர்..?" என்றொல்லாம் ஸ்டாலின் கேட்டதற்கு, ``அதுகூடத் தெரியாம ஏன் வந்தீங்க?" என்று அந்தப் பெண் கூறினார். அந்த இடம் பரபரப்பானது. உடனடியாக, ``இது வேலுமணி அனுப்பின ஆளு... உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

அந்தப் பெண் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் அமைச்சர் வேலுமணியுடன் இருக்கும் படங்கள், அவர் வேலுமணியுடன் போன் பேசும் வீடியோ வெளியாகின. ``ஸ்டாலினின் இமேஜை உடைப்பதற்காக, வேலுமணி ஏவிய அம்புதான் இது" என்று திமுக-வினர் கொந்தளித்தனர். ஸ்டாலினுக்கே சவால் அரசியல் செய்யும் வேலுமணியை எதிர்த்து அதிரடி அரசியல் செய்ய கோவை திமுக-வில் சீனியர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை.

வேலுமணி
வேலுமணி

இப்போதிருக்கும், கோவை திமுக சீனியர்களின் பலரது வளர்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டது வேலுமணிதான். இதனால், அவரைத் துணிந்து எதிப்பவர்கள் குறைவு. அப்படியே எதிர்த்தாலும் அவருக்கு இணையான பணபலம் கொண்டவர்களும் இல்லை.

வேலுமணியுடன் திமுக நிர்வாகிகள் கொண்டிருக்கும் நெருக்கத்தால் அறிவாலயம் அனலாகக் கொதித்தது. சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்கூட கோவையில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் நா.கார்த்திக்கிடம், ``நீங்க கோவை மாநகராட்சி சம்பந்தமான எந்த ஊழலையும் வெளிக் கொண்டு வரலை" என்று கடிந்துள்ளனர். இத்தனைக்கும் கார்த்திக் கோவை மாநகராட்சி துணை மேயராக இருந்திருக்கிறார்.

ஸ்டாலினுடன், சேனாபதி
ஸ்டாலினுடன், சேனாபதி

வேலுமணி நிற்பதால், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு தி.மு.க-வில் குறைந்த எண்ணிக்கையிலான விருப்ப மனுக்களும் கொடுக்கப்பட்டன. இனியும், இவர்களை நம்ப வேண்டாம் என்றுதான் காங்கேயம் பக்கம் சென்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியை அழைத்து வந்திருக்கிறார்கள்.

கார்த்திகேய சிவசேனாபதிக்கு காங்கேயம் அருகிலுள்ள குட்டப்பாளையம்தான் பூர்விகம். ஆனாலும், வேலுமணியை எதிர்க்க இவர்தான் சரியான நபர் என்று திமுக நினைக்கிறது. அதற்குத் தகுந்ததுபோல, சேனாபதியும் கடந்த சில மாதங்களாகவே தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரங்களில் தலையைக் காட்டி, ஸ்டாலின் பாணியிலேயே வேலுமணியை ஊழல்மணி என்று விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். தொண்டாமுத்தூர் தொகுதியில் நகரப்பகுதிகளும் வருகின்றன.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

ஏற்கெனவே, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் சேனாபதி இங்கு பரிச்சயமாகியிருப்பதால், மாற்றத்துக்கான வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்று நம்புகின்றனர். அதேபோல, தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மை மக்கள் வாக்குகளும் இந்த முறை தங்களுக்குக் கிடைக்கும் என்று கணக்கு போடுகின்றனர். சேனாபதி கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த பாரம்பர்யமிக்க குடும்பம் என்பதால், கிராமப்புறப் பகுதிகளையும் கவர் செய்துவிடலாம் என்று திட்டம் போடுகின்றனர்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்கு திமுக-வில் தயாநிதிமாறன் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மொத்தம் 2,02,770 வாக்குகள் பதிவாகியிருந்தன. அவற்றில், அதிமுக-வுக்கு 75,127 வாக்குகளும், திமுக-வுக்கு 96,218 வாக்குகளும் கிடைத்தன.

தொண்டாமுத்தூர் தொகுதி
தொண்டாமுத்தூர் தொகுதி

அதாவது, அதிமுக-வைவிட, திமுக-வுக்கு 21,091 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளன. அதன் மூலம், வேலுமணியின் செல்வாக்கு சரியத் தொடங்கியிருக்கிறது என்பது திமுக-வின் நம்பிக்கை. அதை கார்த்திகேய சிவசேனாபதி மூலம் சிறப்பு வியூகம் அமைத்துக் கைப்பற்றுவதுதான் திமுக-வின் திட்டம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானவுடன், ``ஸ்டார்ட் பண்ணலாங்களா... என்னையெல்லாம் மிரட்ட முடியாது. ஞாயித்துக்கிழமை தொண்டாமுத்தூர் வர்றேன். உங்கனால என்ன முடியுமோ அதைப் பண்ணுங்க. இதுக்கெல்லாம் பயந்தவன் திமுக-காரன் கிடையாது. உங்க பழைய கட்சிக்காரன்கிட்ட கேட்டுப் பாருங்க. திமுக-காரன்னா யாருன்னு சொல்லுவாங்க. திமுக-ன்னாலே கெத்து.

வேலுமணி
வேலுமணி

எங்க வேணாலும் வந்து நிப்போம். பயப்பட மாட்டோம். பயப்படறதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க” என்று வேலுமணியைச் சீண்டியிருக்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி. கடந்த தேர்தல்களைப்போல, வேலுமணி எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு