Published:Updated:

`தொகுதி மாறினால் பின்னடைவுக்கு வாய்ப்பு!' - போடி தொகுதியில் `திடீர்' கரிசனம் காட்டும் ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

`சென்னை அல்லது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏதாவது ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிடலாம்' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

போடி தொகுதிக்குள் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ` 'தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், தொகுதி மக்களிடம் கரிசனம்காட்டத் தொடங்கிவிட்டார் ஓ.பி.எஸ். அதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களையெல்லாம் வெள்ளையடித்து திறந்துகொண்டிருப்பதுதான் கொடுமை' எனக் கமென்ட் அடிக்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் முக்கிய நிர்வாகிகள் பலரும் தொகுதி மாறிப் போட்டியிடலாம் என்ற தகவல் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில், `சென்னை அல்லது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏதாவது ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிடலாம்' என்ற முடிவுக்கு வந்திருக்கிறாரஓ.பி.எஸ். இதற்கு பதில் கொடுத்த அவரது நெருங்கிய ஆதரவாளர்கள், `ஊர் பேர் தெரியாத இடத்தில் போட்டி போட்டுத் தோற்றுவிட்டால், தற்போதைய அரசியல் சூழலில் பெரிய பின்னடைவாக அமையும்' எனக் கூறவே, மீண்டும் போடியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

`ரேஷன் கடை முதல் சமுதாயக் கூடம் வரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிடுங்கள்' என மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். கட்டடத் திறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லையென்றாலும், `மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏதாவது ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள். நான் வருகிறேன்' எனக் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை கவனித்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ` ஓ.பி.எஸ் இங்கேயே முகாமிட்டிருக்கிறார். சென்னையில் வேலை எதுவும் இல்லையா?’ எனக் கேள்வியெழுப்புகின்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன்
முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன்

ஓ.பி.எஸ்-ஸின் தொகுதி ரவுண்ட் அப் குறித்து போடி தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ லட்சுமணனிடம் பேசினோம். ``ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தொகுதிக்குள் தலைகாட்டுகிறார் ஓ.பி.எஸ். அதற்காக 2015-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கெல்லாம் வெள்ளையடித்துத் திறந்து வைப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை. ஓ.பி.எஸ் ஊருக்குள் வருகிறார் என்று சொன்னால், தேர்தல் வரப்போகிறது என்று அர்த்தம். வலையப்பட்டியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக் கூடம் ஒன்றைத் திறந்துவைக்கவிருக்கிறார் அவர். இந்தக் கட்டடம் ஐந்து வருடங்களுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இதை மறைத்துவிட்டு புதிய கட்டடம்போலக் காட்டுவதற்கு மெனக்கெடுகின்றனர்.

Vikatan

இதேபோல், கட்டி முடிக்கப்பட்ட சுகாதாரக் கழிப்பிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சமுதாய நலக் கூடங்கள் என மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றையெல்லாம் திறந்துவைக்கிறார்" என விவரித்தவர், தொடர்ந்து நம்மிடம் சில விஷயங்களைப் பட்டியலிட்டார்.

`` அனைத்து மகசூல் விவசாயிகள் சங்கத்தினர் கட்டடம் கட்டுவதற்கு ரூ.10 லட்ச ரூபாய் நிதி கோரியிருந்தனர். இதற்காக, `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திருச்சி சிவாவிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் என்னென்ன கோரிக்கைகள் செய்து தரப்படவில்லை என்பதையும் அவர்கள் விவரித்தனர். மேலும், தொகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் தெரிவித்தனர். இதை அறிந்த பன்னீர்செல்வம் மறுநாளே விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நிதி உதவி செய்திருக்கிறார். மேலும், திருச்சி சிவாவிடம் கோரிக்கை மனு கொடுத்த ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள், 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கம் என அனைவரையும் அழைத்து, `தி.மு.க-வினரிடம் என்னென்ன கோரிக்கைளுக்காக மனு கொடுத்தீர்களோ, அந்த மனுக்களையெல்லாம் எடுத்து வாருங்கள்' எனக் கூறி நிவர்த்தி செய்வதற்கான வேலைகளை மேற்கொண்டுவருகிறார்.

ஓ.பி.எஸ் திறக்க உள்ள கட்டடம்
ஓ.பி.எஸ் திறக்க உள்ள கட்டடம்

கொரோனா பரவல் காரணமாக ஏலக்காய் வியாபாரத்துக்கான 65 டேபிளை 45 டேபிளாகக் குறைத்துவிட்டனர். இதைப் பழையபடி அதிகரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் தெரிவித்தோம். இதையறிந்து ஏலக்காய் வியாபாரம் நடக்கும் மையத்துக்குச் செல்லவிருக்கிறார் பன்னீர்செல்வம். நாங்கள் செய்யும் மக்கள் பணிகளைப் பார்த்து அவருக்கு பயம் வந்துவிட்டது. 10 வருடங்களாக மக்களைச் சந்தித்து, குறைகளையே கேட்காதவர், இப்போது கேட்பது என்பது போடி சட்டமன்றத் தொகுதியில் அவருடைய இறங்குமுகத்தையே காட்டுகிறது. ஊருக்குள் இருக்கும் பழைய கட்டடங்களை அவர் வெள்ளையடித்துத் திறந்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை” என்றார் கொதிப்புடன்.

தி.மு.க தரப்பின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர், ``கோயில் திருப்பணிகள், சமுதாயக் கூடம் என அனைத்துமே முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கட்டடப் பணிகள்தான். அவையெல்லாம் முடியக்கூடிய தருவாயில் இருக்கின்றன. தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் இவற்றையெல்லாம் திறக்க முடியாது. வலையபட்டியிலுள்ள சமுதாய நலக் கூடமும் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதையெல்லாம் ஒவ்வொன்றாக துணை முதல்வர் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார். போடி தொகுதிக்குள் எப்போது வந்தாலும் மக்களின் குறைகளைத் தீர்க்காமல் அவர் சென்றது கிடையாது. தேர்தல் வந்தாலும், வராவிட்டாலும் அவர் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார். தி.மு.க-வினர்தான் இதை அரசியலாக்குகிறார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு