அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

‘கருணாநிதி’ கட்சியை கரைசேர்க்குமா கார்ப்பரேட் வியூகம்?

நிதிஷ்குமாருடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
நிதிஷ்குமாருடன்...

அந்தத் தேர்தலில் மோடிக்குக் கிடைத்த வெற்றி, பிரசாந்த் கிஷோரின் மார்க்கெட்டை உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

தி.மு.க-வின் தேர்தல் வியூகத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். ‘Indian Political Action committee’ சுருக்கமாக `IPAC’ என்றழைக்கப்படும் நிறுவனம்தான், அண்ணா வளர்த்த கட்சியை இப்போது அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும் வேலையைச் செய்யப்போகிறது.

தமிழக அரசியல் களத்தில் எழுந்த பல்வேறு சவால்களை, கடந்த அரை நூற்றாண்டு காலமாக தன் மதி வியூகத்தால் வீழ்த்திக்காட்டியவர் மு.கருணாநிதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தி.மு.க என்ற கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். அந்தத் தி.மு.க-தான், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு தேர்தல் வியூக கார்ப்பரேட் நிறுவனத்துடன் இப்போது ஒப்பந்தம் போட்டிருக்கிறது. ஒப்பந்தத்தில் தி.மு.க சார்பில் ஆலந்தூர் பாரதி கையெழுத் திட்டிருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க-வின் தேர்தல் வியூகம், பிரசாரம் உள்ளிட்ட அனைத்தையும் சுனில் தலைமையிலான ஓ.எம்.ஜி குழுவே செய்துவந்தது. கடந்த மாத இறுதியில் இந்தப் பணியிலிருந்து சுனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தான் இந்தப் புதிய ஒப்பந்தத்தின் சூத்திரதாரி என்கிறது அறிவாலய வட்டாரம். இப்போது தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டுள்ள பிரசாந்த் கிஷோர், கடந்த சில மாதங்களாக மக்கள் நீதி மய்யம், அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கும் வேலைபார்த்தார் என்று பேச்சிருக்கிறது. இது தெரிந்தும், தி.மு.க தலைமை துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது. அண்ணாநகரில் இதற்காக சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

அன்றும் இன்றும்!

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணியாற்றியது, பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனம். அந்தத் தேர்தலில் மோடிக்குக் கிடைத்த வெற்றி, பிரசாந்த் கிஷோரின் மார்க்கெட்டை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. அப்போதே தி.மு.க தரப்பில் பிரசாந்த் கிஷோரைக் கையிலெடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், வட இந்தியராக இருப்பதால் திராவிடக் கலாசாரத்தை அவரால் உள்வாங்க முடியாது என்று ஸ்டாலினிடம் தடைபோட்டுவிட்டனர் தி.மு.க மூத்த தலைவர்கள். அதன் பிறகுதான் பிரசாந்த் கிஷோரின் டீமில் இருந்த சுனிலை தி.மு.க தரப்புக்குக் கொண்டு வந்தார்கள். அவர் வந்த பிறகுதான் ஸ்டாலினின் அரசியல் மேடைகள் மாற்றம் கண்டன. குறிப்பாக, ‘நமக்கு நாமே’ உள்ளிட்ட பல திட்டங்களை அரங்கேற்றியது அவர் தலைமையிலான ஓ.எம்.ஜி குழுதான்.

ஜெகன்மோகன் ரெட்டியுடன்...
ஜெகன்மோகன் ரெட்டியுடன்...

பிரசாந்த் கிஷோரிடம் முன்பு பணியாற்றிய சிலரிடம் பேசியபோது, ‘‘2014-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவர் வெளியேறினார். அதன் பிறகு மாநிலக் கட்சிகளின்மீது கிஷோரின் கவனம் திரும்பியது. நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி என வரிசையாக பிராந்திய கட்சிகளுக்கு வேலைசெய்தார். அடுத்து, தமிழகம் பக்கம் வந்தார். முதலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க, பெரும்தொகையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து, ரஜினியை அணுகியபோது அவர் மறுத்துவிட்டார். பின்னர் அ.தி.மு.க-வுக்கு முதல்கட்டப் பணிகளைச் செய்தார். இப்போது, சபரீசனுடன் பேசி தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்’’ என்று விவரித்தனர்.

தி.மு.க-வுக்கு இருக்கும் சில சிக்கல்களையும் அவர்களே சொன்னார்கள். ‘‘பிரசாந்த் கிஷோர், ஜெயிக்கும் குதிரையில் மட்டுமே பந்தயம் கட்டுவார். தமிழகத்தில் தி.மு.க ஜெயிக்கும் என்று கணித்துதான் வலியச்சென்று ஒப்பந்தம் போட்டுள்ளார். அவர் தேர்தல் பணியை மட்டும் பார்க்க மாட்டார்; வேட்பாளர் தேர்விலும் பல சிக்கல்களை ஏற்படுத்துவார். தி.மு.க தரப்பு, முதல்கட்டமாக 15 மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. தொகை எதுவும் பேசவில்லை. `ஜெயித்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று பிரசாந்த் சொல்லியிருக்கிறார். 2021-ல் மேற்குவங்கத்துக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாநிலத் தேர்தல்களை எப்படிக் கையாள்வார் எனத் தெரியவில்லை’’ என்றனர்.

நிதிஷ்குமாருடன்...
நிதிஷ்குமாருடன்...

பிரசாந்த் கிஷோர் தரப்பில் பேசியவர்களோ, “எங்களுக்கு தொழில், அரசியல் வியூகம் வகுப்பது. தொழில் தர்மத்தை மீறாமல் நாங்கள் செயல்படுவோம். எங்களுக்கு கட்சிப் பாகுபாடு கிடையாது” என்றார்கள்.

கடைசியில், கருணாநிதியால் கட்டிக் காப்பற்றப்பட்ட கட்சியும்கூட கார்ப்பரேட் கம்பெனி மூலமாகத்தான் கரைசேரத் துடிக்கிறது!