அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிய நிலக்கரிச் சுரங்கங்கள் அமைப்பதற்கான மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி, தமிழக பா.ஜ.க-வினரே எதிர்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஆளுநர் விமர்சித்துப் பேசியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜ் பவனிலுள்ள தர்பார் அரங்கில் 06.04.2023 அன்று சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள், நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றன. தென் தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டத்துக்கான வேலையைத் தொடங்கும்போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்ற தாக்கம், அணு உலை வெடிக்கலாம், மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் போராட்டங்கள் வெடித்தன. யாரும் பசி, பட்டினியோடு போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களின் பின்னால் இருப்பவர்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது” எனக் கூறியிருந்தார்.
அதேபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையில் 40% தாமிரத்தை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துவந்தது. அதை மூடிவிட்டார்கள். மின்சார உற்பத்திக்கு தாமிரம் முக்கியத் தேவை. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் துரதிருஷ்டவசமாக அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது கவலைக்குரியது. போராட்டத்துக்குக் காரணமான அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றிருக்கின்றன. இத்தகைய நன்கொடைகள் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்றும் பேசியிருந்தார்.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க-வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “மக்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் கடந்த கால அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே ஸ்டெர்லைட் ஆலையை அ.தி.மு.க அரசு மூடியது. அப்படியிருக்கும்போது, ஸ்டெர்லைட் ஆலை வெளிநாட்டுச் சதியால் மூடப்பட்டது எனக் கூறுவது ஆளுநருக்கு அழகல்ல. அது தவிர, உலகத் தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இவ்வாறு வெளிநாட்டுச் சதிகளை அனுமதிக்கக்கூடியவரும் அல்ல” எனக் கூறியிருக்கிறார்.
ஏறக்குறைய 30 ஆண்டுக்காலமாக நடைபெற்ற வழக்கின் அடிப்படையில் மூடப்பட்ட ஓர் ஆலையை, பணம் வாங்கிக்கொண்டு எதிர்த்துப் பேசுகிறார்கள் எனக் கொச்சைப்படுத்துவதா என்று கேள்வியெழுப்புகிறார் தி.மு.க. செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா. இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “பா.ஜ.க-வுக்கு ஃபண்டிங் ஏஜெண்டாக வேதாந்தா நிறுவனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வேதாந்தா நிறுவனத்தை கட்டமைக்கவும் பா.ஜ.க நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள். மக்களின் தன்னெழுச்சியால், மண்சார் சூழலியல் தன்னெழுச்சியால் உருவான போராட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம். 17 உயிர்களை இழந்து, ஸ்னோலின் போன்ற சிறுமிகளின் வாயில் குண்டுகள் பாய்ந்து மூடப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை. அத்தகைய போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கினார்கள் எனப் பேசுவது, அந்த மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல். அந்த மக்களைப் புரிந்துகொள்ளாமல் ஆளுநர் பேசுகிறார்” என்றார்.
கூடங்குளம் அணு உலைப் போராட்டம் 2011-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றது. 2012-ம் ஆண்டிலேயே அரசுப் பணியிலிருந்து ஆர்.என்.ரவி ஓய்வு பெற்றுவிட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த சமயத்தில், அவர் இந்தோ- நாகா அமைதிப் பேச்சுவார்த்தைக்கான குழுவில் மத்தியஸ்தராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.