Published:Updated:

“விசா ஏஜென்சி நடத்துகிறாரா சீமான்?"

- கிண்டல் செய்கிறார் இராஜீவ் காந்தி

பிரீமியம் ஸ்டோரி

‘பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்று கடந்த வாரம் வரை உறுதி காட்டிவந்த தமிழக அரசு, பெருமழையில் சென்னை மூழ்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘கடந்தகால அ.தி.மு.க அரசு முறைகேடு செய்திருப்பதே இந்தப் பெருவெள்ளத்துக்குக் காரணம்’ என தடாலடியாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த நிலையில், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினேன்...

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதால்தான் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது என இப்போது அ.தி.மு.க மீது பழிபோடுவது நியாயம்தானா?’’

“ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க அரசுமீது மட்டுமே நாங்கள் பழி சுமத்தவில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததைவிடவும் அதிகப்படியான மழை பெய்திருப்பதுவும் ஒரு காரணம்தான். அதேசமயம் பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைக் கடந்தகால அ.தி.மு.க அரசு சரிவரச் செயல்படுத்தவில்லை என்பது முக்கியக் காரணம். 2015 பெருவெள்ளத்துப் படிப்பினைக்குப் பிறகு, துண்டிக்கப்பட்டுவிட்ட மழைநீர் வடிகால் பாதைகளையெல்லாம் இணைப்பதாகவும் சென்னையைச் சுற்றியுள்ள 42 நீர்நிலைகளைத் தூர்வாருவதாகவும் சொல்லியிருந்தார்கள். ஆனால், 23 நீர்நிலைகளில் எந்தவிதப் பணியுமே நடைபெறவில்லை. அப்படியென்றால், குடிமராமத்துப் பணி, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் செலவழிக்கப்பட்ட 5,000 கோடி ரூபாய் பணம் எங்கே போனது என்ற கேள்வியையும் கேட்கிறோம்.’’

“அ.தி.மு.க ஆட்சியின்போது ஆளுநரின் அரசியல் தலையீட்டுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க., இப்போது அதே ஆளுநரின் செயல்பாட்டுக்குச் சமாதானம் சொல்லிவருகிறதே..?’’

“பொதுவாக ஓர் ஆளுநருக்கு, அந்த மாநிலத்தின் சட்ட திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்குச் சட்டரீதியான உரிமையைவிடவும் தார்மிக அடிப்படையிலான உரிமை உண்டு. புதிதாகப் பதவியேற்ற ஓர் ஆளுநர், மாநில அரசை மேற்பார்வையிடுவதென்பது வேறு, கணக்கு கேட்டு சரிசெய்வதென்பது வேறு. அ.தி.மு.க ஆட்சியின்போது, அதிகாரிகளிடம் நேரிடையாக விவாதமே செய்தார் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அன்றைய முதல்வர் எடப்பாடி இது குறித்து ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தற்போதைய ஆளுநர் எந்த இடத்திலும் நேரிடையாக அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யவில்லை. முதல்வரது கண்காணிப்பின் கீழ்தான், ஒன்றிய, மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்கிறார்.’’

“முல்லைப்பெரியாறு அணைத் திறப்பு விவகாரத்திலும்கூட தி.மு.க அரசு பல்டியடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?’’

“முல்லைப்பெரியாறு அணையில், ஆண்டு முழுவதும் 142 அடிக்குத் தண்ணீரைத் தேக்கிவைத்திருக்க முடியாது. அந்த வகையில், மழைக்காலமான அக்டோபர் மாதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் 138 அடிக்குத்தான் தண்ணீரைத் தேக்கிவைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. ஆனால், அதிகப்படியான மழையால் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அணையின் நீர் மட்டம் 138.8 அடியாக உயர்ந்திருந்தது. எனவே, தமிழக அரசின் செயற்பொறியாளர்கள், கேரள மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே 138 அடிக்கு மேல் இருந்த நீரை மட்டும் திறந்துவிட்டனர். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் பல்டியடித்திருப்பது முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்தான். ஒரு முறைகூட முல்லைப்பெரியாறு அணையைப் பார்வையிடாதவர், 14 முறை பார்வையிட்டிருப்பதாகப் பொய் சொல்லிவருகிறார்.’’

“ ‘தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு’ என்ற கருணாநிதியின் அறிவிப்பை மாற்றி ‘சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது ‘கோமாளித்தனத்தின் உச்சம்’ என்கிறாரே சீமான்?’’

“ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டுவிட்ட அரசு நாட்காட்டியில், ‘சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு’ என்று இருக்கிறது. இதை தி.மு.க அரசு செய்யவில்லை. சீமான் ஆதரித்துவந்த கடந்தகால அ.தி.மு.க அரசுதான் செய்திருக்கிறது. சம்ஸ்கிருதப் புத்தாண்டைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாட முடியாது என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. ‘சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு’ என்ற சட்டத்தை மாற்றி, ‘தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு’ என விரைவிலேயே சட்டம் இயற்றும் தி.மு.க அரசு. இந்த அரசு நடைமுறைகள் பற்றியெல்லாம் என்னவென்றே தெரியாமல், வெறுமனே வாட்ஸ்அப் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு செய்திகளை அறிவிப்பார் சீமான் என்பதற்கு இதெல்லாம் சான்று.’’

“விசா ஏஜென்சி நடத்துகிறாரா சீமான்?"

“அரசு நடைமுறை தெரியாதவர் சீமான் என்கிறீர்கள். ஆனால், சீமான் கையெழுத்து போட்டுக்கொடுத்தால் கனடா போன்ற நாடுகளில் குடியுரிமை தருவதாக சீமானே சொல்கிறாரே?’’

“விசா ஏஜென்சி நடத்துகிறாரா சீமான்? அப்படி யாரேனும் ஒருவருக்குக் குடியுரிமை கிடைத்திருந்தால், அவரைக் கொண்டுவந்து நிறுத்துங்கள் பார்க்கலாம். அப்படி யாரேனும் ஒருவருக்கு சீமான் கொடுத்திருந்து, அந்தக் கடிதம் வெளியில் வந்தால், நம் நாட்டிலேயே ‘தேசிய பாதுகாப்புச் சட்ட’த்தின்படி சீமான் கைதுசெய்யப்படுவார். ‘தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவானவர்’ எனச் சொல்லி சீமானையே தன் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தது அமெரிக்கா. பின்பு பல நாடுகளில் சீமானுக்கே விசா மறுக்கப்பட்டது. இந்தியாவிலேயே சீமானுடைய பாஸ்போர்ட்டை ஒன்றிய அரசு முடக்கிவைத்திருக்கிறது. சொந்த நாட்டிலேயே பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள ஒருவர், மற்றொரு நாட்டின் குடியுரிமைக்குச் சிபாரிசு செய்ய முடியும் என்பது எவ்வளவு பெரிய பொய்... கோமாளித்தனம்!’’

“அண்மையில் ஒரு நேர்காணலில், ‘பிச்சை எடுத்துத்தான் வாழ்கிறேன்’ எனவும் சீமான் சொல்லியிருக்கிறாரே?’’

“அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். அதற்குள் நான் போக முடியாது. அதேசமயம், முழுக்க முழுக்கச் சட்ட விரோதமாகப் பணப் பரிமாற்றம் நடக்கிற, தனிப்பட்ட சீமானை வளர்க்கிற கட்சி அது. இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி, வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிற இந்தியக் குடியுரிமை பெற்றவர்களிடம் இருந்தும்கூட பணம் வாங்கக் கூடாது. ஆனால், நாம் தமிழர் கட்சி, வெளிநாடுகளில் இரண்டு, மூன்று நிதி நிறுவனங்கள் மூலமாகவே பணம் வாங்கிவந்து கட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவில், இது சட்டவிரோதச் செயல். இதன் மூலம்தான் சீமான் வாழ்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு