அரசியல்
அலசல்
Published:Updated:

அது பற்றியும் குஷ்பு கேள்வி எழுப்ப வேண்டும்... கண்ணாடியை பார்த்துப் பேசுகிறார் கஸ்தூரி...

 இராஜீவ் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி பொளேர்!

நடிகை குஷ்பு இழிவுபடுத்தப்பட்டது, அதற்கு நடிகை கஸ்தூரியின் எதிர்வினை, ஆளுநரின் விமர்சனம் என தி.மு.க-மீது தொடர்ந்து வெவ்வேறு தளங்களிலிருந்து தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க, இவை குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“ ‘பொதுவெளியில் கவனமாகப் பேசுங்கள்’ என்று முதல்வர் அறிவுரை சொல்லியும் சைதை சாதிக், குஷ்பு பற்றிப் பேசியதை அலட்சியத்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ளலாமா?”

“தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக் பேசியது தவறுதான். அதை தி.மு.க எந்தச் சூழலிலும் ஆதரிக்கவில்லை. அதனால்தான் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். எனவே, அலட்சியம் என எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்த ஒரு சந்தர்ப்பத்தை வைத்து மட்டும், `தி.மு.க பெண்களுக்கு எதிரான கட்சி’ எனக் கட்டமைக்க முயல்வதை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது. ‘யாரையும் கொச்சைப்படுத்தக் கூடாது, தனிநபர் தாக்குதல் கூடாது’ என்பதுதான் முதல்வர் எங்களுக்கு இட்டுள்ள உத்தரவு. எங்காவது ஒருசிலர், ஏதாவது ஒரு நேரத்தில் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுகிறார்கள். ஆனால், அது தவறு என உணர்ந்த அடுத்த நொடியே அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுவிடுகிறார்கள்.”

அது பற்றியும் குஷ்பு கேள்வி எழுப்ப வேண்டும்... கண்ணாடியை பார்த்துப் பேசுகிறார் கஸ்தூரி...

“ ‘மன்னிப்பை நான் ஏற்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் எனக்காகப் பேச வேண்டும்’ என குஷ்பு கேட்டிருக்கிறாரே?”

“முதல்வர் அது குறித்துப் பேச வேண்டும் எனக் குஷ்பு கேட்பது அவரது தார்மிக உரிமை. ஆனால், நயன்தாராவை இழிவுபடுத்தி, அவரது கட்சியின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியிருப்பது குறித்தும் குஷ்பு கண்டிக்க வேண்டுமில்லையா... தன் சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளிடமே கே.டி.ராகவன், பால.கணபதி உள்ளிட்டோர் கேவலமான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் வருந்தியதாகக்கூடத் தெரியவில்லை. குஷ்பு அது குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

“உங்கள் கட்சி நிர்வாகி தவறு செய்ததைப் பற்றிக் கேட்டால், `பா.ஜ.க-வினரைப் பாருங்கள்’ எனக் கேட்பது சரியா?”

“சைதை சாதிக், ‘தான் பேசியது தவறாகிவிட்டது’ என்பதை அந்த மேடையிலேயே உணர்ந்து, அவரே மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதனால்தான் அமைச்சர் மனோ தங்கராஜோ, மாவட்டச் செயலாளர் இளைய அருணாவோ சாதிக்கிடம், ‘நீங்கள் பேசியது தவறு’ எனச் சுட்டிக்காட்டவில்லை. ஒருவர், தான் செய்த தவறை உணர்ந்துவிட்ட பிறகு, அதை மேலும் மேலும் சொல்லிக்காட்டி, குத்திக்காட்டுவது சரியாக இருக்காது. ஆனால், பா.ஜ.க-வினர் அநாகரிகமாக நடந்துகொண்டு கூச்சம் சிறிதும் இன்றி பொதுவெளியில் சுற்றித் திரிகிறார்களே அதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.”

“ ‘வி.பி.துரைசாமியின் பூர்வீகம் தி.மு.க. அதனால் அப்படித்தான் பெண்களை இழிவாகப் பேசுவார்’ என கஸ்தூரி விமர்சனம் செய்திருக்கிறாரே?”

``குஷ்பு விவகாரத்தோடு ஒப்பிடும்போது கஸ்தூரியை மனிதராகக்கூட நான் மதிக்கவில்லை. அரசியலாக அவர் பயன்படுத்திய சொல்லாடல்களெல்லாம் கீழ்த்தரமானவை, அநாகரிகமானவை, பொதுவெளியில் பேசக் கூடாதவை. பேசிவிட்டு மன்னிப்புக் கேட்டுவிட்டு, மீண்டும் அதே தவறைச் செய்யும் நபரைக் குறித்துப் பேசவும் விரும்பவில்லை.”

“கஸ்தூரி மீது கோபமா அல்லது ‘திராவிடம்’ என்ற வார்த்தையை அவர் திரித்துப் பேசுவதால் வந்த வெறுப்பா?”

“கஸ்தூரியின் இயல்பை அந்த வார்த்தை வெளிக்காட்டுகிறது என்பதுதான் சரியாக இருக்கும். அந்த வார்த்தையை கஸ்தூரி கண்ணாடியைப் பார்த்துப் பேசிவிட்டார். உடனே நான் பெண்களை இழிவாகப் பேசிவிட்டேன் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. பெண், ஆண் என்பதைத் தாண்டி அவருக்குள் இருக்கும் உயர்சாதி மனப்பான் மையிலிருந்தே அப்படிப் பேசுகிறார். எவரையும் உதாசீனப்படுத்துவது, கீழ்மையாக நடத்துவது என ‘உயர்சாதி’ப் பெண் என்ற திமிரில் இருப்பவருக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?”

“எல்லாவற்றையும் சாதியில் வந்து கட்டுவது சரியா... இதைத்தானே கஸ்தூரியும் கேள்விக்கு உட்படுத்துகிறார்?”

“நான் குஷ்பு சாதிய மனப்பான்மையோடு இருக்கிறார் என எந்த இடத்திலும் பதில் சொல்லவில்லை. அவர் பேசியதிலிருக்கும் நியாயத்தையும் ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் குஷ்பு ஒரு கருத்தை, கருத்தாகப் பார்க்கிறார். கருத்தாலேயே எதிர்கொள்கிறார். ஆனால், கஸ்தூரியின் சொல்லும் செயலும் முழுக்க முழுக்க உயர்சாதி மனப்பான்மையில்தான் இருக்கின்றன. அந்தச் சமூகத்தைக் காப்பாற்றப் போராடும் ஒரு கட்சியின் சார்பாகவே எப்போதும் பேசுகிறார். தன்னுடைய இருப்பை, தன் சாதியைவைத்துத்தான் தக்கவைத்துக் கொள்கிறார். அப்படிச் சாதிப் பெருமிதம் பார்ப்பவரை அந்த வழியில்தானே எதிர்கொள்ள வேண்டும்?”

“தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின்மீது ஆளுநர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறாரே?”

“மேலே பேசிய பிரச்னைகளின் நீட்சியாகவே, ஆளுநரின் செயலையும் பார்க்கிறேன். அவரது தரம் அதுதான். ஆளுநர் பேசுவதெல்லாம் பொய்... பொய்... பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை. பா.ஜ.க-வில் இணைந்து செயலாற்றுவதற்குரிய அனைத்துத் தகுதிகளும் ஆளுநருக்கு இருக்கின்றன. பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவது அவரது எதிர்காலத்துக்கு நல்லது.”

“குஷ்பு, கஸ்தூரி, ஆளுநர் ஆகிய மூவருக்கும் உங்களின் பதில் என்ன?”

“புனிதமான நினைவிடத்திலும், பூஜை அறையிலும் வக்கிரத்தோடு நடந்துகொண்டவர்களையும் இதே காத்திரத்தோடு குஷ்பு கேள்வி கேட்க வேண்டும். சாதித் திமிரிலிருந்து கஸ்தூரி வெளியில் வர வேண்டும். தமிழ்நாடு ஆளுநருக்கு நான் வைக்கும் அன்பான வேண்டுகோள்: பதவியை ராஜினாமா செய்துவிட்டு கமலாலயத்திலேயே அடைக்கலமாகிவிடுங்கள் ஐயா!”