Published:Updated:

வாரிசு அரசியலை இப்போதும் எதிர்க்கிறேன்! - தி.மு.க-விலிருந்து இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
இராஜீவ் காந்தி

படங்கள்: டெக்கி அக்‌ஷிதா ஸ்ரீ

‘‘ஈழ விவகாரத்தில் துரோகமிழைத்த தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடியுங்கள்’’ என்று கடந்த பத்தாண்டுக் காலம் அரசியல் செய்துவந்த ‘நாம் தமிழர் கட்சி’யின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் இராஜீவ் காந்தி, இப்போது ‘‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’’ என்று வலம்வருகிறார். அண்மையில் தி.மு.க-வில் இணைந்திருக்கும் இராஜீவ் காந்தியைச் சந்தித்துப் பேசினோம்...

‘‘தி.மு.க-வுக்கு எதிராக இதுநாள் வரையில் நீங்கள் பேசிய பேச்சுகளையெல்லாம் இப்போது எப்படி மறுக்கப்போகிறீர்கள்?’’

‘‘நான் எதையுமே மறுக்கவில்லை. 2009 இனப்போரைப் பார்த்தபோது, அன்றைய ‘காங்கிரஸ் - தி.மு.க’ கூட்டணி அரசுமீது எனக்குள் கோபம் எழுந்தது உண்மைதான். கடந்துவிட்ட இந்தப் பத்தாண்டுகளில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை நிரூபிப்பதற்காக உலகெங்குமுள்ள தமிழர்களும் அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களால் எதுவுமே செய்ய இயலவில்லை. இந்தச் சூழலில், இனப்படுகொலை குறித்து தி.மு.க-வின் வழியே பேச முடியும்; உலக அரங்கின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் கட்சியில் இணைந்திருக்கிறேன்.’’

வாரிசு அரசியலை இப்போதும் எதிர்க்கிறேன்! - தி.மு.க-விலிருந்து இராஜீவ் காந்தி

‘‘ஆனால், ‘தம்பிகள் இனி அப்படித்தான் பேசுவார்கள். இராஜீவ் காந்தியும் கல்யாண சுந்தரமும் என்னுடைய ஸ்லீப்பர் செல்கள்’ என்றெல்லாம் சீமான் சொல்கிறாரே!’’

‘‘அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அண்ணன் சீமானை, `பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல்’ என்கிறார்கள். எனவே ‘ஸ்லீப்பர் செல்’ என்ற அவருடைய விமர்சனத்தையே விவாதத்துக்கு உட்படுத்துவோம். ஆரியத்துக்கு ஸ்லீப்பர் செல்லாக இருப்பதைவிடவும், திராவிடத்துக்கு ஸ்லீப்பர் செல்லாக இருப்பது ஆரோக்கியமானதுதான் என்பது தெளிவாகிவிடும்.’’

‘‘இதுவரை நீங்கள் குற்றம்சாட்டிவந்த காங்கிரஸ் கட்சிக்கும்கூட இப்போது வாக்கு சேகரிக்க வேண்டுமே?’’

‘‘அரசியலைப் பொறுத்தவரையில், ஆரியத்துவ சிந்தனையோடு ஒட்டுமொத்த நாட்டையுமே வர்ணாசிரமத்துக்குள் புகுத்துகிற வலிமைமிக்க பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்கு, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும். அதேசமயம், நான் ஒன்றும் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேரவில்லை. நான் சேர்ந்திருக்கிற தி.மு.க., காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது. அமைப்புக்குக் கட்டுப்பட்டவன் என்ற முறையில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டு நிச்சயம் பரப்புரை மேற்கொள்வேன். இது குறித்த தெளிவான புரிதல் எனக்கு இருக்கிறது.’’

‘‘ஆரியத்துவத்தை எதிர்ப்பதற்காக தி.மு.க-வில் இணைந்திருக்கிறீர்கள். இங்கேயும் ஸ்டாலின் வேல்தானே எடுத்துவருகிறார்?’’

‘‘பொதுவாக, கூட்டங்களில் தலைவர்களுக்கு வாள், தொப்பி, ருத்திராட்சம் போன்ற பொருள்கள் கொடுக்கப்படுவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், தி.மு.க மேடையொன்றில் மு.க.ஸ்டாலின் கையில் பரிசாக வேல் கொடுக்கப்படுகிறது; அதை ஒரு பண்பாட்டு அடையாளமாக ஸ்டாலினும் வாங்கிக்கொண்டார். இதில் எந்தத் தவறும் இல்லை. ஒருவரது நம்பிக்கையை மதிப்பதும், நம்பிக்கை சார்ந்த அவர்களது பண்பாட்டை ஏற்றுக்கொள்வதும்தான் மதச்சார்பற்ற கட்சிகளின் பண்பாடு. தி.மு.க அதைத்தான் செய்திருக்கிறது. மாறாக, ‘என் நம்பிக்கை - பண்பாடுதான் சிறந்தது’ என்று கூறி, பா.ஜ.க-வினர் வேல் யாத்திரை நடத்துவதும், நாம் தமிழர் கட்சியினர் வேல் வழிபாடு நடத்துவதும்தான் தவறானவை.’’

‘‘அண்மையில், தனது நெற்றியில் இடப்பட்ட திருநீற்றை மு.க.ஸ்டாலின் அழித்துக்கொண்டாரே... அது எந்தப் பண்பாடு?’’

‘‘திருநீறு வைக்க வேண்டாம் என்று அவர் தடுக்கவில்லையே! திருநீறு விஷயத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை. அதனால் அழித்தார். ஆனால், ‘எனக்கு எப்படி நீங்கள் திருநீறு வைக்கலாம்’ என்று அவர் யாரிடமும் சண்டைக்குப் போகவில்லையே! திருநீறு அணிந்துகொண்டே அவர் சென்றிருந்தால்தான், அது கேள்விக்குரியதாகியிருக்கும். ஏனெனில், மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, குறிப்பிட்ட ஒரு பண்பாட்டுச் சின்னத்தை அவர் அணிந்துகொண்டார் என்றால், அது மதச்சார்பற்ற தலைவருக்கான தகுதியாக இருக்காது.’’

‘‘ஈழ விவகாரத்தில் கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க மேடைகளில் மிகக் கடுமையாக விமர்சித்துவருகிறாரே கல்யாண சுந்தரம்?’’

‘‘2009-லிருந்து 2021-க்கு நான் வந்துவிட்டேன். ஆனால், நண்பர் கல்யாண சுந்தரம் இன்னும் 2009-லேயே நின்றுகொண்டு, தான் நம்புகிற கட்சிக்குக் கொள்கையைப் பரப்புகிறார். அது தனிப்பட்ட தலைவர்கள்மீதான அவதூறுகளாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். நண்பர் என்ற வகையில் அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். மற்றபடி, அரசியல்ரீதியாக அவர் எழுப்புகிற கேள்விகளுக்கு எப்போதும் தக்க பதில் சொல்ல நானும் தயாராகவே இருக்கிறேன்.’’

வாரிசு அரசியலை இப்போதும் எதிர்க்கிறேன்! - தி.மு.க-விலிருந்து இராஜீவ் காந்தி

‘‘நாம் தமிழர் கட்சியில், ‘சீமானிசத்தை’ எதிர்த்து வெளியேறிய நீங்கள், தி.மு.க-வின் வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்கிறீர்களா?’’

‘‘வாரிசு அரசியலை இப்போதும் எதிர்ப்பவன்தான் இராஜீவ் காந்தி. அதேசமயம், மு.க.ஸ்டாலின் மகன் என்பதாலேயே அரசியலுக்குள் உதயநிதி வரக் கூடாது என்று சொல்லக் கூடாது. ஏனெனில், மக்களுக்கான போராட்டக் களங்களில் நிற்கிறார்... வேலை செய்கிறார். ஆக, இவருக்குத் தகுதியிருக்கிறது என்று சொல்லித்தான் கட்சியே அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால், 2010-ல் நாம் தமிழர் என்ற கட்சியை ஆரம்பித்தபோது, ‘இங்கே யாரும் தலைவர் இல்லை. தத்துவம்தான் தலைவர். நாமெல்லாம் கூட்டுத் தலைமையாக இயங்குவோம்’ என்று சொல்லித்தான் கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இப்போது ‘தத்துவம் என்றாலே அது சீமான்தான்... அவர்தான் தலைவர்’ என்றெல்லாம் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’