அரசியல்
அலசல்
Published:Updated:

தெரியாமல் கேள்வி கேட்கிறார் வானதி... கற்பனையிலிருக்கிறார் அண்ணாமலை!

இராஜீவ் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
இராஜீவ் காந்தி

- விளாசும் இராஜீவ் காந்தி

சொத்து வரி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம், உதயநிதியை முன்னிலைப்படுத்துவது, எதிர்க்கட்சிகளுக்குச் சட்டமன்றத்தில் உரிய மரியாதை தருவதில்லை என தி.மு.க-மீது பாய்கின்றன விமர்சனக் கணைகள். தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினேன்...

“பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து விமர்சனம் செய்யும் தி.மு.க., சொத்து வரி, கல்லூரிக் கட்டணம், பால் பொருள்களின் விலை ஆகியவற்றை உயர்த்தியது மட்டும் சரியா?

“பால் பொருள்களின் விலை, கொள்முதல் விலையை உயர்த்தியதால் உயர்ந்தது. இதனால் விவசாயிகளுக்குத்தான் நன்மை ஏற்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டண உயர்வில் மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ‘சொத்து வரியை உயர்த்தாவிட்டால் நகர்ப்புற, உள்ளாட்சிகளுக்கு நிதியை விடுவிக்க முடியாது’ என்று மத்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது. அதையடுத்துத்தான் மற்ற வளர்ந்த நகரங்களை ஒப்பிட்டு, மக்களின் வாழ்வாதார அடிப்படையில் நான்காகப் பிரித்துச் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.”

“100 - 150 சதவிகிதம் அளவுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு சொன்னதா?”

“100 - 150 விழுக்காடு சொத்துவரி உயர்வு 20 விழுக்காடு மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான். மீதமிருக்கும் 80 விழுக்காடு மக்களுக்கு வெறும் 50 விழுக்காடு உயர்வுதான். நான் சமாளிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. இதனால், மக்களின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கப்படாது. அப்படி பாதிப்பு ஏற்படுமானால், உடனடியாக இந்த வரி உயர்வை முதல்வர் திரும்பப் பெறுவார்.”

“உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்த அமைச்சர்கள், தற்போது துணை முதல்வராக்க வேண்டும் எனப் பேசத் தொடங்கியிருக்கிறார்களே..?”

“கட்சியை ஓர் இளம் தலைவர் வழிநடத்த வேண்டும்; முதல்வரின் பணிச் சுமையை, அவரைப் புரிந்துகொண்ட, சரியான ஒரு நபர் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தி.மு.க தொண்டர்கள் நினைக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் நின்று உரிய அங்கீகாரம் பெற்ற... திராவிட அரசியலை, திராவிட மாடலைத் தெளிவாகப் புரிந்துகொண்டவரை அமைச்சராக்க வேண்டும், துணை முதல்வராக்க வேண்டும் என விரும்புகிறோம். இதில் என்ன தவறு?”

“இளம் தலைவர்கள் பலரும், முதல்வரை நன்கு புரிந்துகொண்ட சீனியர்கள் பலரும் இருக்கும்போது, உதயநிதியை மட்டும் முன்னிலைப்படுத்துவது ஏன்?”

“தி.மு.க-வில் சீனியர், ஜூனியர் என்ற பேதமெல்லாம் எப்போதும் இருந்ததில்லை. தி.மு.க-வை விரும்பாத, வெறுக்கும் சில சக்திகளால் இந்தப் பிரச்னை எழுப்பப்படுகிறது. தி.மு.க தொண்டர்கள்தான் ஒருமனதாக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை முன்னிலைப்படுத்துகிறார்கள்.”

“ ‘சட்டப்பேரவையில் பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு, அமைச்சர்கள் போதிய நேரம் கொடுப்பதில்லை’ என வானதி சீனிவாசன் புகார் வைக்கிறாரே?”

“இது வானதி சீனிவாசனின் கற்பனையையும் ஆரோக்கியமற்ற, இழிவான அரசியலையும் காட்டுகிறது. பேரிடர் காலத்தில், கோவையில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வில், கீழே அமர்ந்திருந்த வானதியை மேடைக்கு வரவைத்ததோடு பேசவும் வைத்தார் முதல்வர். இதை ஜூனியர் விகடன் இதழும், ஒட்டுமொத்தச் சமூகமும் பாராட்டியிருந்தன. முதல்வர் இருக்கும் அவையில் எல்லோருக்குமான வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும்.”

“நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் வானதி, ‘சட்டப்பேரவையில் நான் பேசிய வீடியோகூட எனக்குக் கொடுக்கப்படுவதில்லை’ என்கிறாரே?”

“சட்டப்பேரவை நிகழ்வு, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டுமானால், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் அந்த வீடியோவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படித் தன்னைப் பற்றி அற்பத்தனமாக விளம்பரப்படுத்திக்கொள்ளவா கோவை மக்கள் இவரைத் தேர்ந்தெடுத்தார்கள்... எந்தத் துறை மீதான விவாதம் நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் கேள்வி கேட்கிறார் வானதி. தனது இயலாமை, அறியாமை வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படிப் பேசுகிறார் வானதி. அறிவின்மை, அனுபவமின்மையின் விளைவு இது.”

தெரியாமல் கேள்வி கேட்கிறார் வானதி... கற்பனையிலிருக்கிறார் அண்ணாமலை!

“சென்னை அயோத்தியா மண்டபப் பிரச்னையில் தி.மு.க ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறதா?”

“பா.ஜ.க தமிழ்நாட்டில், மதரீதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தி சமூகப் பதற்றத்தை உண்டுபண்ணும் அரசியலைச் செய்கிறது. நீதிமன்றம் வரை சென்று சட்டப்படி அயோத்தியா மண்டபத்தை இந்துச் சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியிருக்கிறது. கோவையில் நீர்நிலைகளைத் தூர்வாரும்போது, நிலங்களை தி.மு.க ஆக்கிரமிப்பு செய்கிறது எனப் பொய் சொன்னவர்கள்தானே இவர்கள்... அதனால்தான், இந்தப் பொய், மத அரசியல்களை விட்டுவிட்டு ‘பா.ஜ.க மக்களுக்கான அரசியலைச் செய்ய வேண்டும்’ என முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.”

“பா.ஜ.க-வும் தமிழ்நாட்டின் சில பிரச்னைகளுக்காகப் போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறதே?”

“எது... போராட்டமா? (சிரிக்கிறார்). அதெல்லாம் பா.ஜ.க செய்த, செய்துவருகின்ற கபட நாடகங்கள். மோடியிடமோ ஒன்றிய அமைச்சர்களிடமோ வானதி, அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பா.ஜ.க-வினர், தமிழக மக்களுக்கான ஒரே ஒரு கோரிக்கையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள் என நிரூபிக்கட்டும். அவர்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.”

“தமிழ்நாட்டில் அடுத்து பா.ஜ.க ஆட்சிதான் என்கிறாரே அண்ணாமலை?”

“(சிரிக்கிறார்). நல்ல கற்பனை… அறிவு வளரும்போது, இந்தக் கற்பனைகளிலிருந்து பா.ஜ.க-வினர் வெளியில் வருவார்கள்!”

“ `தி.மு.க விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறது’ என்கிறதே பா.ஜ.க?”

“தனியாக இருக்கும் முதியவரிடம் தவறாக நடந்துகொண்ட ஒருவன், பெண்களைக் கேவலமாகப் பேசுகிற ஒருவன், மனநோயாளி என நீதிமன்றமே சொல்லும்படி பேசுகிறவன்... இவர்களெல்லாம்தான் விமர்சகர்களா? விளிம்புநிலையிலிருக்கும் பல்வேறு பிரிவினர் அரசின்மீது வைத்த எத்தனையோ விமர்சனங்களை ஏற்று, அதைச் சரிசெய்திருக்கிறோம். ஆனால், தி.மு.க-மீது வன்மம்கொண்டு பா.ஜ.க அவதூறு பரப்புகிறது. அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?”